தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்புடைய அரசியலில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இன்று மாலை 7 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களை சேர்ந்து சந்தித்த இருவரும் தாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவருடன் அவரது தரப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
ஓபிஎஸ் வந்தபோது அவரை வாசல் வரை வந்து வரவேற்ற டிடிவி தினகரனுடனான இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இருவரும் தாங்கள் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், “எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காப்பாற்றிய இயக்கத்தை அதன் அடிமட்டத் தொண்டர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்ற ஒரே லட்சியத்தோடு சேர்ந்து செயல்படுவது,” என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால் உணர்ச்சி மேலிட்டு மீண்டும் பிளவுகளும் பேதங்களும்தான் வரும். அதனால் எதிர்காலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.
நடந்ததையே பேசுவது இயக்கத்தை வலுவாக வளர்க்கப் பயன்படாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்,” என்றும் கூறினார்.
“இபிஎஸ் துரோகி, திமுக எதிரி”
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நீக்கத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலாவை சந்திக்கப் போவதாகக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி, திருச்சியில் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரானவர்களை ஓர் அணியில் ஒன்றுதிரட்ட ஓ.பன்னீர்செல்வம் முயல்வதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
டிடிவி.தினகரன் பேசியபோது, “அம்மாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு,அதைக் கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டெடுத்து, தீய சக்தியான திமுகவை வீழ்த்தும் முயற்சியில் நாங்கள் இணைந்துள்ளோம்,” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துள்ள நண்பர்கள். எங்களுக்குள் மனதளவில் பகையுணர்வு ஏதும் கிடையாது.
ஏதோ சில காரணங்களால் பிரிந்திருந்தோம். எங்களுக்கான சுயநலத்தோடு நாங்கள் இணையவில்லை. இயக்கத்தை மீண்டும் உண்மையான தொண்டர்களிடையே ஒப்படைப்பதுதான் ஒரே லட்சியம்,” என்றும் கூறினார்.
“பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவரிடம் எப்போது எனக்கு அன்பு உண்டு. அதன் வெளிப்பாடுதான் இது. அவரை நம்பி இருட்டில்கூட நான் கையைப் பிடித்துக்கொண்டு செல்ல முடியும். பழனிசாமியுடன் நான் அப்படிச் செல்ல முடியுமா?” என்றவர், “இபிஎஸ் துரோகி, திமுக எதிரி” என்றும் கூறினார்.
“சின்னம்மாவை விரைவில் சந்திப்போம்”
எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்படுவதற்கான முயற்சி எடுக்கப்படுமா என்று பண்ருட்டி ராமச்சந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும். அவர்தான் யாரையுமே சேர்க்க வேண்டாம் என்கிறாரே!” என்று கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமையை பாஜக நம்புவதற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அவர், “எடப்பாடி தரப்பினர்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, பாஜகவின் தலைமையில் இருந்து கூட்டணி உருவாகியிருப்பதாக இதுவரையிலும் எந்தத் தகவலும் வரவில்லை,” என்று கூறினார்.
“சின்னம்மாவை விரைவில் சந்திக்க உள்ளோம்,” என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் சந்திப்பதற்கான நேரம் இப்போதுதான் வந்துள்ளது,” என்றும் கூறினார்.
அந்த நேரத்தில் சபரீசனை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, “கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தபோது எதேச்சையாகச் சந்தித்தோம். மரியாதை நிமித்தமாக அந்தச் சந்திப்பு நடந்தது. அது அரசியல்ரீதியிலான சந்திப்பு இல்லை,” என்று விளக்கமளித்தார்.
டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமிக்கு சவாலா ?
“இதை காலத்தின் கோலம்” என்று விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, தினகரனை எதிர்த்துத்தான் தர்ம யுத்தம் செய்தார்.
அந்தக் குடும்ப வாரிசுகள் தொடர்ச்சியாக வரக்கூடாது, ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்கியிருக்கக் கூடாது என்றார். இப்போது அதிமுகவில் நெருக்கடியாகி வெளியேறிய பிறகு டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.
அவர் தனிக் கட்சி நடத்துகிறார் என்ற நிலையில், அந்தக் கட்சியில் ஓபிஎஸ் இணையப் போகிறாரா அல்லது அதிமுகவில் தனது அந்தஸ்தை கோரியபடியே இணைந்து செயல்படப் போகிறாரா என்பது போகப் போகத்தான் தெரியும்,” என்று கூறினார்.
மேற்கொண்டு பேசியவர், “அதிமுகவில் பழனிசாமியோ அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களோ இவர்களது சந்திப்பைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்களுக்கு இதில் சிக்கல் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
அதிமுகவை வைத்து தமிழ்நாட்டில் கால் பதிக்க முயலும் பாஜக, இவர்கள் அனைவரையும் ஒன்று சேருமாறு அழுத்தம் கொடுக்கலாம். இருப்பினும், அந்த அழுத்தத்திற்கு இபிஎஸ் அடிபணியமாட்டார்.
இன்னொருபுறம், இப்போது இவர்கள் இணைவதன் மூலம், தாங்கள் இல்லையென்றால் அதிமுகவிற்கு இழப்பு என்பதை நிறுவ முயல்வார்கள். இபிஎஸ் இதை எப்படிக் கையாளப் போகிறார் என்பதைத்தான் பார்க்கவேண்டும்,” என்றார்.
“எதிர்க்கு எதிரி நண்பன்”
அதிமுக ஓபிஎஸ் டிடிவி
டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மூவரும் இணைவதை “எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இணைவதாக” வர்ணிக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “இருப்பினும் வெளிச்சத்திலேயே அவர்களிடம் விசுவாசியாக இருந்த பன்னீர்செல்வத்தை ஏன் ஒதுக்கினார்கள்? இப்போது பழனிசாமியை வழிக்குக் கொண்டு வருவதுதான் இவர்களது நோக்கம். ஆனால், இந்த மூன்று பேரும் சேர்ந்திருப்பது தொடருமா என்பது சந்தேகம்” என்கிறார்.
இன்னொருபுறம் பாஜகவுடனான கூட்டணியைப் பொறுத்தவரை, அதிமுகவுடனான கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பது ஈரோடு இடைத்தேர்தலின்போது வெளிப்பட்டது.
இரு தரப்பிலும் அவ்வப்போது சில உரசல்கள் ஏற்பட்டாலும் அவை உடனடியாகத் தீர்க்கப்பட்டு, கூட்டணியைத் தக்க வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பும் பாஜகவுடன் தொடர்ந்து இணைந்திருக்க முயன்று வருகிறார். தற்போது பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் பாஜக இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, “ஓபிஎஸ் தரப்பின் பிரதான நம்பிக்கையே பாஜகதான்,” என்கிறார்.
“2024 நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்னும்போது, தாமரை சின்னத்தில் ரவீந்திர நாத்தை நிற்க வைப்பதற்கான முயற்சிகளை ஓபிஎஸ் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், டிடிவி தினகரன் தரப்புக்குத் தனியாக சீட் கொடுப்பார்களா என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது,” என்று கூறுகிறார்.
பாஜகவை பொறுத்தவரை, முக்குலத்தோர் சமுதாயத்தில் ஓபிஎஸ் கொண்டிருக்கும் செல்வாக்கை முழு முற்றாகக் கைவிடுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும், தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள அதிமுகவின் கூட்டணியையும் நீட்டித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
இந்நிலையில், இரு தரப்பையும் கைவிடாமல் சமாளித்து பாஜக கொண்டு செல்லுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அதற்குப் பதிலளித்த குபேந்திரன், “ஓ.பன்னீர்செல்வத்தைவிட இபிஎஸ் தான் பாஜகவுக்கு பிரதானம். இருந்தாலும், முக்குலத்தோர் சமுதாயத்தில் ஓபிஎஸ் ஒரு தலைவராகப் பார்க்கப்படுகிறார். அவரை விட்டுக்கொடுப்பதற்கு பாஜகவிற்கு மனம் வரவில்லை,” என்று கூறினார்.