பீகாரில் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த பிறகு, மணப்பெண்ணின் சகோதரியை மணமகன் திருமணம்செய்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது.

திருமணத்தை முடிப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது. திருமணத்தில் அடிக்கடி சுவாரஸ்யமான சம்பவங்கள் நடப்பதுண்டு.

சில நேரங்களில் மணமேடைக்கு வந்த பிறகு திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மணமகள்கள் கூறிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

பீகார் மாநிலத்தில் மணமகளுக்கு அவரின் சொந்த சகோதரியே வில்லியாக வந்திருக்கிறார். பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

திருமணத்தன்று மணமகன் மணமேடைக்கு வந்துவிட்டார். மணப்பெண்ணும் மணமேடைக்கு வந்து, இருவரும் மாலை அணிவித்துக்கொண்டனர்.

உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அடுத்து தாலி கட்ட வேண்டும். இந்த நேரத்தில் மணமகளின் இளைய சகோதரி, `எனக்குத்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும்’ என்று கூறி ரகளையில் ஈடுபட ஆரம்பித்தார்.

இதனால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னை செய்த பெண்ணிடம் அவரின் பெற்றோர் பேசிப்பார்த்தனர்.

ஆனால், அந்தப் பெண் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். அதோடு உனக்கும் விரைவில் திருமணம் செய்துவைப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால், அதைக் கேட்காமல் வீட்டின் மாடிக்குச் சென்று தனக்கு இப்போது அக்காவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையுடன் திருமணம் செய்துவைக்கவில்லையெனில் மாடியிலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டினார்.

அதோடு மணமகனிடமும் அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளவில்லையெனில் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.

இதனால் இரு குடும்பத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டது. உடனே போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மணமகன் ஏற்கெனவே முடிவான பெண்ணின் இளைய சகோதரியைத் திருமணம் செய்வது என்று முடிவானது.

அதன்படி மணமகன் ஒரு பெண்ணுக்குக் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டு, வேறு ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டினார். இந்தச் சம்பவத்தால் அந்தக் கிராமம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. மணமகன் மணமகளின் சகோதரியுடன், தொடர்பில் இருந்தது பின்னர் தெரியவந்தது.

Share.
Leave A Reply