‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் முடிவில் பஞ்சாப் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.

காலிஸ்தான் கோரிய அவர், அதே கோரிக்கையை முன்னிறுத்தி, இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிந்தரன் வாலேவின் சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கடந்த மாதம் துப்பாக்கிகள், வாள்களுடன் பஞ்சாப் காவல் நிலையம் முற்றுகையிட்ட சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்வலையை கிளப்பியது.

அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், அவரது காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.

 

இதையடுத்து அம்ரித் பால் சிங்கை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்ததுமே அவர் தலைமறைவாகிவிட்டார்.

தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றியதன் மூலம் பஞ்சாப் காவல்துறையினரிடம் சிக்காமல் அவர் தப்பி வந்தார்.

அதேநேரத்தில், பஞ்சாப் முழுவதும் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

காவல்துறை தேடுதல் வேட்டைக்குப் பயந்து கடந்த மார்ச் 18-ம் தேதி தலைமறைவாகிவிட்ட அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள ரோட் கிராமத்தில் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இதனை பஞ்சாப் காவல்துறையே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. பஞ்சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், பொய்யான, உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பஞ்சாப் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது

அம்ரித் பால் சிங்குடன் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்ட ரொட் கிராமம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

1984-ம் ஆண்டு காலிஸ்தான் தனி நாடு கோரி போராடி, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் புகுந்து கொண்டதால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பிந்தரவாலேவின் சொந்த கிராமம் இதுவாகும்.

அங்குதான், ‘வாரிஸ் ப்ஞசாப் டி’ இயக்கத்தின் தலைவராக அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்ரித்பால் சிங் பிடிபட்டது எப்படி?

காலிஸ்தான் கோரி அம்ரித்பால் சிங் பிடிபட்டது எப்படி என்பது குறித்து அதே கோரிக்கைக்காக 1984-ம் ஆண்டு உயிர் நீத்த பிந்தரன்வாலேவின் உறவினரான ஜஸ்பிர் சிங் ரோட், பிபிசியிடம் பேசினார்.

ஜஸ்பிர் சிங், பிந்தரன் வாலேவின் உறவினர்

இந்த காரணத்திற்காகவே தானும் ரோட் கிராமத்திற்கு வருகை தந்ததாக அவர் கூறினார். அம்ரித்பால் சிங் கைது குறித்துப் பேசிய ஜஸ்பிர் சிங், “அம்ரித்பால் சிங் முதலில் ‘நிட்நெம்’ ஓதினார். பிறகு, அங்கே கூடியிருந்தவர்களுடன் அவர் சிறிது உரையாடினார். அதனைத் தொடர்ந்து குருத்வாரா சாஹிப்புக்கு வெளியே வந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.” என்று கூறினார்.

இதற்கு முன் அம்ரிபாத் சிங் தன்னுடன் எந்த வகையிலும் தொடர்பில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

அம்ரித்பால் சிங் கைது – காவல்துறை கூறுவது என்ன?

அம்ரித்பால் சிங் கைது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

“ரோட் கிராமத்தில் உள்ள குருத்வாரா சாஹிப்பிற்குள் அம்ரித்பால் சிங் இருந்த போது நாங்கள் அந்த கிராமத்தை சுற்றி வளைத்துவிட்டோம்.

குருத்வாரா சாஹிப்பின் புனிதத்தை மதித்து, நாங்கள் உள்ளே செல்லவில்லை. ‘நீங்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறீர்கள், எங்கேயும் தப்ப முடியாது’ என்ற செய்தியை மட்டும் அனுப்பினோம்.” என்று கூறினார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் (வாரண்ட்) இன்று காலையில் அவரிடம் வழங்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில் தெரிவித்தார்.

அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரும், அவரது ஆதரவாளர்களும் சமூகத்தில் பகைமையை பரப்புவது, கொலை முயற்சி, காவலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் என்பன உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

பஞ்சாப் காவல்துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்

அசாமில் திப்ருகர் சிறைக்கு அனுப்பி வைப்பு

சீக்கியர்களுக்கென காலிஸ்தான் தனி நாடு கோரி வரும் அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்ததுமே, அவரை அசாம் அனுப்பி வைத்துள்ளனர். ரோட் கிராமத்தில் அம்ரித் பாலை கைது செய்ததும், பதிண்டா விமானப்படை தளத்திற்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து விமானம் மூலமாக அவர் அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில், அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 8 பேர் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த அம்ரித்பால் சிங்?

30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே என்னும் சீக்கிய போதகரை பார்த்து உத்வேகம் அடைந்தவர் அம்ரித்பால் சிங். சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டுமென கூறி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே, 1984ஆம் ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் இந்திய ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டார்.

அவருடைய லிங்க்டு இன் முகவரி ( LinkedIn profile) , அம்ரித்பால் சிங் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று கூறுகிறது.

பஞ்சாப்பில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்கும் இவர், கார்கோ கம்பெனியில் ஆப்ரேஷனல் மேனேஜராக பணிபுரிந்து இருக்கிறார் என்றும் அதன் தகவல்கள் கூறுகிறது.

”வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து என்பவரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. விவசாயிகளால் அப்போது நடத்தப்பட்டு வந்த போராட்டங்களில் நடைபெற்ற கலவரத்தில் இவருக்கும் பங்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அமிர்த்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் பிந்த்ரன்வாலேவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். பஞ்சாபில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு, போதைப்பொருட்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு, சீக்கியர்களுக்கென தனி தேசமே தீர்வு என்ற அவரது கருத்துகள் அனைத்தும் இதற்கு முன்னதாக பிந்த்ரன்வாலே கூறியவை.

கடந்த நவம்பர் மாதம் அம்ரித்பால் சிங், ஒரு நீண்ட மத ஊர்வலத்தை மேற்கொண்டார். பஞ்சாபில் போதை பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், சாதி ரீதியாக நிலவி வரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

ஊர்வலம் நடந்து ஒரு மாதத்திற்கு பின், குருத்வாராவில் இருந்த நாற்காலிகளை உடைத்து பிரச்சனைகள் செய்து, சிங்கின் ஆதரவாளர்கள் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றனர்.

சீக்கியர்கள் முதலில் பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது இந்துகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று ஏஎன்ஐ செய்தி முகமையுடன் பேசிய போது அமிர்த்சிங் பால் குறிப்பிடுகிறார்.

-bbc tamil  news-

Share.
Leave A Reply