சென்னை: ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கமும் சிறுநீர் கழித்தல் பிரச்சனையும் குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆண்களுக்கு அவர்களது நாற்பதுகளின் பிற்பகுதியில் இருந்து சிறுநீர்ப்பைக்கு வெளிப்புறம் சிறுநீர் செல்லும் பாதையான யூரித்ராவுக்கு வெளியே “ப்ராஸ்டேட்” எனும் சுரப்பி வீக்கம் காண ஆரம்பிக்கிறது.

ப்ராஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் சுரப்பு – விந்தணுக்களுக்கு ஊட்டம் அளிக்கும் விதத்தில் சத்துகளை கொண்டிருக்கும்.

நீரிழிவு நோயர்களுக்கு இத்தகைய ப்ராஸ்டேட் வீக்கம் சற்று சீக்கிரமே தொடங்கி விடுகிறது. அறுபது வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதாக உணர ஆரம்பிப்பார்கள்.

இரவு நேரம்: குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு முறை சிறுநீர் கழிக்கச் சென்றால் முழுவதுமாக சிறுநீரை வெளியேற்ற இயலாமல் கொஞ்சம் சிறுநீர் மிச்சம் இருக்கும் உணர்வு வரவே மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கும் இச்சை தோன்றி சிறுநீர் கழிக்கச் செல்வார்கள்.

ஒரு முறையில் கழிக்க வேண்டிய சிறுநீர் அளவை நான்கு முறை கழித்தால் தான் வெளியேறும். சிறுநீர்ப் பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் இந்த ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் தான் இதற்கு காரணமாக அமைகிறது.

சிறுநீர் பாதை: சிலருக்கு இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று கூட ஏற்படக்கூடும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது குறைவான அளவில் குறைவான அழுத்த விசையில் சிறுநீர் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் இருப்பின் மருத்துவர் அறிவுரையின் பேரில் ஒரு வயிற்றுப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதி ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

அதில் ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கியிருப்பது தெரியவரும். கூடவே சிறுநீர் கழிக்கச் செய்து விட்டு மருத்துவர் சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீரின் அளவை ஸ்கேன் செய்வார்.

வீக்கம் அளவு என்ன: இந்த POST MICTURITION RESIDUAL URINE அளவு அதிகமாக இருப்பின் அது ப்ராஸ்டேட் வீக்கத்தின் அளவையும் சிறுநீர்ப் பாதையின் விட்டத்தை எவ்வளவு அடைக்கிறது என்பதையும் கூறும்.

இந்த நோயை BENIGN PROSTATE HYPERPLASIA ( ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம்) என்று அழைக்கிறோம். ஆண்களைப் பொருத்தவரை ப்ராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கியமான மற்றொரு விசயம் ப்ராஸ்டேட் கேன்சர் ஆகும்,

எனவே ப்ராஸ்டேட் வீக்கமாக இருக்கும் நபர்களுக்கு ப்ராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆண்டிஜென் ( serum PSA – Prostate specific Antigen) எனும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும்.

அழுத்த விசை: இந்த ஆண்டிஜென் ப்ராஸ்டேட் புற்று நோயில் அளவில் அதிகமாக அறியப்படும். இத்துடன் யூரோ ஃப்ளோமெட்ரி எனும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் வெளியேறும் அழுத்த விசை மற்றும் அளவு போன்றவற்றை வைத்து ப்ராஸ்டேட் அடைப்பின் தீவிரத்தை உணர முடியும்.

சாதாரண நிலையில் உள்ள ப்ராஸ்டேட் வீக்கத்துக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் மொத்த அளவைக் குறைக்கும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.

பெரிய அளவில் வீக்கம் இருக்குமாயின் / கூடவே புற்று நோய் காரணி அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ஆண்குறி வழியாக ஸ்கோப் எனும் நுண் இளகிய குழாயைச் செலுத்தி ப்ராஸ்டேட் சுரப்பியின் அளவைக் குறைக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது.

தழும்பு இல்லை: இந்த சிகிச்சையை டர்ப் ( TURP – TRANSURETHRAL RESECTION OF PROSTATE) என்று அழைக்கிறோம் .

இதன் விரிவாக்கம் யுரித்ரா வழியாக ப்ராஸ்டேட்டின் அளவைக் குறைத்து அடைப்பை நீக்கும் சிகிச்சை என்று பொருள்.

இந்த சிகிச்சைக்கு வெளிப்புற காயமோ தையலோ தழும்போ இருப்பதில்லை. உங்களின் குடும்ப உறுப்பினரில் மத்திய வயதைத் தாண்டிய ஆண்களுக்கு சிறுநீர் கழித்தல் சிக்கல் இருப்பின் ப்ராஸ்டேட் குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும். ப்ராஸ்டேட் புற்றுநோய் தான் உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் நம்பர் ஒன் புற்று நோய் என்பதால் வயது முதிர்ந்த ஆண்களில் ( குறிப்பாக 60 வயதுக்கு மேல்) இந்த ப்ராஸ்டேட் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும். தாமதம் கூடாது. இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply