இந்தியாவும் இலங்கையும் பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் நடவடிக்கைகள் மூலம் வலுவான கூட்டாண்மையை கட்டியெழுப்ப உதவும் முன்முயற்சிகள் குறித்த விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன.

அண்மையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை (INR) பயன்படுத்துவது குறித்த விவாதத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய ரூபாயை பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து முடிவுக்கு வந்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளமும் செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையில் நிலவும் கடுமையான வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை சமாளிப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக, இலங்கையர்களிடம் இந்திய ரூபாயில் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம், பத்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு நிகரான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க இந்திய அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.

சாா்க் (SAARC) பிராந்தியத்திற்கான பொதுவான நாணயம்?

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation -SAARC) பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை ஏற்கனவே வைத்திருந்தது.

என்ற போதிலும், அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. அப்போதைய அரசியல் ரீதியாக இருந்த முரண்பாடுகள் இந்தத் திட்டத்தை முடங்க வைத்தன. தற்போது பிராந்தியத்திலுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை இந்த பொது நாணய பரிவா்த்தனையை பேசு பொருளாக்கியிருக்கிறது.

 

இந்திய, இலங்கை நாடுகளுக்கிடையில் தற்போது எட்டப்பட்டுள்ள இந்த முடிவு ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெற்காசியாவில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாகவும் இது பாா்க்கப்படுகிறது.

இலங்கையுடனான வர்த்தகத்தை எளிதாக்குமா?

பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையர்கள் இந்திய ரூபாயை வைத்திருப்பதற்கு, இலங்கையில் உள்ள வங்கிகள் இந்திய ரூபாயில் பண கையிருப்பை பராமரிக்கும் நோஸ்ட்ரோ (Nostro) வங்கிக் கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

இலங்கை வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய வங்கிகளின் பிற பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த திட்டம் தொடர்பாகவும், இது செயல்படுத்தும் கட்டமைப்பு தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியும் இலங்கை மத்திய வங்கியும் வடிவமைக்கும் செயல் திட்டத்திற்கு பிறகு, நியமிக்கப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகள் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய ரூபாயை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதால் ஏற்படும் நன்மைகளை வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

குறுகிய காலத்தில் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள், குறைந்த பரிமாற்றச் செலவுகள் மற்றும் வர்த்தகக் கடனை எளிதாக அணுகுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே, வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை இந்த பரிவா்த்தனை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளாா்.

அது தவிர, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், இந்திய ரூபாயை உத்தியோகபூர்வ நாணயமாக மாற்றுவது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக அண்மையில் தனது இந்திய விஜயத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்திய ரூபாயை இலங்கையின் உத்தியோகபூர்வ நாணயமாக பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையில் விவாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் வெளிநாட்டு கையிருப்பு (டொலர்கள்) கடும் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான தீர்வுகளில் ஒன்றாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2022 இல் இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை நியமிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அறிய வருகிறது.

2022 டிசெம்பரில் இந்திய அரசு வழங்கிய ஒப்புதல்

இலங்கையில் இந்திய நாணய பரிவா்த்தனை தொடா்பாக இந்தியா வழங்கியுள்ள ஒப்புதல் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்கள் இப்போது 10,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள இந்திய ரூபாய்களை வைத்திருக்கும் அனுமதியை பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தாமல் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.

டொலர் பணப்புழக்கத்தின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இது பெரிதும் உதவும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அண்டை நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் உட்பட பல துறைகளில் நெருக்கடியின் போது இந்த முடிவு இலங்கைக்கு விசேட அனுகூலங்களை வழங்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இரு நாடுகளுக்கிடையிலான இந்த முடிவின் மூலம் ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைக்கவும் முடியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தெற்காசியாவில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளின் ஒன்றாகவும் இதைப் பாா்க்க முடிகிறது.

22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கை, தனது குடிமக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு பல மாதங்களாக போராடி வருகிறது.

இந்திய ஊடக அறிக்கையின்படி, இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது என்பது ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளையும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இடையே நேரடியாக செய்ய முடியும் என்பதாகும்.

இலங்கையர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளை வங்கிகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாய் பயன்படுத்த அனுமதிக்கப்படும் உலகின் பிற நாடுகள்

கொவிட் நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் கூட, சில வலிமையான நாடுகளை விட இந்தியா அதிக பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

தேவைப்படும் நேரத்தில் முடிவெடுத்து விரைவாகச் செயல்படுவதே இதன் வெற்றி என்று கூறப்படுகிறது. பல ஆசிய நாடுகள் வலுவான பொருளாதாரம் கொண்ட தங்கள் நாடுகளில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்த அனுமதித்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது உலக அளவில் செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெர்மனி, கென்யா, இலங்கை, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் பல நாடுகளை உள்ளடக்கிய 18 நாடுகளுக்கு இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்ய இந்தியா அனுமதித்துள்ளது.

நேபாளம், மாலத்தீவு, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் இதே வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் உள்ள வங்கிகள் இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்கின்றன. அந்த வசதியைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் நேரடியாக இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்ய தயாராக உள்ளனர்.

ஜிம்பாப்வே நாடும் இந்திய ரூபாயைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.

ஈரான் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான பரிவர்த்தனைகளில் இந்திய நாணய பாிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் மத்திய வங்கியின் சமீபத்திய தகவலின்படி, ரஷ்யாவும் இந்திய நாணய பரிவா்த்தனைக்கு தயாராகி வருவதாக அறிய வருகிறது.

உக்ரைனுடன் மோதலில் உள்ள ரஷ்யா, இந்தியாவிடம் இருந்து உதவி பெற்று வருவதாகவும், இந்திய நாணயத்தை தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் அறிய வருகிறது.

ரொய்ட்டர்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்திய அரச வங்கிகள் இப்போது ரஷ்யாவுடன் இந்திய ரூபாயில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

இலங்கை எதிா்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான பொருளாதார சூழலுக்கு மாற்றீடாக, இந்திய தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைகள் இலங்கையில் இந்திய ரூபாயில் செலவழிப்பதற்கும், இலங்கை ரூபாயை இந்தியாவில் ஏற்றுக்கொள்வதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா நீட்டிய நேசக்கரம்

இலங்கையின் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகளையும், கடந்த வருடத்தில் இந்தியா வழங்கிய நிதி மற்றும் மனிதாபிமான ஆதரவையும் அண்மையில் பாராட்டிப் பேசியிருந்தாா்.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் பின்னணியில், கடன் மறுசீரமைப்பு தொடா்பான வலுவான நிதி உத்தரவாதங்களை இந்தியா நட்புறவோடு வழங்கியிருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா கடந்த ஆண்டு 3.8 பில்லியன் அமொிக்க டொலர் மதிப்பிலான உதவியை வழங்கி இலங்கையை நெருக்கடி நிலையிலிருந்து மீள வைத்தது.

Share.
Leave A Reply