நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்ததாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானியை, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் புனே போலீசார் (ATS) கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீப் மோரேஸ்வர் குருல்கர். 59 வயதான இவர் மீதுதான் அரசு ரகசியங்கள் சட்டப்பிரிவின் கீழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் புனேவின் கலாசௌக் காவல் நிலையத்தில் மே 3ஆம் தேதி குருல்கர் மீது வழக்குப் பதிந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் அவரை புனேவில் உள்ள சிவாஜிநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குருல்கர் மீதான வழக்கு என்ன?
பயங்கரவாத தடுப்புப் படையின் உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல்களின்படி, “இந்தியாவின் ‘எதிரி’ நாட்டைச் சேர்ந்த சிலருடன் பிரதீப் குருல்கர் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக டிஆர்டிஓ நிர்வாகத்திற்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
விளம்பரம்
அந்தத் தகவலையடுத்து, குருல்கரின் லேப்டாப், கணினி மற்றும் மொபைல்ஃபோனை கைப்பற்றிய டிஆர்டிஓ நிர்வாகம், அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியது.
அதன் பின்னர் இந்த விவகாரம், டிஆர்டிஓ-வின் கீழ் உள்ள நிலைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தக் குழு மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை பெறப்பட்ட பின், குருல்கரின் லேப்டாப், மொபைல்ஃபோன் உள்ளிட்டவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு டிஜிபி நிலையிலான உயரதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
பிரதீப் குருல்கர் டிஆர்டிஓ இயக்குநராகப் பதவி வகித்தபோது, பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களுடன் (PIO) ரகசிய தொடர்பில் இருந்ததாக DRDO நிலைக்குழுவின் விசாரணை மற்றும் தடயவியல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் ரகசிய தொடர்பில் இருந்தபோது, அவர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் மற்றும் இதர முக்கிய விஷயங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் என அனைத்து முறைகளிலும் பாகிஸ்தான் உளவுத் துறையினருடன் பகிர்ந்துள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து டிஆர்டிஓ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் குருல்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹனிடிராப் செய்யப்பட்டாரா குருல்கர்?
டிஆர்டிஒத இயக்குநராக இருந்தவரான குருல்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி, பிபிசி மராத்தியிடம் கூறுகையில், “குருல்கரை தங்களது மோக வலையில் (honeytrap) சிக்க வைத்து அவரிடமிருந்து ரகசியங்களை பாகிஸ்தான் உளவாளிகள் கறந்திருக்கலாம் என்றே இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகளை வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது,” என்றார்
அதாவது, பாகிஸ்தான் உளவாளிகள் முதலில் தங்களது சமூக ஊடக பக்கங்களில் சில அழகான பெண்களின் பெயர்களில் புகைப்படத்துடன் கூடிய புரோஃபைல்களை (Profiles) உருவாக்கியுள்ளனர்.
பின்னர் அவற்றில் இருந்து இந்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் சமூக ஊடக பக்கங்களுக்கு நட்பு விண்ணப்பம் (Friend Request) அனுப்பியுள்ளனர்.
அழகான பெண்களின் புகைப்படத்தை பார்த்தவுடன் சபலப்பட்டு அந்த விண்ணப்பத்தை சில அதிகாரிகள் ஏற்றுக்கொண்டால் உடனே அவர்களைத் தொடர்பு கொள்ளும் பாகிஸ்தான் உளவாளிகள், அந்த அதிகாரிகளிடம் பெண்களின் வசிய குரலில் பேசி அவர்களை மயக்குகின்றனர்.
இந்த மயக்க நிலையில் அவர்களின் பேச்சு வாய்ஸ் சாட், வீடியோ கால் என எல்லை மீறிப் போக வாய்ப்புள்ளது.
அப்போது தொடர்பில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களைக் கறந்துவிடும் உத்தியைக் கையாண்டு வருகின்றனர் பாகிஸ்தான் உளவாளிகள். குருல்கர் விவகாரத்திலும் இவ்வாறு நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
குருல்கர் வழக்கு தொடர்பான விசாரணையில், நிறைய வாட்ஸ் ஆப் உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
அப்படியானால், அந்த வாட்ஸ் ஆப் குழு எங்கிருந்து, யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை காண வேண்டியுள்ளது என்கிறார் அந்த அதிகாரி.
வாட்ஸ் ஆப்பில் இருந்துதான் முதலில் தமக்கு தகவல் (Message) வந்ததாக விசாரணையின்போது குருல்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தான் உளவாளிகள் உடனான அவரது உரையாடல் முதலில் முகநூல் (Facebook) மூலமாகவும் தொடங்கி இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம் என்கிறார் பயங்கரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அந்த அதிகாரி.
அதற்குக் காரணம், பாதுகாப்பு மற்றும் அதைச் சார்ந்த முக்கிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் முகநூலில் கணக்கு ஆரம்பித்து, அதில் அவர்கள் இடும் பதிவுகளை அடுத்த கனமே, பிரத்யேக செயலி (facebook scraping app) மூலம் திருடும் வித்தையை பாகிஸ்தான் உளவுத் துறையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் திருடப்பட்ட இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறித்த தகவல்களை சில அழகான பெண்களுக்கு அனுப்பி, அந்தத் தொடர்பின் மூலம் இந்திய அதிகாரிகளை தங்களின் மோக வலைக்குள் சிக்க வைக்கும் வித்தையையும் பாகிஸ்தான் உளவாளிகள் கையாண்டு வருகின்றனர் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி.
குருல்கரும் பாகிஸ்தான் உளவுத் துறையினர் விரித்த மோக வலையில் விழுந்தாரா என்பது இந்த வழக்கின் விரிவான விசாரணையில் தெரிய வரும் என்கிறார் அவர்.
ஐஐடி கான்பூரில் படித்த பொறியியல் பட்டதாரியான குருல்கர், டிஆர்டிஓ-வில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
குறிப்பாக, செயற்கைக்கோள்களைத் தகர்த்தெறியும் ஏவுகணை தயாரிப்பு திட்டமான ‘மிஷன் சக்தி’ இவரது தலைமையில்தான் செயல்படுத்தப்பட்டது.
டிஆர்டிஓ-வின் தேர்ந்த விஞ்ஞானியாக அறியப்படும் குருல்கர், தமது அரிய பணிகளுக்காக 2002இல் DRDO Agni Award for Excellence உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளதாக அறியப்படும் சிறந்த விஞ்ஞானியான பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் உளவாளிகளின் மோக வலையில் சிக்கயுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருல்கர் கைதுக்குப் பிறகு, அடுத்தகட்ட விசாரணையில் சில முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருல்கர் நிதி ஆதாயத்திற்காக அலுவலக ரகசிய தகவல்களைப் பகிர்ந்துள்ளாரா என்பது குறித்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முழுமையாக விசாரணை மேற்கொள்ளும். அவர் பகிர்ந்துள்ள தகவலகள் இந்தியாவின் பாதுகாப்பிற்குக் கேடு விளைவிப்பதாக இருப்பதால், இந்தத் தகவல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
இதேபோல், குருல்கர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளதால் அவர் அங்கு எதிரி நாட்டு உளவாளிகளைச் சந்தித்து பேசினாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும்.