தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருவரில் ஒருவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, அரசு அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த லூர்து பிரான்சிஸ் பிற்பகலில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆட்சியர் விசாரணை

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் பணியாற்றி வருகிறார்.

மர்ம நபர்கள் வெட்டியதில் அவரது இரண்டு கைகளிலும் வெட்டுக் காயம் உள்ளது. தலையிலும் நிறைய இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் உயிரிழந்தார்,” என்று தெரிவித்தார்.

“லூர்து பிரான்சிஸ் அரசாங்க சொத்துகளுக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்று நினைப்பவர். மிகவும் நேர்மையானவர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஆட்சியர் செந்தில் ராஜ் கூறினார்.

லூர்து பிரான்சிஸ் இன்றும் நீதிமன்றத்திற்கு சென்று தனது பணிகளை முடித்து விட்ட பிறகு அலுவலகத்துக்கு பணிக்காக வந்துள்ளார். அப்போதுதான் அவரை இரண்டு பேர் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை

இது குறித்து விஏஓ லூர்து பிரான்சிஸின் சகோதரர் பிபிசி தமிழிடம் கூறுகையில், “முறப்பநாடு பகுதியில் கடந்த 18 மாதங்களாக பணிபுரிந்து வந்த பிரான்சிஸ், சட்டவிரோத மணல் அள்ளுபவர்களிடமிருந்தும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி முறப்பாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காவல்துறையினர் அவரைப் பாதுகாக்கத் தவறியதால், நாங்கள் எங்கள் குடும்பத் தலைவரை இழந்து விட்டோம்” என அவரது சகோதரர் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு கலியாவூரைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் மற்றும் சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளினர்.

அதைத் தடுத்த லூர்து பிரான்ஸுக்கு அந்த நபர்கள் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தனர். இது பற்றி முறப்பநாடு லூர்து பிரான்சிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

“இந்த விவகாரத்தில் ராமசுப்பு, அவரது உறவினரான மாரிமுத்து தான் அலுவலகத்துக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளனர்,” என்று லூர்து பிரான்சிஸின் சகோதரர் தெரிவித்தார்.

ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு

நடந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் சந்தேக நபரான ராமசுப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு சந்தேக நபரான மாரிமுத்துவை தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் கணேச பெருமாள் பிபிசி தமிழிடம் கூறுகையில், “கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள விஏஓக்களின் பணிப்பாதுபாப்பை தமிழக அரசு உறுதிசெய்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களை பாதுகாக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும்,” என கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், விஏஓ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திருத்தணி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அலுவலர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் லூர்து பிரான்சிஸை படுகொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, அரசாங்க சொத்தை காப்பாற்றுவதற்கு அனைத்து நிலை அதிகாரிகளுக்கும்பொறுப்பு உள்ளது.

தவறு நடந்தால் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி வட்டாட்சியர், சார் ஆட்சியர் என்ற நிலையில் உள்ள அலுவலர்களும் புகார் அளிக்கலாம் என்ற ஒரு தீர்மானத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிவாரணம்

இதற்கிடையே, கிராம நிர்வாக அலுவலர் லூர்து சாமியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி, கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply