பேச்சுவார்த்தை நாடகம் திரும்பவும் மேடையேறத்தொடங்கி விட்டது. இந்தத்தடவை சற்று முலாம் பூசப்படுகின்றது எனக்கூறலாம். மூன்று நாள் பேச்சுவார்த்தையென குஞ்சம் எல்லாம் கட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கின்றது எனக்காட்டவேண்டும் கட்டாயம் ஜனாதிபதிக்கு தமிழ்த்தரப்பையும் ஜனாதிபதி இலாவகமாகவே கையாளுகின்றார். குழுக்களாக பிரிந்திருப்பது பந்தை தமிழ்தரப்பு பக்கம் தட்டி விடுவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கியுள்ளது.
போதாததற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அரசசார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசுசார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு சார்பாக வரவேண்டுமே தவிர தமிழ் மக்கள் சார்பாக வரமுடியாது. அவர்கள் தமிழ் மக்களின் தேசியக்கொள்கைகளை முன்வைப்பதில்லை.
அரசின் முயற்சிகளுக்கான தமிழ்த்தரப்பின் எதிர்வினை மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். தமிழரசுக்கட்சி அரசுடன் பேசத்தொடங்கி விட்டது.
குத்து விளக்குகாரரின் காவலனாக மாவை சென்று விடக்கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு மாவையும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குத்து விளக்குகாறர்களுக்கு தங்களையும் ஜனாதிபதி அழைக்க மாட்டாரோ என்று ஒரே ஏக்கம். ஜனாதிபதி மாளிகையைப்பார்த்து ஏங்கியவாறே உள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது வழக்கமான பாணி அணுகுமுறை தான். மற்றக்கட்சிகள் வடக்குப்பக்கம் பார்த்தால் முன்னணி தெற்குப்பக்கம் பார்க்கும்.
இந்தத் தடவையும் அதுவே இடம்பெற்றுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்கான அணுகுமுறை என்பது ஒரு ராஜதந்திர அணுகுமுறை.
இந்த மைதானத்தில் நாங்களும் விளையாட வேண்டும் என்ற தூரப்பார்வை அதனிடம் கிடையாது. “வளர்த்தால் குடுமி அடித்தால் மொட்டை” என்ற அணுகுமுறை எத்தகைய பயன்களைத் தரும் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
உண்மையில் பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறை என்பது பல நுணுக்கமான நகர்வுகளை வேண்டி நிற்கின்றது.
அதில் முதலாவது மக்களின் கூட்டிருப்பு சம்பந்தமான விடயத்தை நாம் கையாளுகின்றோம் என்ற தெளிவு தமிழ்த்தலைமைக்கு இருக்க வேண்டும் என்பதாகும். சம்பந்தனும், சுமந்திரனும் தமது சொந்த குடும்ப விவகாரத்தை அணுகுவது போல இதனை அணுக முற்படுகின்றனர்.
கூட்டிருப்பைப் பாதுகாத்தல் என்பதில் தெளிவு வந்துவிட்டால் பின்னர் இலக்கு பற்றியும் அதனை அடைவதற்கான வழிவரைபடம் பற்றியும் போதிய புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை என்பதே தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவதே.
எனவே இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இந்த அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.
இது தான் தமிழ் மக்களின் கூட்டிருப்பைப் பாதுகாப்பதாக இருக்கும். இந்தத் தெளிவு இருந்துவிட்டால் 13ஆவது திருத்தம் பற்றிய மயக்கம் வருவதற்கான வாய்ப்புக்களும் இல்லாமல் போகும்.
இரண்டாவது பேச்சுவார்த்தைக்களம் என்பது இராஜதந்திரச்செயற்பாட்டை வேண்டிநிற்பதாகும்.
சாதாரண அரசியல் செயற்பாடுகள் போல இராஜதந்திரச்செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.
அதில் மிகநுணுக்கமான அணுகுமுறை அவசியமானதாகும். கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு நடைமுறையில் நெகிழ்ச்சியைக் காட்டும் அணுகுமுறை இருக்க வேண்டும்.
ஏறத்தாள மைதானத்தில் விளையாடுவது போன்றது. இங்கு நான் விளையாடமாட்டேன் என அடம் பிடிக்க முடியாது. நாமும் விளையாடித்தான் ஆக வேண்டும்.
இங்குதான் முன்னணியின் அணுகுமுறை தவறாக இருக்கின்றது முன்னணியும் பேச்சுவார்த்தை மைதானத்திற்கு செல்ல வேண்டும்.
மைதானத்தில் அரச தரப்பு இலாவகமாக விளையாடினால் முன்னணியும் இலாவகமாக விளையாட வேண்டும். விளையாட மாட்டேமென அடம்பிடிப்பது அரசதரப்பு இலகுவாகவே பந்தை தமிழ்த்தரப்பை நோக்கி எறிவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கும்.
துரதிஸ்டவசமாக அன்ரன்பாலசிங்கத்திற்கு பிறகு தமிழ்த்தரப்பில் இராஜதந்திரிகளே உருவாக்கவில்லை எனக்கூறலாம். இராஜதந்திரிகள் சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இரண்டு அரசியலிலும் உள்ள இடைவெளிகளைக் கண்டுபிடித்து அதனூடாக ஓடும் ஆற்றலைப்பெற்றிருக்க வேண்டும். வல்லரசுகளுக்கு எடுபிடியாக இருப்பதோ அல்லது வல்லரசுகளை எதிரியாக்குவதோ எந்தப்பயனையும் தரப்போவதில்லை. ஆனால் தமிழ் அரசியலில் இந்த இரண்டு போக்குகளுமே தலைதூக்கியுள்ளன.
மூன்றாவது பேச்சுவார்த்தையை அணுகுவதற்கான வழிவரைபடமாகும் தமிழ்த்தரப்பிடம் இது தொடர்பான பிரக்ஞை இருப்பதாக தெரியவில்லை. எந்தவித ஆயத்தங்களும் இல்லாமல் சந்தியில் வெட்டிப்பேச்சுக்கு செல்வது போல பேச்சுவார்த்தைக்கு செல்ல முயல்கின்றன.
வழிவரைபடத்தில் தீர்வு என்ன என்பது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாடு அவசியம். மூன்று தரப்பும் மூன்று வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க முடியாது. தமிழ்த்தேசியக்கட்சிகளின் மூன்று பிரிவுகளும் ‘சமஷ்டி’ என்பதை வாய்ப்பாடாக ஒப்புவிக்கின்றன.
சமஷ்டியின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தத் தரப்பும் தெளிவாக முன்வைக்கவில்லை. சமஸ்டி மாதிரிகளில் வலுக்குறைந்த இந்திய மாதிரி தொடக்கம் வலுத்தன்மை கூடிய சுவிஸ்லாந்து, பொஸ்னிய சமஷ்டி வரை பல உள்ளன.
தமிழ் மக்களுக்கான சமஸ்டி முறையை உருவாக்குவதில் இந்த மாதிரிகள் கூடப்போதாமல் இருக்கலாம். எனவே சர்வதேச மாதிரிகளில் தமிழ் மக்களுக்கு பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து மேலும் புதியனவற்றைச் சேர்த்துக் எங்களுக்கான மாதிரியை உருவாக்க முயற்சிக்க வேணடும்;.
அடுத்த கால அட்டவணையை உருவாக்குதல் ஆகும். முதல்கட்டத்தில் ஆக்கிரமிப்புப்பிரச்சினைகள் இயல்பு நிலையை கொண்டு வருதல் பிரச்சினைகள் என்வற்றை முன்நிறுத்தலாம். ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் என்பதை நிபந்தனையாகக்கூட முன்வைக்கலாம்.
ஒருபக்கத்தில் ஆக்கிரமிப்புக்களை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டு இன்னோர் பக்கத்தில் பேச்சுவார்த்தையை நடாத்த முடியாது.
உண்மையில் தமிழ்க்கட்சிகள் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறாது என்பதற்கான எழுத்து மூல உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கலாம். மனோகணேசன் கூறியது போல தொல்பொருட்திணைக்களம் தொல்லைத்திணைக்களமாக மாறுவதை தடுக்கும்படி அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம்.
இதேபோல அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனோர்க்கான இழப்பீடு, என்பவற்றையும் நிபந்தனைகளாக முன்வைத்து நம்பிக்கையை கட்டியெழுப்புங்கள் எனக்கூறியிருக்கலாம்.
முரண்பாடுகளைத்தீர்த்தல் அணுகுமுறையில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று தணித்தல் மற்றையது நிலைமாற்றம் தணித்தல் என்பது முரண்பாடுகளை வளரவிடாது தடுப்பதாகும். ஆக்கிரமிப்புக்கள் முரண்பாடுகளை தணிக்கச் செய்வதற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை.
இரண்டாவது நிலைமாற்றம் அதாவது முரண்பாடுச் சூழலை நல்லிணக்கத்திற்குரிய சூழலாக மாற்ற வேண்டும். ஆக்கிரமிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல், அரசியல் கைதிகள் விடுதலை, காணிபறிப்பு என்பவற்றுக்குத்தீர்வுகாணல், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளல் என்பன நிலை மாற்றத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும்.
மற்றைய விடயம் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எனக்கூறிவிட முடியாது.
இவ்விவகாரம் முழுக்க முழுக்க துறைசார் நிபுணத்துவத்தை வேண்டி நிற்பதாகும். எனவே பேச்சுவார்த்தை விவகாரத்தை கையாள்வதற்கென பேச்சுவார்த்தைக்குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
இக்குழு தமிழ் அரசியல் தலைவர்களையும், துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கியதாக இருப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.
இப்பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வெளியே ஆலோசனைக்குழு ஒன்றும் உருவாக்கப்படல் வேண்டும். சர்வதேச ரீதியாக புலமை வாய்ந்த துறைசார்நிபுணர்களைக் கொண்டு இந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கலாம். புலிகள் இவ்வாறான குழு ஒன்றை உருவாக்கியிருந்தனர்.
எல்லாவற்றை விட முக்கியம் ஒருங்கிணைந்த அணுகு முறையாகும். இதைத்தான் தமிழ் அரசியலில் மருந்துக்குக்கூட காணமுடியவில்லை. துரதிஸ்ட வசமாக பொறுப்புக்கள் தமிழ் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதனால் அவை தேர்தல், கட்சி நலன்களிலிருந்தே விவகாரத்தை அணுக முற்படுகின்றன.
தமிழ்த்தேசியக்கட்சிகள் கன்னை பிரிந்து செயற்படுவதற்கு தேர்தல் , கட்சி நலன்களை விட வேறு எதுவும் காரணமாக இல்லை.
புலம்பெயர் நண்பன் ஒருவன் “கட்சி அரசியலிருந்து மிஞ்சியது தான் தமிழ்த்தேசியத்திற்கு கிடைக்கும்” எனக் கூறியதில் அதிக உண்மை இருப்பது போலவே தெரிகின்றது.
தமிழ் மக்களின் இருப்பைத் தீர்மானிக்கின்ற விடயங்கள் தவிர்த்து ஏனையவற்றில் கட்சிகள் என்னவாவது செய்த கொள்ளட்டும். பேச்சுவார்த்தை விவகாரத்தில் மட்டும் கட்சி அரசியல் இடம் பெறுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இது விடயத்தில் ஒத்துழைக்க மறுக்கும் கட்சிகளை அம்பலப்படுத்தி அரங்கிலிருந்து அகற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சி ஒரு நாடகம். ரணில் விக்கிரமசிங்க இதில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டப்போவதில்லை.
அதற்கான அரசியல் கலாச்சாரமும் தென்னிலங்கையில் இன்னமும் உருவாகவில்லை. “அரகலய” போராட்டத்தின் போது இதற்கான நம்பிக்கை ஒளி சிறிதளவு தோன்றிய போதும் அது வந்த வேகத்திலேயே அணைந்து விட்டது
தென்னிலங்கை இப்போதுள்ள சூழலில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய நிலையில் கூட இல்லை. பிக்குமாரின் சிறிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாமல் ரணில் விக்கிரமசிங்க அடங்கிவிட்டார். சுயநிர்ண சமஷ்டி பற்றிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு இது உகந்த காலம் அல்ல.
தமிழ்த்தரப்பு இதற்காக மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டும் தென்னிலங்கையை அரசியல் ரீதியாக சுற்றி வளைப்பதற்கான மார்க்கங்களைக் கண்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் முக்கியம் ஒருங்கிணைந்த அரசியலே.
-சி.அ.யோதிலிங்கம்–