பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.483 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது.

முதலிடத்தில் 2.0 (ரூ.800 கோடி), 3-ம் இடத்தில் விக்ரம் (ரூ.426 கோடி), 4-ம் இடத்தில் கபாலி (ரூ.400 கோடி), 5-ம் இடத்தில் வாரிசு (ரூ.300 கோடி) இடம்பெற்றுள்ளன.

பொன்னியின் செல்வன் 2-ல் சோழர் வரலாறு சரியாகச் சொல்லப்படவில்லை என்கிற சர்ச்சை ஒருபக்கம் புழுதி பறக்க பலரும் பேசிக்கொண்டிருக்க, `வரலாறா முக்கியம், வசூல் என்னாச்சுன்னு பாருங்க பாஸ்’ என இன்னொரு தரப்பு பேசிக்கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் புதிய டிரெண்டை உருவாக்கி இருக்கிறது.

இந்தப் படம் வெளியான முதல் நான்கு நாள்களில் ரூ.200 கோடி வசூலைத் தாண்டி இருக்கிறது. இந்த கலெக்‌ஷன் வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்களின் கலெக்‌ஷனையும் விஞ்சியிருக்கிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நெடுநாவலைத் தழுவி எடுத்ததாக இயக்குநர் மணிரத்னம் குறிப்பிட்டாலும் திரைக்கதை பல விஷயங்களை மாற்றியிருக்கிறது பி.எஸ் கதை இலாகா.

சினிமா சுவாரஸ்யத்துக்காக கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருப்பார்கள் என்று பார்த்தால், சோழர் கால வரலாற்றையே மொத்தமாக மாற்றி எழுதி துவம்சம் செய்திருக்கிறார்கள் என்று பொருமுகிறார்கள் வரலாற்று ஆர்வலர்கள்.

புத்தகச் சந்தையில் எத்தனை வருடங்கள் ஆனாலும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வனுக்கு எப்போதுமே இடம் உண்டு.

பொன்னியின் செல்வன் நாவலின் வாசகர்கள் வயது வித்தியாசமின்றி இருக்கிறார்கள். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இன்னொரு தரப்பு இணையதளங்களில் பேசுகிறார்கள்.

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதையும், உத்தம சோழன் யார் என்பதையும் தவறாகக் கட்டியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

திரைக்கதையிலும் பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை. நாவல் கொடுத்த சுவாரஸ்யத்துக்குக் கொஞ்சம்கூட திரைப்படம் நியாயம் செய்யவில்லை என்கிறார்கள்.

ஆனால், இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்திருக்கிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஏப்ரல் 28 அன்று வெளியானது.

வெளியாகி முதல் மூன்று நாள்களில் ரூ.80 கோடி இந்தியாவில் மட்டும் வசூல் ஆகியிருந்தது. நான்காவது நாள் திங்கள் கிழமை வசூல் வழக்கமாகக் குறைவாக இருக்கும். ஆனால், மே 1 விடுமுறை என்பதால், பொன்னியின் செல்வன் 2-வுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. நான்காம் நாளில் ரூ. 24 கோடி வசூலாகி, நான்கு நாள்களில் மொத்தமாக ரூ.105 கோடி வரை வசூல் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் என மொத்தமாகப் பார்க்கும்போது, பொன்னியின் செல்வன்-2 நான்கு நாள்களில் ரூ.200 கோடி வசூல் செய்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்துக்கு திரையரங்குகளில் மக்கள் வருகை (Seating occupancy) மொழி சார்ந்து எப்படி இருக்கிறது என்று பார்க்கும்போது, தமிழ் மொழியில் 58.04 சதவிகிதமும், இந்தி மொழியில் 14.21 சதவிகிதமும், மலையாள மொழியில் 34.39 சதவிகிதமும், தெலுங்கில் 25.66 சதவிகிதமும் வருகை இருப்பதாகக் கூறப்படுகிறது.

படம் வெளியான நான்கு நாள்களில் வாரிசு படம் ரூ.195.20 கோடியும், பீஸ்ட் திரைப்படம் ரூ.153.64 கோடியும் வசூல் செய்திருக்கிறது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் ரூ.200 கோடியைத் தாண்டி வசூல் ஆகி வாரிசு, பீஸ்ட் வசூலை விஞ்சி சாதனை படைத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன், மொத்தமாகப் பார்க்கக்கூடிய திரைப்படமாக இருப்பது இதன் கூடுதல் ப்ளஸ். பெரும்பாலும், திரையரங்குகளில் பொன்னியின் செல்வனைக் குடும்பத்தினரோடு கண்டுகளிக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தாலும் பெரும்பாலானோர் ஒரு முறையாவது படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பதால் வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2022 செப்டம்பரில் வெளியாகி ரூ.483 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தது. முதல் இடத்தில் ரூ.800 கோடி வசூலுடன் ஷங்கரின் ரஜினி நடித்த 2.0 படம் உள்ளது.

மூன்றாம் இடத்தில் விக்ரம் ரூ.426 கோடி வசூல் செய்துள்ளது. கபாலி ரூ.400 கோடி வசூலுடன் நான்காம் இடத்திலும், வாரிசு ரூ.300 கோடி வசூலுடன் 5-ம் இடத்திலும் உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 இந்தப் பட்டியலில் 5 இடங்களுக்குள் இடம்பெறுமா என்று கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்திருக்கிறது.

Share.
Leave A Reply