நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன்.

தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடம் இருந்து மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு ஜோடி தங்க வளையல்கள், தனி வளையல் ஒன்று, 8 மோதிரங்கள், இரண்டு காதணிகள் மற்றும் ஒரு பென்டன்ட் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் இந்நாட்டுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சந்தேக நபரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு 22 ஆம் திகதி காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து 22 ஆம் திகதி இரவு கைது செய்தனர்.

புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த சபாரத்தினம் ரகு என்ற நபரே கைது செய்யப்பட்டார்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

“நான் நெடுந்தீவு வந்தால்  குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன். அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன்.

அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர். அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

அதனால் 22 ஆம் திகதி அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன்.

நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் பொலிஸார் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் பொலிஸ் விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என்று சந்தேக நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபர் இன்று (23) மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

Share.
Leave A Reply