இலங்கையில் இருந்து பறந்து இந்திய மீனவர் படகில் தஞ்சமடைந்த புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர்; உளவு பார்க்க வந்ததாக சந்தேகம்
இலங்கையில் இருந்து பறக்கவிடப்பட்ட புறா ஒன்று தமிழக மீனவர்களின் படகில் தஞ்சமடைந்தமை தொடர்பாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த புறாவின் காலில் சீன எழுத்துகளுடன் கூடிய வளையமொன்று இருந்ததாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்ட மீனவர் ஒருவரது படகு பாம்பனில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் பாக்கு நீரிணையில் இருந்தபோது, கடந்த 15 ஆம் திகதி இந்த புறா அதில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது, புறாவை மீட்ட மீனவர்கள் அதனை இராமேஸ்வரத்தில் புறாக்களை வளர்க்கும் மீனவர் ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.
இந்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரது பெயர், தொலைபேசி இலக்கமும் மற்றுமொரு காலில் சீன எழுத்துகள் பொறித்த ஸ்டிக்கரும் எண்களும் காணப்படுவதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர் இருந்ததால், பாக்கு நீரிணை பகுதியில் இந்திய கடற்படை ரோந்து கப்பலின் நடமாட்டம், கடல் பாதுகாப்பு குறித்து உளவு பார்க்க சிறிய ரக கேமராவை புறாவின் காலில் கட்டி அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.