ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை  நிலை நிறுத்த வேண்டும் என்பதில் சீனா , மிகுந்த  உறுதியுடன்  காணப்படுகிறது.

சீனாவின் போக்குகள் இதர நாடுகளுக்கு பாரிய  ஆத்திரமூட்டலாக  இருக்கும் அதேவேளை, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சீனாவின் நடவடிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகி வருவதைக் காணலாம்.

அந்த வகையில் தைவான்  தொடர்பில் சீனாவின் அணுகுமுறை பிரித்தானியாவை  ஆத்திரமூட்டி உள்ளதாகவே  கருத செய்கின்றது.

அனைத்துக்கும் மேலாக சீனாவின் அணுகுமுறைகளை  இதர நாடுகள் சந்தேகக் கண் கொண்டே  பார்த்து வருகின்றன.

மேலும், அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையீடு செய்கிறது  என்பதே  சீனா மீதான பரவலான  குற்றச்சாட்டாக  முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தாய்வானை  தனது பிரதேசமாக உரிமை கொண்டாடி வரும் சீனா , தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக ஒரு நாள் அதைக் கைப்பற்றுவோம்  என்றும்  சவால்  விட்டுள்ளது.

இந்நிலையில், தாய்வான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக சீனாவை எச்சரித்துள்ள  பிரிட்டன், பீஜிங் தனது சர்வதேச நியமங்களை  கடைப்பிடிக்கத்  தவறினால் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியான கொந்தளிப்பை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாகக் எச்சரித்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவெர்லி (James cleverly) பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான  ஓர் உரையில்,  இறையாண்மை குறித்த உரிமைகோரல்களில்  “அமைதியான தீர்வையே லண்டன் பார்க்க விரும்புகிறது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

சீனா அவ்வப்போது தாய்வான் மீது விடுக்கும் அச்சுறுத்தல்களும், ஆத்திரமூட்டும்  செயற்பாடுகளும்  தாய்வானை  மாத்திரமல்ல  உலகநாடுகளின் அதீத  கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தாய்வானின்  சுயாதிபத்யத்துக்கு சவால் விடும் வகையில்,  இந்த மாத ஆரம்பத்தில், சீனப் படைகள்  தாய்வான் மீதான முற்றுகையை உருவகப்படுத்தும் இராணுவ பயிற்சிகளை நடத்தின.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவெர்லி, தாய்வான் நீரிணையில் ஏற்படும் மோதல்கள் உலக விநியோகச் சங்கிலியில்,பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  கூறியுள்ளார்.

குறித்த மோதலானது மனித துயரமாக மட்டுமன்றி, அது 2.6 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள உலக வர்த்தகத்தை அழித்துவிடும், என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

“எந்தவொரு நாடும் பின் விளைவுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது,” என்று கூறிய அவர் , இந்தப்  பேரழிவு “உலகப் பொருளாதாரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .”அதைத் தொடர்ந்து வரும்  மனித மற்றும் நிதி அழிவைப் பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.

எனவே தற்போதைய நிலையை மாற்ற எந்தக் கட்சியும் ஒருதலைப்பட்சமாக  நடவடிக்கை எடுக்காதிருப்பது  அவசியம்.”வேண்டும்என அவர் விவரித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்த பின்னர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி பிரிட்டன் “சாய்ந்த ” நிலையில் அதன் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவெர்லி  இன் கருத்து  முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.

தாய்வானை  பொறுத்தமட்டில்  தாய்வான் தீவு சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் இருந்து 180 கிலோமீட்டர் (110 மைல்) தூரத்தில் தாய்வான் நீரிணை பகுதியில் அமைந்துள்ளது மற்றும்  எல்லைகளாக வடக்கில் சீன கடல், கிழக்கில் பிலிப்பைன் கடல், தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தென் சீன கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தாய்வான் தீவின் மொத்த பரப்பளவு 35,883 சதுர கி.மீ  ஆகும்.

அண்மைய ஆண்டுகளில் லண்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக முன்னாள் பிரிட்டிஷ் கொலனியான ஹொங்கொங்கில் சிவில் உரிமைகள் மீதான சீனாவின் அழுத்தம் காரணமாகவும் , உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை சீனா நடத்தும் முறை  மற்றும் பிரிட்டனின் 5G தொலைத்தொடர்பு பரிவர்த்தனையை  வெளியிடுவதில் தொழில்நுட்ப நிறுவனமான Huawei இன் ஈடுபாட்டைத் தடுப்பது போன்றவை தொடர்பிலும்  இரு தரப்புக்கும் இடையே  ஆழமான கருத்து வேறுபாடுகள்’  காணப்படுகின்றன.

இவ்வாறான  பின்னணியில் பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள பலரும், சீனா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால்   வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவெர்லி இது தொடர்பில் கூறுகையில்,  சீனாவின் எழுச்சிக்குப்  பதிலாக  ஆக்கபூர்வமான மற்றும் ஐக்கிய மேற்கத்திய அணுகுமுறை அவசியமானது என்று வலியுறுத்தினார். மேலும் ஆசிய சக்தியுடன் கூட்டாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்  ஏற்றுக் கொண்டார்.

அத்துடன் “ஒரு புதிய பனிப்போரை அறிவித்து, சீனாவை தனிமைப்படுத்துவதே  எங்கள் குறிக்கோள் என்று கூறுவது எனக்கு தெளிவாகவும் எளிதாகவும் ஒருவேளை திருப்திகரமாகவும் இருக்கும்” என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

சீனத் தலைமைகளை கையாளும் போது “ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள்” எதிர்பார்க்கப்படலாம் என்று கூறிய ஜேம்ஸ் கிளேவெர்லி,

ஆனால், காலநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் நிதி போன்ற பிரச்சினைகளுக்கு சீனாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், மேற்கத்திய சக்திகள் ,எதிர்கால சந்ததியினர் தங்கள் கருத்தைப் பேசுவதற்கும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கும் கடமை பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனைத்துக்கும் மத்தியில் ஹொங்கொங்கின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பிரிட்டனுடன் கையெழுத்திட்ட கூட்டுப் பிரகடனம் மற்றும் ஐ.நா. சாசனம் உள்ளிட்ட சர்வதேசக் கடமைகளை சீனா நிலைநிறுத்த வேண்டும் என்றும் மீண்டும்  அவர் வலியுறுத்தினார்.

“சீனா அவற்றை மீறினால் , அதைச் சொல்லவும் செயல்படுத்தவும் எமக்கு  உரிமை உண்டு – நாங்கள் செய்வோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பீஜிங் இதர  நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது  என்றும் கேட்டுக்கொண்டார் ” அமைதியான சகவாழ்வு என்பது படையெடுப்பிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டையும் பாதுகாக்கும் ஐ.நா. சாசனம் உட்பட அடிப்படை சட்டங்கள் மற்றும் நியமங்கங்களுக்கு மதிப்பளிப்பதன் மூலம் தொடங்க வேண்டும்,” என்றும்  ஜேம்ஸ் கிளேவெர்லி தெரிவித்துள்ளார்.

உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு மீதான நடுநிலை நிலைப்பாட்டை கைவிடுமாறு பீஜிங்கை  வலியுறுத்திய  ஜேம்ஸ் கிளேவெர்லி, சர்வதேச கட ப்பாடுகள் ,பிரித்தானியாவுடனான கூட்டு பிரகடனங்கள் , ஹொங்கொங்கின் சுதந்திரம், ஐ நா சாசனம் என்பவற்ற்றுக்கு சீன உரிய கௌரவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உலக ஒழுங்கின் உச்சியில் ஒரு கௌரவமான   இடத்தை விரும்பும் ஒரு நாடு,அதன் சொந்த கொள்கைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும், மேலும் அந்த ஒழுங்கின் அடித்தளத்தில் சட்டங்களை பாதுகாக்கும் தனது கடமையை பேண வேண்டும்,” என்றும்  அவர் மேலும் கூறினார்.

சீனாவை பொறுத்தமட்டில் , ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சி மாநாடு, ஷங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.

இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில்  சீனாவும் ஒன்று.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், கொள்வனவு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு விளங்குகிறது .

1978-ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உச்ச நிலையில் இருந்த வறுமை வீதம்  2001-ஆம் ஆண்டில் 8%  ஆகக் குறைந்துள்ளது.

எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை உலகின் சனத்தொகை கூடிய முதலாவது நாடு என்ற நிலையிலிருந்தும்  பின் தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மத்தியில்  சீனா  மீதான குற்றச்சாட்டுகளும் குறைந்த பாடில்லை. உலகில் கொரோனா  அச்சுறுத்தல் முதலில் தலைக்காட்ட  ஆரம்பித்த சமயம் உலக நாடுகளினால் முதலில் கை நீட்டப்பட்ட  ஒரே நாடு சீனவாகும்.

இன்றும் அதன் சர்ச்சை  தொடர்ந்து கொண்டே உள்ளது. உலக பொருளாதார சீரழிவுக்கு கொரோனா தாக்கமே அடிப்படைக் காரணமாகும். இன்றும் கூட உலக நாடுகள் அந்த தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கின்றன என்பதே யதார்த்தம். இவ்வாறான பின்னணியில் புதிய மோதல்களும் ஆக்கிரமிப்புகளும் உருவாகுமானால், அது உலகின் பேரழிவுக்கே வழி வகுப்பதாக இருக்கும்.

உக்ரேன் -ரஷ்ய மோதலில் இருந்ததாவது  உலகம் இந்த உண்மையை  கற்றுக்கொள்ள வேண்டும்.

-ஆர்.பி .என்.

Share.
Leave A Reply