ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா? காதல் திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
நவகிரக அமைப்பை வைத்து ஜாதகருக்கு எப்படி திருமணம் நடக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம்.
ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
சூரியன்
சூரியன் மனக்கோட்டை, கற்பனை, கனவுகளுக்கு காரக கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் காதல் பற்றிய பல விதமான கற்பனைகளும், கனவுகளும் இருக்கும்.
இதில் அந்தஸ்து மற்றும் கவுரவம் பற்றிய மிகைப்படுத்ததலான எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
தன் கனவிற்கும், கற்பனைக்கும் அந்தஸ்திற்கும் சமமான நபர் கிடைத்தால் மட்டுமே காதலிக்க துவங்குவார்கள்.
.சந்திரன்
சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ஜந்தாம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
தங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபரின் அன்பு கிடைத்தால் அவர்கள் மேல் காதல் வந்து விடும்.
செவ்வாய்
செவ்வாய் வேகத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் காரககிரகம். ஐந்தாம் பாவகத்துடன் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் காதலிக்கும் தைரியம் வரும்.
செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் நல்ல தரமான நபருடன் காதல் ஏற்படுகிறது. அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் தரமில்லாத, தகுதி குறைந்த நபருடன் காதல் உருவாகிறது.
புதன்
காதலுக்கான காரக கிரகம் புதன். ஒருவரின் புத்திசாலித்தனத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரக கிரகமான புதன் காதலிக்கும் போது மட்டும் மதியை இழந்து நிற்கும்.
எத்தனை வயதானாலும் புதன் தசை, புத்தி அந்தர காலங்களில் காதல் அவஸ்தையால் மன நோயாளியாகிறார்கள்.
குரு
குரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் காரக கிரகம். குரு ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு மரியாதைக்குரிய நபர்கள் மற்றும் கவுரவமான நபர்கள் மீது காதல் வரும்.
இவர்கள் கவுரவத்திற்கு பயந்து பெற்றோர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை.
வாழ்நாள் முழுவதும் தங்கள் காதலை ஆழ்மனதில் அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது தான் காதலுக்கு மரியாதை.
சுக்ரன்
சுக்ரன் அழகிற்கும், ஆடம்பரத்திற்கும், காமத்திற்கும் காரக கிரகம். எந்த வயதினராக இருந்தாலும் சுக்ரன் தசை, புத்தி காலங்களில் அழகு, ஆடம்பரம்,காமம் போன்றவற்றினால் காதல் வருகிறது.
சுக்ரனால் ஏற்படும் காதலில் பெரும்பாலும் ஆழமான அன்பு இருக்காது. பலர் போக்சோவில் தண்டனை அனுபவிப்பது, பல பெண்களிடம் தவறாக பழகுபவர்களுக்கு சுக்ரன், ராகு சம்பந்தம் இருக்கும்.
இவர்களின் காதல் திருமணத்தில் முடிவதில்லை, திருமணம் நடந்தாலும் தோல்வியைத் தழுவுகிறார்கள்.
சனி
சனி துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரக கிரகம். ஐந்தாம் பாவகத்துடன் சனி சம்பந்தம் பெற்றால் தங்கள் துன்பம், கவலைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் மீது காதல் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வருகிறது. இளம் பருவத்தில் வயது வித்தியாசமில்லாமல் ஏற்படும் காதல் நிறைவேறாது. காதலர்கள் பலர் நம்பிக்கை துரோகத்தால் உயிரை துறக்கிறார்கள்.
ராகு
ராகு வேற்று மொழி பேசுதல் மற்றும் திருட்டுத்தனத்தைக் குறிக்கும் கிரகம். தவறான நபர்களிடம் காதல் கொள்ளுதல், ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பதையும் கூறும் கிரகம்.
ராகு. பலருக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சுமையை பகிர்ந்து கொள்ளும் தகாத உறவைத் தருகிறது. முகம் சுளிக்க வைக்கும் காதல் உறவை ஏற்படுத்துகிறது.
கேது
கேது ஞானத்திற்கும் பக்திக்கும், வேற்று மதத்திற்கும் காரக கிரகம் என்பதால் மதம் மாறிய காதலுக்கு வழி வகுக்கிறது. இவர்கள் காதலால் சட்ட நெருக்கடியை சந்திப்பவர்கள்.