ராசிபுரம் அருகே பள்ளத்து கருப்பசாமிக்கு 1 டன் எடையில் தலா 21 அடியில் இரு அரிவாளை பக்தர் நேர்த்திக் கடனாக வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும்.
திருவிழாவில், ஒருநாள் இரவில் ஆயிரக்கணக்கான ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு, பொங்கல் வைத்து சுவாமியை வழிபடுவர்.
இதில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
கரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகத் திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இதையொட்டி, பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற பக்தர் சுவாமிக்கு நேர்த்திக் கடனாக 1 டன் எடையில் தலா 21 அடி உயரத்தில் இரு இரும்பு அரிவாளை நேற்று காலை வழங்கினார்.
மேலும், அரிவாளைக் கோயில் முன்பு பொருத்த கை வடிவில் 5 அடி உயரத்தில் கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்ட இரு பீடங்களையும் வழங்கினார்.