3 கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொன்ற 25 வயதுடைய நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் தனது நண்பரைப் பயன்படுத்தி குறித்த பெண்ணை வாகன விபத்தில் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடிகல மானம்பிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த பெண் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜீப் வண்டி மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் அதனை ஓட்டிச் சென்ற நபர் ஜீப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நிரோஷா உதயங்கனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் 25 வயதுடைய கணவர் மோட்டார் சைக்கிளில் விபத்து நடந்த இடத்திற்கு அவருடன் வந்து, அந்த இடத்தில் அவரை இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பிறகே அங்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பிடிகல பொலிஸார் முதலில் விபத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியை கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​குறித்த ஜீப் வண்டியை உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் வாடகை அடிப்படையில் எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் இறந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதன்போது, இறந்த பெண்ணின் கணவரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வௌிநாட்டில் இருந்த போது ஈட்டிய பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் அவரின் மூன்று காப்புறுதிகளின் மூன்று கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்த கொலையை திட்டமிட்டதாக பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை குறித்த ஜீப் வண்டியை செலுத்திய நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Share.
Leave A Reply