ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது மிக முக்கியமாக எதிர்வரும் 2024 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய 10 வருடங்களுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை பெறுவதற்கான புதிய வழிகாட்டல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகார சேவையின் பிரதி நிறைவேற்று பணிப்பாளர் பயோலா பம்பலோனி இந்த அமர்வில் பங்கேற்றமை முக்கிய விடயமாகும்.

அதன்படி இந்த வருடத்தில் இருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்து விடுமா என்ற விடயம் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற பின்னணியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை தீர்க்கமானதாகும்.

இவ்வருட இறுதியுடன் நிறைவு

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பொறுத்தவரையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் 10 வருட காலத்திட்டத்தை நிறைவு செய்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பமான தற்போதைய 10 வருட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை திட்டம் இவ்வருடம் ஜணவரியுடன் நிறைவடைகின்றது.

எனவே அடுத்த 10 வருட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கான காலம் 2024 ஆம் ஆண்டிலிருந்து 2033 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும்.

அதற்கு இலங்கை 2023 மூன்றாம் ஆண்டு அதாவது இவ்வருடம் டிசம்பர் மாதம் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டு முதலில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைத்தது.

எனினும் 2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது தலைமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகிடைத்தது.

அது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் 10 வருட காலப்பகுதியை நிறைவு செய்கிறது. எனவே அடுத்த 10 வருட திட்டத்துக்குள் இலங்கை உள்வரவேண்டுமாயின் இலங்கை மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைஇலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்றது.

குறைந்த வருமானம் பெறுகின்ற நாடுகளுக்கு வழங்கப்படும் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை ஒரு நாட்டுக்கு கிடைக்கும் பட்சத்தில் அந்த நாட்டில் இருந்து ஆடைக்கைத்தொழில் உற்பத்தி பொருட்களை எந்தவிதமான தீர்வை வரிகளும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யலாம்.

கிட்டத்தட்ட இலங்கைக்கு வருடம் ஒன்றுக்கு இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை காரணமாக 630 மில்லியன் டொலர்கள் இலாபம் கிடைக்கின்றது.

முதலீடுகளுக்கு முக்கியம்

அதுமட்டுமின்றி இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை திட்டத்துக்குள் வந்துவிட்டால் வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரும்.

அதாவது ஆடைக் கைதொழில் துறையில் வெளிநாடுகள் முதலீடு செய்வதற்கு முன்வரும். அவ்வாறு ஆடை தொழிலில் இலங்கையில் வெளிநாடுகள் முதலீடு செய்யும்போது அது இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீடாக அமையும்.

அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு நன்மை பயப்பதுடன் மொத்த தேசிய உற்பத்திக்கும் பங்களிப்பு செய்யும்.

அதேபோன்று உள்நாட்டில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். அதனுடாக வேலையின்மை குறைவதுடன் வறுமை நிலை குறைவடைவதற்கும் ஏதுவாகும்.

இந்நிலையில் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இழக்கப்பட்டால் அது குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும்.

முக்கியமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் இந்த ஆடை கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு தயங்கும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இல்லாவிடின் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படலாம். மாறாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படுகின்ற நாடுகளுக்கு அந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சென்றுவிடும் சாத்தியம் இருக்கின்றது.

27 நிபந்தனைகள்

எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இலங்கையை பொறுத்தவரையில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கின்றது.

அதுவும் இந்த டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மிக முக்கியத்துவமிக்கதாக அமையும்.

ஆனால் தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு எவ்வாறான தடைகள் காணப்படுகின்றன என்பதை பார்க்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நாட்டுக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்கும் போது 27 நிபந்தனைகளை முன்வைக்கும்.

அந்த நிபந்தனைகளை அந்த நாடு நிறைவேற்ற வேண்டும். மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகள் காணப்படும். அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

முன்னர் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கும்போது பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படவேண்டும் 4 என்ற நிபந்தனை காணப்பட்டது. தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

ஹர்ஷவின் எச்சரிக்கை

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா இலங்கை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்க வேண்டி ஏற்படும்.

அது மட்டுமின்றி மனித உரிமை விடயத்தையும் பார்க்கவேண்டும். இலங்கை தேர்தல்களை நடத்தாமல் இருக்கின்றது.

தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழக்கவேண்டி ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் என்ன கூறுகிறார்?

இது தொடர்பில் அண்மையில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சய்பி கருத்து வெளியிட்டிருந்தார்.

‘’ தற்போது நடைமுறையில் இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரி சலுகை நிகழ்ச்சித் திட்டமானது இந்த வருடத்துடன் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த வருட இறுதியில் 10 வருடங்கள் நிறைவடைகின்றன. அப்போது நாம் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவோம்.

இலங்கை தனது கடப்பாடுகளை செய்கின்றதா அல்லது இந்த சலுகையை நிறுத்த வேண்டுமா என்பது தொடர்பாக அப்போது ஆராயப்படும். என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது.

எனவே இலங்கை இவ்வருட இறுதியில் ஜி.எஸ்.பிளஸ் சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். புதிய 10 கூருட திட்டத்தில் தற்போது இருப்பதை விட புதிய கடப்பாடுகள் முன்வைக்கப்படலாம்.

புதிய கடப்பாடுகள் முன்வைக்கப்படலாம். தற்போது 27 விடயங்கள் காணப்படுகின்றன. ஒன்று அல்லது இரண்டு அதிகரிக்கலாம்.

2017 ஆம் ஆண்டு இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறும்போது பயங்கரவாத தடை சட்டத்தை மீளாய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தது. நாம் சட்டத்தை நீக்குமாறு கூறவில்லை.

மாறாக மீளாய்வு செய்யுமாறேகூறுகின்றோம். எங்களிடமும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் காணப்படுகிறது.

ஆனால் எந்த ஒரு சட்டமும் சர்வதேச தரத்துக்குஅமைவாக இருக்கவேண்டும் ‘’ இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அண்மையில் கேசரியிடம் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையை பொறுத்தவரையில் ஆடைக் கைத்தொழில் மூலமான டொலர் வருமானம் மிக முக்கியமாகும்.

இந்த துறையில் நேரடியாக மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேர் தொழில் புரிகின்றனர். அதன்படி ஆடைக் கைத்தொழில் பொருளாதாரத்தை எவ்வாறான பங்களிப்பை வழங்குகின்றது என்பதும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வர சலுகை எவ்வளவு முக்கியம் என்பதும் தெரிகின்றது.மீட்சிக்கு மிக முக்கியம்

அந்த வகையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய தாக்கம் செலுத்தக்கூடிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்குமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

தற்போது நிலைமையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மிக முக்கியமாக இருக்கின்றது. அதனூடாக இலங்கை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதன் ஊடாக தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும். இலங்கையில் தற்போது வறுமை வீதம் அதிகரித்திருக்கின்றது. 13 வீதமாக உள்ள வறுமை 25 வீதமாக உயர்வடையும் என்று உலக வங்கி எதிர்வுக்கூறியுள்ளது.

எனவே வறுமையை குறைப்பதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கும் டொலர் இருப்பை அதிகரித்துக் கொள்வதற்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மிக முக்கியமாக இருக்கின்றது.

எனவே இந்த விடயத்தில் இருக்கின்ற தடைகளை, சவால்களை கடந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை இழகப்படுமா? இலங்கையிடம் இருந்து அது பறிபோகுமா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுதப்பப்படுகிறது. அதற்கான விடை 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தெரியும்.

இது தொடர்பான பேச்சுக்களை நிதியமைச்சும் வெளிவிவகார அமைச்சும் முன்னெடுக்கும். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எவ்வாறான நகர்வுகளை இந்த விடயத்தில் முன்னெடுக்கப்போகின்றார் என்பதும் முக்கியமாகவே உள்ளது.

-ரொபட் அன்டனி

Share.
Leave A Reply