சென்னை: பிறந்து வெறும் 29 நாட்களே ஆன பெண் குழந்தையைப் பெற்ற தாயே துடிக்கத் துடிக்க கொடூரமாகக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த நாடோடி பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் குமரேசன்.. 32 வயதான இவர், சென்னை மற்றும் புதுச்சேரிப் பகுதியில் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

குமரேசனுக்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஏற்கனவே திருமணமான சங்கீதா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார்.

பெண் குழந்தை: சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமான நிலையில், குமரேசன் அவரை சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.

அங்கே அமைந்துள்ள சமுதாயக் கூடத்திற்கு அருகே உள்ள காலி இடத்தில் அவர்கள் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து புதுக்குப்பம் குளக்கரை அருகேயும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் சங்கீதாவுக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதனிடையே நேற்றிரவு குளக்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையுடன் தூங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் காலையில் குழந்தை காணாமல் போனதால் குமரேசன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.

இதனிடையே புதுக்குப்பம் கடற்கரையில் ஒரு குழந்தையின் கால் மட்டும் மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் இது குறித்து போலீசாருக்கு தவல் தெரிவித்தனர்.

சடலம்: உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருமாம்பாக்கம் போலீஸ், அந்த குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

குழந்தை ஒன்றின் சடலம் கிடைத்திருப்பதாக வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமரேசன் சங்கீதா தம்பதி அங்கே வந்துள்ளனர்.

புதைக்கப்பட்டிருந்த குழந்தை தங்கள் குழந்தைதான் என்பது தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், குழந்தையைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர். குழந்தை உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதனிடையே பெற்றோரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். அப்போது குமரேசன், நேற்றிரவு தான் குழந்தையைக் கவனித்து கொண்டிருந்ததாகவும் குழந்தையோடு தானும் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் அவர்கள் கூறிய பதிலில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி வாக்குமூலம்: அப்போது தான் சங்கீதா தனது குழந்தையை உயிருடன் புதைத்தாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

அதாவது நேற்றிரவு கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த கணவன், மனைவியை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும், இந்த குழந்தை யாருடையது என்றெல்லாம் கேட்டுள்ளார். இதனால் சங்கீதா விரக்தியடைந்துள்ளார்.

கணவரின் பேச்சால் மிகுந்த மனவேதனை அடைந்த சங்கீதா, பிறந்து 29 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்படியே உயிருடன் மணலில் போட்டு புதைத்ததை ஒப்புக் கொண்டார்.

இதைக் கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் திகைத்துவிட்டனர். இதையடுத்து சங்கீதாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 29 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையைப் பெற்ற தாயே உயிருடன் புதைத்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply