தஞ்சாவூர் : தஞ்சையில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் இன்று பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் விஷச் சாராயம் குடித்த 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது குடித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அதற்கு எதிரே உள்ள பாரில் டாஸ்மாக் கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்பே சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மற்றும் விகேன் ஆகிய இருவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டதால் அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குப்புசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது விவேக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள அரசு அனுமதி பெற்ற பாரில், அனுமதி நேரத்திற்கு முன்பாக கள்ளச் சந்தையில் மதுபானம் வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பார் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அருந்திய மதுபானம் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கு ஆய்வுக்குச் சென்ற வட்டாட்சியரை அப்பகுதியில் இருந்தவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது தஞ்சாவூரில் இருவர் பாரில் விற்கப்பட்ட மதுபானத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.