படகு தலைகீழாக கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர். படகு கவிந்து சேற்றில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி நடைபெற்று வருகிறது.
இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர்.
படகு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து நடந்துள்ளது. படகு தலைகீழாக கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர்.
படகு கவிந்து சேற்றில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ப்பட 11 பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மலப்புறம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் படகை உடைத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இரவு நேரம் என்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகள் ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்ததும் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் முஹம்மது ரியாஸ், அப்துல் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் அந்த பகுதிக்குச் சென்று மீட்புப்பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “மாலை 5 மணிக்கு மேல் படகு ஓட்டக்கூடாது என்பது விதிமுறை.
அதுகுறித்து பின்னர் விசாரிக்கப்படும். போட் தலைகீழாக கவிழ்ந்துள்ளதால் சுமார் 11 பேர் மரணமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது” என்றார். மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.