18 வயதே நிரம்பிய இளம்பெண், திருமணத்துக்கு முன் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமான வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் ஃபரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயதான இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.
திருமணம் செய்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை என்று அவர் கதறினாலும், ஃபராவின் பேச்சை அவரது அம்மா கேட்பதாக தெரியவில்லை.
அத்துடன் நிற்காமல், தமது மகளை சுத்தமானவள் என்று சமூகத்துக்கு நிரூபிக்க, ஃபராவின் தாய் அவரின் கன்னித்தன்மையை பரிசோதிப்பதற்காக ஃபராவை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
“எனக்கு இந்த திருமணத்தில் துளியும் விரும்பமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்பதே இரு வீட்டாரின் விருப்பமாக இருந்தது. திருமண வைபவம் நிகழாமல் இருப்பதற்கு கடைசி நிமிடம் வரை போராடினேன்.
ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணம் முடிந்த அன்றைய இரவு, எனது கன்னித்தன்மையை நிருபிப்பதற்காக ரத்தக்கறை படிந்த துணி (Sheet) எனது மாமியாரிடம் காட்டப்பட்டபோது நான் அவமானத்தில் கூனிக் குறுகி போனேன்.
விருப்பமில்லாத திருமணத்துக்காக என்னை கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தியதை அசிங்கமாக உணர்ந்த என்னால், அப்போது இதுவும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைதான் என்பதை உணர முடியவில்லை. அந்த பெருந்துயரான சூழலில் இருந்து என்னை மீட்பவர்கள் யாரேனும் எனக்கு தெரிந்திருந்தால் அவர்களை அப்போதே தொடர்பு கொண்டு பேசி இருப்பேன்” என்கிறார் இளம்பெண் ஃபரா.
சூ ட்ராங்கா
‘உதவிக்கு எங்கு செல்வது என்று பெண்களுக்கு தெரியவில்லை’
எப்படியோ, திருமணம் என்ற பேரில் தமக்கு அமைந்த கொடுமையான சூழலில் இருந்து ஃபரா தற்போது தப்பித்துவிட்டதோடு, வேல்சில் இருந்தும் அவர் வெளியேறிவிட்டார்.
ஆனால் அவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
கன்னித்தன்மை பரிசோதனை எனும் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தம்மை போன்றே இந்த கொடுமையை எதிர்கொள்ளும் இளம்பெண்களுக்கு உதவும் நோக்கிலும் அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டார்.
“எனக்கு நேர்ந்ததை போல் சில பெண்கள் இந்த கொடுமையை அனுபவித்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்,
ஆனால் இதில் இருந்து மீள, உதவிக்கு எங்கு செல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதேசமயம் பல சமூகங்களில் இதைப் பற்றி பேசமாட்டார்கள்” என்று வேதனை தெரிவித்தார் ஃப்ரா.
தங்களுக்கு எதிரான பவ்வேறு வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்களுக்கு உதவிவரும் தொண்டு நிறுவனமான ‘கர்மா நிர்வாணா’, 2021 ஆம் ஆண்டு முதல் கன்னித்தன்மை சோதனையால் பாதிக்கப்பட்ட 19 பெண்களுக்கு ஆதரவளித்து வருவதுடன், இந்த நடைமுறை சட்டவிரோதமானது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த விரும்புகிறது.
“இந்த செயல்முறை பெண்களுக்கு உளவியல்ரீதியான வலியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டதாகவும், கன்னித்தன்மை சோதனைகள் ‘சான்று அடிப்படையிலானவை’ அல்ல என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார் கர்மா நிர்வாணா நிறுவனத்தின் இயக்குனர் நடாஷா ரது.
“கன்னித்தன்மை பற்றிய எண்ணத்தை சமூகம் அகற்ற வேண்டும் எனவும், பாலியல் நிலையைக் கொண்டு பெண்களை வரையறுக்கக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
” இந்த உரையாடல் அவ்வளவு எளிதானது அல்ல; மாறாக மிகவும் உணர்ப்பூர்வமானது. இதுநாள்வரை இது போதுமான அளவு பேசப்படாத ஒன்று” என்று கூறினார் வேல்சின் தலைமை நர்சிங் அதிகாரி சூ ட்ராங்கா.
நடாஷா ரது
கன்னித்தன்மை பரிசோதனை என்றால் என்ன?
கன்னித்தன்மை பரிசோதனை என்பது ஒரு பெண்ணோ அல்லது இளம்பெண்ணோ திருமணத்துக்கு முன் கன்னித்தன்மையை இழக்காமல் இருக்கிறாரா என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்துடன், ஹைமன் என்று சொல்லக்கூடிய பெண்ணுறுப்பின் தொடக்கத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற திசுவை ஆய்வு செய்யும் ஒரு சட்டவிரோத செயல்.
உலக சுகாதார அமைப்போ (WHO), ராயல் காலேஜை சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர்களோ (RCOG) கன்னித்தன்மை பரிசோதனையை அறிவியல் பூர்வமானதாகவோ, மருத்துவ ரீதியிலானதாகவோ கருதவில்லை.
காரணம், “உடற்பயிற்சி போன்ற காரணங்களால் ஹைமன் கிழியும் வாய்ப்பு உள்ளதால், அவர் கன்னித்தன்மையை இழந்துவிட்டதாக சொல்ல முடியாது; இதற்கு பரிசோதனை என்று எதுவும் இல்லை” என அவர்கள் கூறுகின்றனர்.
2020 இல் பிபிசி மேற்கொண்ட களஆய்வில், பிரிட்டனில் பல மருத்துவ மையங்களில் பெண்களுக்கு சர்ச்சைக்குரிய ‘கன்னித்தன்மை பரிசோதனைகள்’ மேற்கொள்ளப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த பரிசோதனைக்கு பொதுமக்களை ஈர்ப்பதற்காக ‘கன்னித்தன்மை சரி செய்யப்படும்’ என்று சில தனியார் மருத்துவமனைகள் விளம்பரமும் செய்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து ஹைமனை சரி செய்வதாக கூறப்படும் அறுவை சிகிச்சை இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது.
கன்னித்தன்மை சோதனை சட்டத்திற்கு எதிரானதா?
உடல்நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம் 2022 இன் படி, கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்வது, அளிப்பது, உதவுவது மற்றும் அதனை ஊக்குவிப்பது என அனைத்தும் பிரிட்டனில் சட்டவிரோதமானது.
மேலும் இந்த சட்டப்படி, பிரிட்டன் நாட்டு குடிமக்களோ, அந்த நாட்டில் குடியேறியவர்களோ பிரிட்டனுக்கு வெளியே கன்னித்தன்மை பரிசோதனைக்கு உதவுவதும் சட்டவிரோதமாகும்.
கன்னித்தன்மை பரிசோதனை போன்றவற்றை WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் மீறலாக கருதுகின்றன.
மேலும் இதனை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும் இவ்விரு அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் உலக அளவில் சுமார் 20 நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை நடைமுறையில் இருப்பதாக WHO கவலை தெரிவிக்கிறது.