ந்திய பெருங்கடல் பிராந்திய இராஜதந்திர மோதல்களில் இலங்கையும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வது வழமையானதாகியுள்ளது.

இதனை வழமை என்பதை விட இலங்கையின் புவியியல் அமைவு, ஆழமான துறைமுக கட்டமைப்புகள் எனலாம்.

இரண்டாம் உலக யுத்தம் வரை இந்திய பெருங்கடலில் தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கிய ஒரு தீவு நாடாகவே இலங்கை திகழ்கிறது.

எனவே, இந்த புவியியல் அமைவும் பிராந்தியத்தில் காணப்படக்கூடிய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டிகளும் இலங்கைக்கு நெருக்கடிகளை எப்போதும் கொடுப்பதாகவே அமைகிறது.

குறிப்பாக, சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே இலங்கையுடன் நெருக்கமான நட்புறவை கொண்டுள்ள நாடுகளாகும்.

ஆனால், அந்த நாடுகளுக்கு இடையில் காணப்படக்கூடிய போட்டி நிலைகள் எப்போதும் இலங்கையை நெருக்குதல்களுக்கு தள்ளிவிடுகின்றன.

இந்த நிலைமையானது, மூன்று தசாப்த கால இலங்கையின் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை.

ஆனால், போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை வலுவாக உணர்த்தியுள்ளது.

வணிகத்துக்கு மாத்திரமன்றி பாதுகாப்பு நலன்களிலும் இலங்கையின் புவிசார் அமைவு முக்கியம் பெறுகின்றமை மற்றுமொரு காரணமாகும்.

எனவேதான் அமெரிக்கா, சீனா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் வணிக உறவுகளை விட அண்மைக்காலமாக பாதுகாப்பு துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, திருகோணமலை துறைமுகம் உட்பட இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில் செல்வாக்கினை அதிகரித்துக்கொள்ள இந்த நாடுகள் அதீத ஆர்வத்தையும் அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்றன.

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் இலங்கையின் நலன்களை விட சீனாவின் நோக்கம் வெற்றியளித்துவிட்டது.

அமெரிக்கா நீண்ட காலமாக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து இலங்கையுடன் கலந்துரையாடி வருகின்றது.

ஆனால், அவை இன்னும் இறுதிப்படுத்தவோ பேச்சுவார்த்தைகளை தொடரவோ முடியாதுள்ளது.

மறுபுறம் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் உயர்மட்ட குழு அண்மையில் இலங்கையுடன் முக்கிய மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதாவது, அதி நவீன தகவல் பரிமாற்ற கட்டமைப்பை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபித்தல்,  இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்ற கேபிள் இணைப்புகளுக்கு பதிலாக புதிய இணைப்பு கட்டமைப்பு வழங்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டமைப்பை  உருவாக்குதல் போன்ற திட்டங்களையே அமெரிக்க மத்திய உளவுத்துறையின் பிரதிநிதிகள் இலங்கையிடம் முன்மொழிந்துள்ளனர்.

ஆனால், இவை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இருதரப்புமே பகிரங்கப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது சீனா இலங்கையில் ராடார் தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கிலேயே இலங்கையில் ராடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக டெல்லி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட ராடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதேவேளை, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பிடும் என்று ‘எகனமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலங்கையின் விரிகுடா காடுகளில் இந்த திட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

முன்மொழியப்பட்ட ராடார் கட்டமைப்பு, 1700 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல் கடந்த பிரதேசங்கள் மற்றும் இந்திய பெருங்கடல் பிரதேசத்தின் தீவான டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் நகர்வுகளையும் கண்காணிக்கும் திறனையும் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை இலங்கைக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

இந்தியா – சீனா என்ற இரு நட்பு நாடுகளையும் ஒரு கோட்டில் வைத்து பார்ப்பதற்கான சூழல் இலங்கைக்கு எப்போதுமே இருந்ததில்லை.

இதற்கு பிரதான காரணம், சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள அதீத கடன் மற்றும் அந்த இரு நாடுகளுக்கும் இடையே இலங்கையை மையப்படுத்தியும் பிராந்தியத்திலும் எல்லைகளிலும் உள்ள பிரச்சினைகளாகும்.

சீனாவின் ராடார் கட்டமைப்புக்கு இலங்கை ஒப்புதல் அளித்தால் அது இலங்கை – இந்திய உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.

உதாரணமாக, இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சீனாவின் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கியதையடுத்து, சீனா கடந்த ஆண்டு யுவான் வாங் 5 என்ற கண்காணிப்புக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தியது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் தளபாடப் பொருட்களுக்காக ஆறு நாட்கள் இருக்கவும் இலங்கை அனுமதித்தது.

இது இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியது. அதன் தாக்கம் இன்றளவிலும் குறையவில்லை என்பதே உண்மையாகும்.

மறுபுறம் குறித்த ராடார் கட்டமைப்பை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான உண்மையான நோக்கம் குறித்து இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே, இலங்கை மீண்டும் இந்திய – சீன மோதல்களுக்குள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

 

Share.
Leave A Reply