பிரிட்டன் அரசர் முடிசூட்டு விழா: 1000 ஆண்டுகள் பழைமையான நிகழ்வின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா வரும் இன்று (6.5.2023) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மனைவி கமில்லாவுடன் பங்கேற்கும் அரசருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு ‘Operation Golden Orb’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முடிசூட்டுதல் என்றால் என்ன?

அரசரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.

இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு இருக்கும்.

இருப்பினும், அரசர் பதவியில் இருப்பதற்கு கண்டிப்பாக கிரீடம் சூட்டப்பட வேண்டும் என எந்தத் தேவையும் இல்லை.

அரசர் எட்டாம் எட்வர்ட் முடிசூட்டிக்கொள்ளாமலேயே ஆட்சி செய்தார். சார்ல்ஸை பொறுத்தளவில், அரசி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த அடுத்த வினாடியில் இயல்பாகவே அவர் அரசராகிவிட்டார்.

இதற்கிடையே இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு 8ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ட்சர் கோட்டையில் 7ஆம் தேதி 20,000 பார்வையாளர்களைக் கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள பப்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பார்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று கூடுதலாக இரண்டு மணிநேரம் திறந்திருக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்துமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்?

முடிசூட்டு விழா என்பது கடந்த 1,000 ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில், பிரிட்டனில் மட்டும்தான் இதுபோன்ற முடிசூட்டு விழா நடத்தப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 1953ஆம் ஆண்டு அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவைவிட சிறிய நிகழ்ச்சியாகவும் மிகக் குறைந்த நேரமே நடைபெறும் நிகழ்வாகவும் இந்த விழா இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிசூட்டு விழா ஊர்வலமும் சிறிய அளவிலேயே நடத்தப்படவுள்ளது. அரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின்போது சுமார் 16,000 பேர் பங்கேற்ற ஊர்வலம் 45 நிமிடங்களில் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இந்த முறை அரசரும் அவரது மனைவியும் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய ரதத்தில் தான் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்கின்றனர். இந்த ரதத்தில் குளிர்சாதன வசதியும் மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் இருக்கின்றன.

2014ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட வைரவிழா ரதத்தில் விழாவுக்குச் செல்லும் அரசர் பின்னர், கடந்த 1830ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க ரதத்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயுதமேந்திய 6,000 ராணுவ வீரர்கள் பங்கேற்கும் ஒரு மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளில் இருந்து வரும் ஏராளமான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பங்கிங்ஹாம் கோட்டையில் இருந்து இந்த அணிவகுப்பைக் கண்டு ரசிப்பார்கள்.

பிரமாண்ட அரச ரதம்

இரண்டு தங்க ரதங்கள் தான் அரசர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா ஊர்வலத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிருடன் இருந்தபோது தயார் செய்யப்பட்டிருந்த வைர விழா அரச ரதம், தற்போது அரசர் சார்ல்ஸ் மற்றும் அரசரின் மனைவியை லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் அபேவுக்கு அழைத்துச் செல்லும்.

“இந்த வைரவிழா அரச ரதம் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இது 2014ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த மாதிரியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நிகழ்வில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இதற்கு முன்னதாக அமையவில்லை,” என்கிறார் தி ராயல் கலெக்ஷன் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் சேலி குட்சிர்.

இந்த 5 மீட்டர் நீள ரதத்தின் எடை 3 டன்களைவிட அதிகம். “இன்றளவிலும் சாலையில் செல்லும் எந்தவொரு காரையும்விட இது குறிப்பிடத்தக்க அளவில் பெரியது. ரதத்தின் மேற்புறத்தில் மிகப்பெரிய தங்க மகுடம் உள்ளது.

18ஆம் நூற்றாண்தில் பயன்படுத்தப்பட்ட அரச கப்பற்படையின் புகழ்பெற்ற ஹெச்எம்எஸ் விக்டரி கப்பலின் மரக்கட்டைகள் இந்த ரதத்தை செதுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்கிறார் சேலி.

முடிசூட்டு விழா முடிந்தவுடன் இந்த தங்க ரதம் அரசர் மற்றும் அரசரின் மனைவியை பக்கிங்காம் அரண்மனைக்கு மீண்டும் அழைத்துச் செல்லும்.

உலகின் பழமையான வாகனம்

நீண்ட நேரம் நடைபெறும் இந்த மிகப்பெரிய விழாவின் மையப்புள்ளியாக இந்த இரண்டாவது தங்க ரதம் இருக்கும். இது சுமார் 4 மீட்டர் உயரமும் ஏழு மீட்டர் அளவிற்கு நீளமும் கொண்டது. இதன் எடை 4 டன்கள்.

1762ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ரதம், உலகிலேயே இன்றளவும் இயங்கும் ஒரு பழைமையான வாகனமாக இது உள்ளது.

இந்த வண்டியை இழுக்க எட்டு குதிரைகள் தேவை. எட்டு குதிரைகள் தங்க ரதத்துடன் பூட்டப்பட்டிருக்கும். பக்கவாட்டில் நான்கு குதிரைகள் இருக்கும்.
முடிசூட்டும் போது என்ன நடக்கும்?

முடிசூட்டுவதில் பல படிநிலைகள் உள்ளன.

அங்கீகரித்தல்: 700 ஆண்டு கால பழைமையான இருக்கையின் பின்னால் நின்றுகொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஓர் அறிவிப்பை வெளியிடுவார்.

அப்போது, “God Save the King!” என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும்.

சத்தியப் பிரமாணம்: சட்டத்தையும் பிரிட்டன் தேவாலயத்தையும் காப்பதாக அரசர் உறுதிமொழி எடுப்பார்.

சமயச் சடங்கு: பின்னர் அரசர் அந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டு அவரது வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்போது பார்வையாளர்களிடம் இருந்து தங்க இழைகளால் தயாரிக்கப்பட்ட திரைமூலம் அவரை மறைத்து, அவரது தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்துவிடுவர்.

அரசருக்கென்றே சிறப்பாகத் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் எந்தப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இதில் அம்பர்கிரீஸ், ஆரஞ்சு மலர்கள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளன. மேலும், விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட எந்தப் பொருளும் இந்த எண்ணெயில் இல்லை.

பதவியில் அமர்த்தும் சடங்கு: பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். பின்னர் நியாயம், இரக்கம் போன்ற உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் அளிக்கப்படும். அதன் பிறகு இறுதியாக அரசரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டுவார்.

அரியணை ஏற்றுதல்: பின்னர் முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி அரசர் செல்வார். அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமர வைக்கப்படுவார். பின்னர் இதேபோல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்படும்.

முடிசூட்டு விழாவுக்கு என்ன செலவாகும்?

இதுவோர் அரசு விழா என்பதால் இதற்காகும் செலவுகள் அனைத்தையும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசே ஏற்கும்.

ஏற்கெனவே பிரிட்டனில் கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவும் நிலையில், உலக அரங்கில் பிரிட்டனின் கௌரவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இதை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

 

Share.
Leave A Reply