சூடான் தலைநகர் கார்ட்டூமிலும் Khartoum, நாட்டின் பிற இடங்களிலும் வெடித்துள்ள மோதல்கள், நாட்டின் இராணுவத் தலைமைக்குள் ஒரு மோசமான அதிகாரப் போட்டியின் நேரடி விளைவாகும்.
மரபு ரீதியான இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகள் (RSF- Rapid Support Forces) எனப்படும் துணை இராணுவப் படைக்கும் இடையே மோதல்கள் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வருகின்றன.
சூடான் வடகிழக்கு ஆபிரிக்காவில் உள்ள 1.9 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கண்டத்தின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் சூடான் விளங்குகிறது. 46 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள சூடானின் மக்கள் தொகை பெரும்பாலும் முஸ்லிம்கள் ஆகும். மற்றும் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு மற்றும் ஆங்கிலம் விளங்குகிறது.
சூடானில் 2021 இல் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இரண்டு இராணுவ அதிகாரிகளின் தலைமையில் ஜெனரல்கள் குழுவால் ஆட்சி நடத்தப்படுகிறது.
ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் (General Abdel Fattah al-Burhan) , ஆயுதப் படைகளின் தலைவராகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் விளங்குகிறார்.
அதேவேளை ஜெனரல் மொஹமட் ஹம்டன் டகாலோ(Mohamed Hamdan Dagalo) துணை இராணுவப் படையின் தலைவராக விளங்குகிறார்.
RSF இன் தலைவரான ஜெனரல் மொஹமட் ஹம்டன் டகாலோ, ஹெமெட்டி என்று நன்கு அறியப்பட்டவர்.
இவர் நாடு தற்போது செல்லும் நிலை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் 100,000 வலிமையான RSF எனப்படும் துணை படையை இராணுவத்தில் சேர்க்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் புதிய படையை வழி நடத்துவது யார் ? என்பது தொடர்பில் முக்கிய பிரச்சினை அங்கு உருவெடுத்துள்ளது .
ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் ஜெனரல் மொஹமட் ஹம்டன் டகாலோ
சூடானில் ஏன் சண்டை இப்போது தொடங்கியது?
கடந்த வாரம் RSF உறுப்பினர்கள் நாடு முழுவதும் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டதால் பதற்றம் நீடித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சுமுகமாக தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது ஆனால் அது நடக்கவில்லை.
இதனால் கடந்த சனிக்கிழமை காலை முதல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதுடன் பதற்றம் நீடித்தது.
சூடான் வைத்தியர்கள் சங்கத்தின் படி, முதல் நாள் மோதல்களில் சுமார் 100 பொதுமக்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் தீவிரமடைந்தன.
பொதுமக்கள் ஏன் சிக்கிக் கொண்டனர்?
முக்கிய கேந்திர நிலைகளைச் சூழ மோதல் நீடித்ததால் பொதுமக்கள் தங்களை அறியாமலேயே பலியாகியுள்ளனர்.
குறிப்பாக RSF தளங்கள் எங்கு உள்ளன என்பது சரியாகத் தெரியாத போதிலும் அவர்களின் போராளிகள் மக்கள் அடர்த்தியான பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தலைநகர் கார்ட்டூமில் சூடான் விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது அதிகளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
விரைவு ஆதரவுப் படைகள் என்றால் என்ன?
துணை இராணுவமான RSF 2013 இல் உருவாக்கப்பட்டது. மேலும் டார்பூரில் RSF கொடூரமாக போரில் ஈடுபட்ட போது இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் , யேமன் மற்றும் லிபியாவில் மோதல்களில் ஈடுபட்ட சமயம் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை ஜெனரல் டகாலோ உருவாக்கியதுடன் சூடானின் சில தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பொருளாதார நலன்களையும் அவர் வளர்த்துள்ளார்.
அதேவேளை ஜூன் 2019 இல் 120 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்தது உட்பட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக RSF மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் இராணுவத்திற்கு வெளியில் இத்தகைய பலம் வாய்ந்த படையொன்று செயல்படுவது நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை தோற்றுவிக்கும் காரணியாக காணப்படுவதாகவும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன.
யார் இந்த ஜெனரல் டகாலோ?
2019 இல் நீண்டகாலமாக பதவியில் இருந்த ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் சமீபத்திய அத்தியாயமாக வே இந்த சண்டையைப் பார்க்க வேண்டும் .
அவரது சுமார் மூன்று தசாப்த கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வீதிப் போராட்டங்கள் நடந்தன.
மேலும் அவரை அகற்ற இராணுவம் ஒரு சதித்திட்டத்தை நடத்தியது. எனினும் மக்கள் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கூட்டு இராணுவ-சிவில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அது 2021 அக்டோபரில் ஜெனரல் புர்ஹாம் பொறுப்பேற்றபோது மற்றொரு சதியில் தூக்கியெறியப்பட்டது.
அதிலிருந்து அவருக்கும் ஜெனரல் டகாலோவுக்கும் இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. கடந்த டிசம்பரில் பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் விவரங்களை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இரு தரப்புக்கும் என்ன வேண்டும்?
2021 ஆட்சிக் கவிழ்ப்பு ஒரு தவறு என்றும், கார்ட்டூம் உயர்தட்டு மக்களுக்கு எதிராக,தன்னையும் ஆர்எஸ்எஃப்-ஐயும் காட்ட முயன்றதாகவும் ஜெனரல் டகாலோ குற்றம் சாட்டியுள்ளார்.
அவருக்கு மக்கள் சிலரின் ஆதரவு இருந்தாலும், துணை இராணுவப் படையின் மிருகத்தனமான வரலாற்றைக் கருத்தில் கொண்டு அவரது கூற்றை ஏனைய மக்கள் நம்புவது கடினமாகும்.
இதற்கிடையில், அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் மட்டுமே இராணுவம் முழுமையாக அதிகாரத்தை ஒப்படைக்கும் என்று ஜெனரல் புர்ஹான் கூறியுள்ளார்.
அதேவேளை அதிகாரப் பரவலாக்களில் மக்கள் பிரதிநிதிகள் இணைவதை அவர் ஓரம் காட்டுகிறார் .
இந்நிலையில், இராணுவ வீரர்களும், அவர்களது ஆதரவாளர்களும், தாங்கள் அதிகாரப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டால், தங்களின் செல்வம் மற்றும் செல்வாக்கு என்னவாகும் என்ற கவலையில் உள்ளனர். பொதுவாக மக்களோ இந்த இரு இராணுவ ஜெனர்களையும் சந்தேக கண்கொண்டே பார்க்கின்றனர்.
இந்நிலையில் மோதல் உக்கிரமடைந்ததால் நாடு மேலும் துண்டாடப்படலாம், அரசியல் கொந்தளிப்பை மோசமாக்கலாம் மற்றும் அயல் மாநிலங்களும் இழுக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
இதனிடையே ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வலியுறுத்தம் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இராஜதந்திரிகள், இரண்டு ஜெனரல்களையும் பேசுவார்த்தைக்கு அழைக்கும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
இதேவேளை கென்யா, தெற்கு சூடான் மற்றும் ஜிபூட்டியில் இருந்து – கார்ட்டூமுக்கு மூன்று ஜனாதிபதிகளை அனுப்ப பிராந்திய கூட்டமைப்பு ஒப்புக்கொண்டது.
ஆனால் நாட்டிற்குள் அல்லது வெளியே எந்த விமானமும் பறக்காததால் அவர்களால் பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரி வருகின்றன .
இந்தப் பின்னணியில் துணை இராணுவக் குழுவிற்கும் நாட்டின் இராணுவத்திற்கும் இடையில் பல மாதங்களாக நிலவிய பதற்றம்.வன்முறையாக வெடித்த நிலையில் சூடான் முழுவதும் கடுமையான மோதல்கள் ஐந்தாவது நாளாக (புதன்) தொடர்கிறது. அதேவேளை 24 மணி நேர போர் நிறுத்தமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கார்ட்டூமில் உள்ள இராணுவ தலைமையகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடந்த மோதல்களில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு நகரமான போர்ட் சூடான் மற்றும் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் மோதல்கள் நீடிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
சூடான் “வைத்தியசாலைக்கு அருகாமையில் மோதல்கள் நடைபெறுவதாலும், இராணுவத்தைச் சேர்ந்த ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதங்களுடன் வைத்தியசாலைக்குள் சுற்றித் திரிவதாலும் தாங்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேற முடியவில்லை” என்று கார்ட்டூமில் உள்ள ஒரு பெண் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
“குண்டு வெடிப்புகள் மற்றும் தோட்டாக்களின் சத்தங்களுடன் நாங்கள் பெரும் பயங்கரமான நிலையில் இருக்கிறோம், நாங்கள் பல முறை மரணத்திலிருந்து தப்பித்தோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார் .
சூடானின் துணை இராணுவத் தலைவர் மொஹமட் ஹம்டன் டகாலோ, சனிக்கிழமையன்று தனது ஆயுதக் குழுவிற்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் வெடித்ததை அடுத்து, கார்ட்டூமின் அதிகாரப்பூர்வ தளங்களில் பெரும்பாலானவற்றை கைப்பற்றியதாகக் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை,டகாலோவின் படைகள் (RSF) Meroe வை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டது.
நாட்டின் வடக்கில் விமான நிலையம். ஜனாதிபதி மாளிகை, கார்டூம் விமான நிலையம் மற்றும் ஜெனரல் கமாண்ட் தலைமையகம் ஆகியவற்றை ஆர்எஸ்எஃப் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டகாலோ கூறியுள்ளார்.
நாட்டின் இராணுவத் தலைவர், ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், சனிக்கிழமையன்று டகாலோவின் கூற்றுக்களை மறுத்தார் மற்றும் இராணுவம் அரசாங்க தளங்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கிறது என்றார்.
கார்ட்டூம் மற்றும் சூடானின் பிற பகுதிகளிலும் சண்டைகள் தொடர்வதால், உலக சுகாதார அமைப்பு, மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும், சுகாதாரப் பாதுகாப்பின் நடுநிலைமையை மதித்து, போரில் காயமடைந்தவர்களுக்கு சுகாதார வசதிகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
இதுவரை 200 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 1,800 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். தலைநகர் கார்ட்டூம், தெற்கு கோர்டோஃபான், வடக்கு டார்பூர், வடக்கு மாநிலம் மற்றும் பிற பகுதிகள் முழுவதும்,” “கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் சிறப்பு மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
“தண்ணீர் மற்றும் மின்சாரமின்மை சுகாதார வசதிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது என்றும் வைத்தியசாலை ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவததாகவும் தெரிவிக்கப்படுகிறது.”
சூடானின் தலைநகரில் பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூடு மழை பெய்ததால், கார்டூம் பல்கலைக்கழக மாணவர்கள் வளாக கட்டிடங்களுக்குள் சிக்கிக் கொண்டனர்.
“நமது நாடு ஒரே இரவில் போர்க்களமாக மாறும் என்று எண்ணவில்லை. நினைக்கவே பயமாக இருக்கிறது,” என்று 23 வயதான அல்-முசாஃபர் ஃபரூக் கூறியுள்ளார்.
சம்பவத்தினமான கடந்த சனிக்கிழமை 89 மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் பல்கலைக்கழக நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்திருந்தனர்.
வெளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காலித் அப்துல்முனிம் என்ற மாணவர் ஏற்கனவே கொல்லப்பட்டார்.
அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து நூலகத்திற்கு ஓட முயன்றபோது அவர் தாக்கப்பட்டார் என்று ஃபரூக் கூறினார்.
ஃபேஸ்புக் பதிவில் அப்துல்முன்மின் மரணத்தை பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியது. வளாகத்தின் சுற்றுப்புறங்களில் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானின் மோதல்களில் வைத்தியசாலை ஷெல் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சூடானின் இராணுவத் தலைவரான அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் ஆதரவுப் படைகளின் (RSF) தலைவரான ஹெமெட்டி என்று அழைக்கப்படும் மொஹமட் ஹம்டன் டகாலோ ஆகியோருக்கு இடையே அதிகாரத்திற்கான மோதலால் வன்முறை சூடான் சிதைக்கப்பட்டது வருகிறது.
கார்ட்டூமிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஜெர்மைன் முவேஹு கூறுகையில் “நான் தங்கியிருக்கும் கட்டிடத்தில், குழந்தைகளுடன் கூடிய குடும்பங்கள் உள்ளன.
வான்வழித் தாக்குதல்கள் நடக்கும் போது குழந்தைகள் அழுவதையும், குழந்தைகள் திகிலடைவதையும் கண்டேன்.
வெளியே கடுமையான சண்டையின் காரணமாக மக்களுக்கு உணவு மற்றும் மருந்து கிடைக்கவில்லை.
கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் கார்ட்டூமில் உள்ள வைத்தியசாலை மீது ஆர்எஸ்எஃப் ஷெல் வீசி தாக்கியதில் மகப்பேறு வார்ட் சேதமடைந்ததால் 6 வயது குழந்தை ஒன்று திங்களன்று இறந்தது.
வைத்தியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் நோயாளிகள் பின் தங்கினர் – சிலர் இன்குபேட்டர்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளை விட்டு சென்றனர் என்றார்.
சூடானின் வைத்தியர்கள் தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, போர் காரணமாக இரு தரப்பினராலும் குறைந்தது ஆறு வைத்தியசாலைகள் தாக்கப்பட்டுள்ளன.
இராஜதந்திரிகள் மற்றும் மனிதாபிமான பணியாளர்கள் கூட குறி வைக்கப்பட்டுள்ளனர். திங்களன்று அமெரிக்க இராஜதந்திர வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தினார்.
அவர் கூறுகையில் “நேற்று,எங்கள் வாகன தொடரணி மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. எங்கள் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது மற்றும் நிச்சயமாக பாதுகாப்பற்றது” என்றார்.
சூடானுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் திங்களன்று அவரது வதிவிடத்தில் வைத்து தாக்கப்பட்டதாகவும் அவர் இப்போது நன்றாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூன்று தொழிலாளர்கள் டார்ஃபரின் மேற்குப் பகுதியில் வைத்து கொல்லப்பட்டனர். இதனால் WFP நாட்டிலுள்ள அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதேவேளை இரண்டு போட்டி பிரிவுகளும் ஒன்றையொன்று விரல்களை சுட்டிக்காட்டுவதையே தொழிலாக கொண்டுள்ளன.
குடியிருப்புப் பகுதிகள் மீது இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், கார்ட்டூமில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் தலைமையகத்தைத் தாக்கியதாகவும் RSF குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், துணைப்படையே தூதரின் வசிப்பிடத்தை குறிவைத்ததாகவும், டார்பூரில் உள்ள WFP இன் தலைமையகத்தை தாக்கியதாகவும் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ஐ .நா . உட்பட மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆர்.பி.என்