வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016 முதல் 2020ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் டிரம்ப்.. அமெரிக்காவின் டாப் பிஸ்னஸ்மேன்களில் ஒருவரான இவர், குடியரசு கட்சி சார்பில் அதிபராகத் தேர்வானார்.

இவர் அதிபராக இருந்த போதே தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும், மிகப் பெரியளவில் மோசடி நடந்தாக சொல்லி சர்ச்சையைக் கிளப்பியவர் இவர்.

டிரம்ப்: இதனிடையே இவர் அடுத்தாண்டு இறுதியில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்தச் சூழலில் இவர் மீது பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் விவகாரத்தில் நியூயார்க் நீதிமன்றத்தில் இவர் சரணடைந்தார். இதனிடையே இவர் மீது இப்போது மற்றொரு புகார் எழுந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்திருந்தார்.

அந்த விவகாரத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் அளித்துள்ளார். எழுத்தாளர் இ ஜீன் கரோல்: இது குறித்து நீதிமன்றத்தில் எழுத்தாளர் இ ஜீன் கரோல் கூறுகையில், “டொனால்ட் டிரம்ப் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் காரணமாகவே நான் இங்கு வந்துள்ளேன்.. அதைப் பற்றி நான் எழுதிய போது, அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று அவர் பொய் சொன்னார்.

என் நற்பெயரைச் சிதைத்தார், நான் இப்போது என் வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்று வருகிறேன்” என்றார்.

79 வயதான எழுத்தாளரான இ ஜீன் கரோல், டிரம்பிடம் இருந்து பெருந்தொகையை நஷ்டஈடாகக் கோரி விண்ணப்பித்துள்ளார்.

1995-96 ஆண்டுகளில் ஏதோ ஒரு நாள் பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் ரூமில் வைத்து டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுத்தாளர் கரோல் குற்றஞ்சாட்டுகிறார்.

எழுத்தாளர் கரோல் மேலும் கூறுகையில், “இந்த பலாத்காரம் குறித்து நான் வெளியே சொல்லிய போது, அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று பொய்யான கருத்துகளை டிரம்ப் கூறினார்.

மேலும், நான் அவரது டைப் இல்லை என்றெல்லாம் அவதூறு கூறினார். இது தொடர்பாக அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

கடும் நடவடிக்கை: இது தொடர்பான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இருப்பினும், முதற்கட்ட விசாரணை என்பதால் டிரம்ப் இதில் நேரில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற போதிலும் டிரம்ப் இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

இது பொய்யானது குற்றச்சாட்டு என்று தொடர்ந்து கூறி வருகிறார். வழக்கு விசாரணையில் இருக்கும் போது டிரம்ப் இதுபோல பொதுவெளியில் பேசி வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க மாவட்ட நீதிபதி லூயிஸ் கப்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாக்குமூலம்: எழுத்தாளர் கரோல் அளித்த வாக்குமூலத்தில், “இந்தச் சம்பவம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே, டிரம்பை நான் சந்தித்துள்ளேன்.

அப்போது அவர் பற்றி பெரிதாகத் தெரியாது. அதன் பிறகு சம்பவம் நடந்த நாளில் டிரம்ப் என்னை அடையாளம் கண்டார். நான் அவரிடம் “நீதான் அந்த ரியல் எஸ்டேட் அதிபர்” என்றேன்.

அப்போது டிரம்ப் வேறு ஒரு பெண்ணுக்கு உள்ளாடை வாங்குவதாகக் கூறினார். அப்போது என்னிடம் ஒரு உள்ளாடையைக் கொடுத்துப் போட்டுக் காட்டுங்கள் என்றார். அப்போது அவர் அங்கிருந்த டிரஸிங் ரூமிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.

கதவை மூடி, சுவருக்கு எதிராக என்னைத் தள்ளி, என்னை ஆடைகளைக் கழட்ட முயன்றார். நான் அவரிடம் இருந்து தப்ப முயன்றேன். அவரை தள்ள முயன்றேன்.

இருப்பினும், என்னால் முடியவில்லை. அப்போது அங்கு வைத்து அவர் என்னைப் பலாத்காரம் செய்தார்” என்று அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply