சாலையில் போடப்பட்ட பழைய பாட்டில்கள் மற்றும் பேப்பர்களை சேகரித்த பழங்குடியினப் பெண்களை ஒருவர் காலணியால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதியில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி வாடி வருகின்றனர்.
பெண்கள் தம் குழந்தைகளுடன் ஒவ்வொரு பகுதியாக சென்று சாலையோரம் கிடக்கும் பழைய பாட்டில்கள், பேப்பர் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து அவற்றை கடையில் விற்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி பகுதியில், சாலையோரம் கிடந்த பாட்டில்களை சில பெண்கள் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பேராவூரணி வடக்கு திமுக ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் தீபலட்சுமியின் கணவர் சாமிநாதன், அந்தப் பெண்களை தரக்குறைவாக பேசி செருப்பால் அடித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் சுவாமிநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.