எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் திடீர் புத்தர் சிலைகளும் பெளத்த விகாரைகளும் முளைத்து வருகின்றன.

போர் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக ஆட்சியை கைப்பற்றிய மகிந்த ராஜபக்ஷ கூட தனது காலத்தில் இவ்வாறு செயற்படவில்லை என கூறும் அளவுக்கு, ரணில் விக்ரமசிங்க திடீர் ஜனாதிபதியானதன் பின்னர், தமிழர் பிரதேசங்களில் திடீரென விகாரைகளும் புத்தர் சிலைகளும் தோன்றுகின்றன.

இதை உணர்வுபூர்வமாக எதிர்த்து குரல் கொடுத்து வருபவர்கள் மக்கள் மாத்திரமே. வடக்கு, கிழக்குவாழ் தமிழ் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் ஏதோ திடீரென தூக்கத்திலிருந்து விழிப்பது போன்று அவ்வப்போது அரசாங்கத்துக்கு எதிராக பேசிவிட்டு, பிறகு தமது அலுவலை பார்க்கச் சென்றுவிடுகின்றனர்.

கோட்டாபய ஆட்சியில் இந்து கலாசார அமைச்சு, கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் விவகார பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆகியன இல்லாதொழிக்கப்பட்டு, அவை அனைத்துமே புத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.

தொல்லியல் திணைக்களமும் இதன் கீழேயே இருப்பதால் அவர்கள் அடையாளம் காட்டும் இடங்களில் புத்த சாசன அமைச்சின் ஆசிர்வாதங்களுடன் பெளத்த பிக்குகளும் இராணுவத்தினரும் இரவோடிரவாக புத்தர் சிலைகளை கொண்டு போய் வைக்கின்றனர்.

ஆனால், ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்ரமசிங்க இது குறித்து அலட்டிக்கொள்வதாக இல்லை. வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்டு வரும் விகாரைகள் குறித்து அவர் வாய் திறக்கவே இல்லை. இதற்கு பலரும் பல காரணங்களை கூறினாலும் ரணில் தனது நல்லாட்சி கால உள்ளூராட்சி தேர்தல் விஞ்ஞாபனப்படியே செயற்படுவது போன்று தெரிகிறது.

பலரும் நல்லாட்சி கால ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்துவிட்டனர் என்றே கூற வேண்டும்.

மேற்படி தேர்தல் விஞ்ஞாபனத்தில் நல்லிணக்கம் என்ற பகுதியில் ‘மத ரீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி’ என்ற தலைப்பின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரம் விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ஒதுக்கீடு என்ற விடயம் உள்ளது.

நல்லாட்சி கால பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வவுனியாவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் இந்த  விடயம் குறித்து அவராலேயே பிரஸ்தாபிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றியிருந்த ரணில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் காலத்தில் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்கள். இன்று இன, மத ஐக்கியமும் நல்லுறவும் ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

ஆயிரம் விகாரைகள் விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாய் திறக்கவேயில்லை. அவர்கள் ரணில் ஆதரவாளர்களாக இருந்துகொண்டு அமைச்சுப் பதவிகள் எதையும் பெறாமல் அதை விட அதிகமான சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

அது தேர்தல் விஞ்ஞாபனம் தானே என்று அமைதியாகவே இருந்துவிட்டனர். ஆனால், அந்த விடயத்தை தான் இப்போது ரணில் செயற்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தனது தந்தை ரட்ணசிறி விக்ரமநாயக்கவை விட தீவிர பெளத்தராக இருக்கும் அதேவேளை தமிழர் வழிபாட்டு பிரதேசங்களிலும், சைவ ஆலயங்கள் அமைந்த இடங்களிலும் விகாரைகள் அமைப்பதை தனது பிரதான இலக்காக கொண்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த ஆயிரம் விகாரைகள் திட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மறைமுக ஆதரவை வழங்கியமை உண்மையான விடயம். ஏனென்றால், அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதரித்தனர்.

இதற்கு சஜித் பிரேமதாசவும் முன்னின்று செயற்பட்டார். அவர் நல்லாட்சி காலத்தில் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை மற்றும் நாவற்குழி பகுதி விகாரைகள் புதுப்பொலிவு பெற காரணகர்த்தா சஜித் பிரேமதாசவே. மேலும், இவரது அமைச்சின் கீழேயே அக்காலத்தில் தொல்லியல் திணைக்களமும் இருந்தது.

நல்லாட்சி காலத்திலேயே இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து வலி வடக்கு பிரதேசத்தின் சில இடங்கள் விடுவிக்கப்பட்டன.

அவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் அமைந்திருந்த முருகன் ஆலய வளவில் இராணுவத்தினர் தமது வழிபாட்டுக்காக  பெளத்த விகாரையொன்றை அமைத்தனர்.

ஆனால், இதை எதிர்த்து அப்போது வடக்கு, கிழக்குவாழ் தமிழ்க் கட்சிகளோ அல்லது கட்சித் தலைவர்களோ குரல் கொடுக்கவே இல்லை.

மாறாக, அதை வரவேற்று நல்லிணக்க செயற்பாடு என புன்முறுவல் பூத்தனர். ஆனால், மறுபக்கம் இதை எதிர்த்து இந்து மத அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முதல் நபர்களாக போய் நின்றுகொண்டனர்.

அப்படி ஒரு போராட்டம் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது.

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை முன்வைத்து இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம், நல்லை ஆதீனம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

ஆனால், இவை எல்லாம் அதன் பிறகு இடம்பெற்ற நாட்டின் அரசியல் நெருக்கடிகளில் மறக்கடிக்கப்பட்டன.

எனினும், ஆயிரம் விகாரைகள் என்ற திட்டம் ரணிலின் மனதில் பதிந்துபோனது என்றே கூற வேண்டும். அல்லது அப்போது அதற்கு போடப்பட்ட விதை தான் இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கின்றதோ தெரியவில்லை.

ரணில் விக்ரமசிங்க சிறந்த ராஜதந்திரி மாத்திரமல்லாது, தனது மனதில் நினைத்ததை செய்தே தீரும் பிடிவாத குணம் மிக்கவர் என்பதை அரசியல் உலகமே அறியும்.

ஆகவே நல்லாட்சி காலத்தில் தன்னால் செய்ய முடியாது போனதை இப்போது ஜனாதிபதியானவுடன் செய்ய ஆரம்பித்துவிட்டாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டுமானால், வடக்கு, கிழக்குவாழ் மக்களின் வாக்குகளை விட அதற்கு வெளியே வாழ்ந்து வரும் சிங்கள பெளத்தர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை அமைத்தால் போதுமே…… ஏனைய பிரதேசங்களில் உள்ள கடும் போக்கு சிங்கள மக்கள் தாராளமாக அவருக்கு வாக்குகளை அள்ளிப் போட்டு விடுவார்களே….. எது எப்படியானாலும், தற்போது நிலவி வரும் இந்த பிரச்சினையின் பின்னணியில் ஜனாதிபதி ரணிலின் ஆசிர்வாதம் தாராளமாக இருக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

சி.சி.என்.

Share.
Leave A Reply