மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப்பரவலான வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில், பல இடங்களில் வீடுகள் தீயில் எரிவதைக் காண முடிகிறது. சுராசந்த்பூரில் ஒரு ஆயுதக் கடைக்குள் சிலர் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதை ஒரு வீடியோவில் காணலாம்.

இருப்பினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அத்தகைய படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் எதையும் பிபிசி உறுதிப்படுத்தவில்லை. இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமையன்று மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் பேசினார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைதி காக்குமாறு மாநிலத்தின் எல்லா சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்து இந்த வன்முறைச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார்.

“இது அரசியலுக்கான நேரம் அல்ல. அரசியலும் தேர்தலும் காத்திருக்கலாம். ஆனால் நமது அழகிய மாநிலமான மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து, “மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்” என்று எழுதியுள்ளார்.

எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் என்ன காரணம்?

பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் புதன்கிழமையன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போகபி, தமெங்லாங், சந்தேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட எல்லா மலை மாவட்டங்களிலும் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன.

டார்பாங் பகுதியில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு’ பேரணியில் ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பிறகு பழங்குடி குழுக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் நடந்துள்ளன. தலைநகர் இம்ஃபாலில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் வியாழக்கிழமை காலை வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் தற்போதைய நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், “தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வியாழக்கிழமை காலைக்குள் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,” என்றார்.

“ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் உதவி மே 3 மற்றும் 4 இரவுகளில் கோரப்பட்து. அதன் பிறகு எங்கள் வீரர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

சுமார் 4,000 கிராம மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மாநில அரசின் பல்வேறு வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட எல்லா சமூகங்களிலிருந்தும் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை வெளியேற்றுவதற்காக ஒரே இரவில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன,” என்று லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார்.

மெய்தேயி சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே என்ன தகராறு?

மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் மெய்தேயி சமூகத்தினர் 53 சதவிகிதம் உள்ளனர். இந்த மக்கள் முக்கியமாக இம்ஃபால் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ளனர்.

மெய்தேயி சமூகத்திற்கு பட்டியலில் பழங்குடியினரின் அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்க்கும் குக்கி அமைப்பு, பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய ஒரு இனக்குழு ஆகும்.

மணிப்பூரில் பொதுவாக மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு குக்கி பழங்குடியினர் தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதமாக உள்ளனர்.

மெய்தேயி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தங்கள் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்று மலைப் பகுதிகளில் குடியேறிய இந்தப் பழங்குடியினர் கூறுகிறார்கள், பெரும்பாலான இடஒதுக்கீட்டை மெய்தேயி மக்கள் எடுத்துக்கொண்டுவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறையானது, மாநிலத்தின் சமவெளிகளில் வசிக்கும் மெய்தேயி சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே நிலவும் பழைய இனப் பிளவை மீண்டும் திறந்துள்ளது.

“மாநிலத்தில் இந்த வன்முறை ஒரு நாளில் வெடித்தது அல்ல. மாறாக பல விஷயங்கள் தொடர்பாக பழங்குடியினரிடையே முன்பே கோபம் நிலவி வருகிறது. மணிப்பூர் அரசு போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது,” என்று மூத்த செய்தியாளர் பிரதீப் ஃபன்ஜோபம் கூறினார்.

“இது தவிர, வனப்பகுதிகளில் பல பழங்குடியினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களும் அவர்களிடமிருந்து மீட்கப்படுகின்றன.

இதில் குக்கி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை வெடித்த இடம் சூராசந்த்பூர் பகுதி. குக்கிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் அங்கு பதற்றம் ஏற்பட்டது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் ராணுவம் அமைத்துள்ள தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மெய்தேயி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து அளிக்கும் கோரிக்கை குறித்த சர்ச்சை

“நீதிமன்றம் மாநில அரசுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கியது. ஏனெனில் மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் நீண்ட காலமாக எஸ்டி அந்தஸ்து கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கையின் பேரில் மெய்தேயி சமூகமும் பிளவுபட்டுள்ளது. இதில் சிலர் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றனர். சிலர் எதிராகவும் உள்ளனர்.” என்று பிரதீப் ஃபன்ஜோபம் குறிப்பிட்டார்.

” மணிப்பூர் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கை கமிட்டி, மாநில அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக்கோரிக்கையை விடுத்து வருகிறது.

ஆனால் இதுவரை எந்த அரசும் இந்தக்கோரிக்கை தொடர்பாக எதுவும் செய்யவில்லை. எனவே மெய்தேயி பழங்குடியினர் குழு நீதிமன்றத்தை அணுகியது.

நீதிமன்றம் இந்தக் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கத்தொடங்கியது,” என்றார் அவர்..

மெய்தேயி சமூகத்திற்கு, எஸ்சி மற்றும் ஓபிசியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய சூழ்நிலையில் மெய்தேயிகள் எல்லாவற்றையும் அடைய முடியாது. மெய்தேயிகள் பழங்குடியினர் அல்ல. அவர்கள் SC, OBC மற்றும் பிராமணர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

மெய்தேயி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கினால் தங்கள் நிலங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால்தான் தங்கள் இருப்புக்கு ஆறாவது அட்டவணை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று குடியேற முடியாது.

குக்கி மற்றும் எஸ்டி அந்தஸ்து கொண்ட பழங்குடியினர் இம்ஃபால் பள்ளத்தாக்கில் வந்து குடியேறலாம். இப்படிச் செய்தால் தங்களிடம் வாழ நிலம் இருக்காது என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

யும்னம் ரூப்சந்திர சிங் – மூத்த பத்திரிக்கையாள

“பழமையான தகராறு”

“மணிப்பூரில் உள்ள தற்போதைய முறையின்படி, மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பாங்கான மாவட்டங்களில் குடியேற முடியாது. மணிப்பூரின் 22,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 முதல் 10 சதவிகிதம் மட்டுமே சமவெளிகள்,” என்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் யும்னம் ரூப்சந்திர சிங்.

“மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமவெளிகளுக்குச் செல்லலாம். ஆனால் மெய்தேயி மக்கள் அங்கு குடியேற முடியாது என்பது மெய்தேயி சமூகத்தின் மிகப்பெரிய புகார். வயல் வெளிகளில் பட்டியல் பழங்குடியினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல விஷயங்களில் மோதல் உள்ளது.” என்றார் அவர்.

“எஸ்டி அந்தஸ்து வழங்குவது குறித்த உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மெய்தேயி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

உண்மையில் மலைவாழ் மக்கள் மற்றும் சமவெளிப்பகுதி மக்களுக்கிடையிலான தகராறு மிகவும் பழமையானது. இந்த வன்முறை தவறான தகவலை பரப்பியதன் விளைவாக ஏற்பட்டதாகத் தெரிகிறது.” என்று யும்னம் ரூப்சந்திரா கூறினார்.

மெய்தேயி இனத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வேலைகள், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் வரிச்சலுகைக்கு மட்டுமல்ல.

இந்தக் கோரிக்கை அவர்களின் பாரம்பரிய நிலம், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக செய்யப்படுகிறது என்று மெய்தேயி மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற மணிப்பூரின் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கைக் குழு தெரிவித்தது.

Share.
Leave A Reply