உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் காவல்துறை கண்ணெதிரே முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவும், அவரது சகோதரரும் செய்தியாளர் சந்திப்பிலேயே 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ பால் கொலை வழக்கில் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரஃபும் பரிசோதனைக்காக நேற்றிரவு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்காக சபர்பதி சிறையில் இருந்து இருவரும் பிரயாக் ராஜ் நகருக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமையன்று அதிக் அகமதுவின் மகன் ஆசாத் அஹமதுவும், அவருடன் இருந்த குலாம் முகமதுவும் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவால் ஜான்சி நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு அதிக் அகமதுவும், அவரது சகோதரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை நேரில் பார்த்தது யார்? அதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது?

அதிக் அகமது கொலைக்கு சற்று முன்பாக என்ன நடந்தது?

பிரயாக் ராஜ் நகரில் உள்ள மோதிலால் நேரு டிவிஷனல் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அதிக் அகமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரபையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

தாக்குதல் சம்பவத்திற்கு சற்று முன்பாக, மருத்துவமனைக்கு வெளியே காவல்துறை ஜீப் வந்து நின்றது. ஜீப்பின் முன்புறம் இருந்தும், பின்னிருக்கைகளில் இருந்து சில காவலர்கள் கீழே இறங்கினர்.

முதலில் ஜீப்பில் இருந்து அஷ்ரப் வெளியே வந்தார். அதன் பிறகு, காவலர்களின் உதவியுடன் அதிக் அகமது வெளியே வந்தார்.

அஷ்ரப் கருப்பு நிற டி-சர்ட்டும், பேன்ட்டும் அணிந்திருந்தார். அதிக் அகமது வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார்.

அதிக் அகமது பேச்சை முடிக்கும் முன்பே…

காவல்துறை ஜீப்பில் இருந்து அதிக் அமகதுவும், அஷ்ரபும் கீழே இறங்கிய 10 விநாடிகளிலேயே அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

மருத்துவமனைக்கு முன்பு சுமார் 10-15 மீட்டர் தொலைவில் இருவரும் வெளியே தெரியும் வகையில் நின்றிருந்தனர். அவர்களை நோக்கி செய்தியாளர்கள் பலரும், “நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அஷ்ரப், “என்ன சொல்வது? எதைப் பற்றி என்ன சொல்வது?” என்று வினவினார்.

போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட அதிக் அகமதுவின் மகன் ஆசாத் அஹமது இறுதிச்சடங்கு நேற்று நடந்ததைக் குறிப்பிட்டு, “நீங்கள் இறுதிச்சடங்கிற்கு செல்லவில்லை. அதைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் அதை பொருட்படுத்தவில்லை என்றால் நீங்கள் செல்ல வேண்டாம்” என்று அதிக் அகமது கூறினார்.

அதிக் அகமதுவைத் தொடர்ந்து அவரது சகோதரர் அஷ்ரப், “முக்கியமான விஷயம் என்னவென்றால் குட்டு முஸ்லிம்…” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அதிக் அகமதுவின் நெற்றியை துப்பாக்கிக் குண்டு ஒன்று துளைத்துவிட்டது.

அதன் பிறகு, அதிக் அகமதுவையும், அவரது சகோதரர் அஷ்ரபையும் குறிவைத்து அந்த நபர்கள் துப்பாக்கியால் பல முறை சரமாரியாக சுட்டனர். இருவரும் அந்த இடத்திலேயே கீழே சரிந்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மற்றொரு வீடியோவில், சகோதரர்கள் இருவரும் கைவிலங்குடன் கேமராவைப் பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வீடியோவில், அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள். தாக்குதல் நடத்திய நபர் நீல நிற ஜீன்சும், சட்டையும், வெள்ளை நிற ஷூவும் அணிந்திருந்தார்.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் சகோதரர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுகின்றனர்.

மற்றொரு வீடியோவில், தாக்குதல் நடத்திய நபர்கள் போலீசாரிடம் சரணடைவதைக் காண முடிகிறது. அந்த வீடியோவில், ஜீன்சும், கட்டம் போட்ட சட்டையும் அணிந்த நபர் கைகளை உயர்த்தி போலீசாரிடம் சரணடைகிறார்.

அதிக், அஷ்ரப் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் இருந்து அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் சேகரித்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தாக்குதல் நடத்திய 3 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரயாக் ராஜ் நகர காவல்துறை கூறியது என்ன?

காவல்துறை கஸ்டடியில் இருந்த போதே, செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் அதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரபும் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரயாக் ராஜ் காவல் ஆணையர் ரமித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

“கட்டாய மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதல் கட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்படி, தாக்குதல் நடத்திய 3 பேரும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விட்டனர். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிடிபட்டவர்களிடம் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதிக் அகமது, அஷ்ரப் ஆகிய இருவரும் தாக்கப்பட்ட போது, அங்கேயிருந்த காவலர் ஒருவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தார்” என்பது அவரது விளக்கம்.

அதிக் அகமது, அஷ்ரப் ஆகிய இருவர் மரணத்தையும், தாக்குதல் நடத்திய நபர்கள் பிடிபட்டதையும் அவர் உறுதி செய்துவிட்டார்.

“தாக்குதல் நடத்திய 3 பேரும் பிடிபட்டுள்ளனர். நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அதிக், அஷ்ரப் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் லக்னோ செய்தியாளர் காயமடைந்துவிட்டார். காவலர் மான்சிங்கிற்கு குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு காவல் ஆணையர் ரமித் சர்மா பதிலளிக்க மறுத்துவிட்டார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டுமே அவர் கூறினார்.
தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகள் என்ன சொல்கிறார்கள்?

இந்த தாக்குதலை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்த அதிக் அகமதுவின் வழக்கறிஞரான விஜய் மிஸ்ரா அதுகுறித்து விவரிக்கிறார்.

“அவரை ஜீப்பில் இருந்து வெளியே வரவழைத்து, மருத்துவப் பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். மருத்துவமனை வாசலை நோக்கி அவர் இரண்டடி எடுத்து வைத்த போது அங்கே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. எனக்கு அருகே நின்றிருந்த எம்.எல்.ஏ. முதலில் சுடப்பட்டார். பின்னர் (முன்னாள்) எம்.பி. சுடப்பட்டார். அவர்கள் இருவரும் கீழே விழுந்த பிறகு அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது” என்று அவர் கூறினார்.

தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா

அவர்களைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சிக்கவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “துப்பாக்கியால் சுட்ட அனைவரையும் உடனே காவல்துறையினர் பிடித்துவிட்டார்கள்” என்று அவர் கூறினார்.

பதிலுக்கு தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்ற கேள்விக்கு, “இல்லை. அங்கே கூட்ட நெரிசலாக இருந்ததால் தாக்குதல் நடத்தியவர்களை பார்க்க முடியவில்லை” என்று விஜய் மிஸ்ரா பதில் அளித்தார்.

Share.
Leave A Reply