பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல்நலக்குறைவால் தனது 69 வயதில் இன்று (03) காலமானார்.

கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள் 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை மனோபாலா தொடங்கினார்.

1982ஆம் ஆண்டு முதல் இயக்குநரான மனோ பாலா, ஆகாய கங்கை- (1982), நான் உங்கள் ரசிகன்- (1985), பிள்ளைநிலா- (1985), பாரு பாரு பட்டினம் பாரு- (1986), தூரத்துப் பச்சை- (1987), ஊர்க்காவலன்- (1987), சிறைப்பறவை- (1987), என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்- (1988),  மூடு மந்திரம்- (1989),  மல்லுவேட்டி மைனர்- (1990),  வெற்றி படிகள்- (1991),  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- (1991), செண்பகத் தோட்டம்- (1992),  முற்றுகை- (1993),  பாரம்பரியம்- (1993), கருப்பு வெள்ளை- (1993), நந்தினி- (1997),  அன்னை- (2000), சிறகுகள்- (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்), நைனா-(2002) உள்ளிட்ட 20 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

1994ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் படத்தில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களிலும் மனோபாலா நடித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த சதுரங்கவேட்டை படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply