♠ விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர் லெனின் கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு பணம் அனுப்பினார்.
♠காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார்.
குளச்சல்: மணவாளக்குறிச்சியை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (வயது 29). என்ஜினீயரிங் படித்துள்ள லெனின் கிராஸ், வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார்,
அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவும் நடத்தி வந்தார். இந்த குழுவில் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசி (24) என்ற பெண்ணும் இடம் பெற்றிருந்தார்.
குழுவில் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் லெனின் கிராசுக்கும், ரிமோலின் விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பின்பு வெளிநாட்டில் இருந்து லெனின் கிராஸ் ஊருக்கு வந்ததும், அவர் ரிமோலின் விண்ணரசியை நேரில் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றனர்.
அப்போது ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்தவதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்தார். விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர், ரிமோலின் விண்ணரசிக்கு அங்கிருந்து செலவுக்கு பணமும் அனுப்பி கொடுத்தார்.
இதனால் காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார்.
லெனின் கிராஸ் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்ற தகவல், அவரது பெற்றோருக்கு தெரியாது. இதனால் அவர்கள் லெனின் கிராசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர்.
இந்த தகவல் லெனின் கிராசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடந்த வாரம் இவர்களின் திருமணம் ஆலயத்தில் நடக்க இருந்தது. இதற்காக லெனின் கிராஸ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவர்கள் மூலம் இந்த தகவல் பணக்குடியில் இருந்த ரிமோலின் விண்ணரசிக்கு தெரியவந்தது.
பதறிபோன அவர் அங்கிருந்து காதலனின் திருமணம் நடக்க இருந்த ஆலயத்திற்கு விரைந்து வந்தார். திருமண சடங்குகள் தொடங்கும் முன்பு ஆலய பாதிரியாரை சந்தித்து தானும், லெனின் கிராசும் காதலிக்கும் விபரத்தை தெரிவித்தார்.
லெனின் கிராஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றதையும், அங்கு இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் காட்டினார்.
இதனை பார்த்ததும், ஆலய பாதிரியார், லெனின் கிராசுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.
இதையடுத்து ரிமோலின் விண்ணரசி குளச்சல் போலீஸ் நிலையம் சென்று அங்கும் புகார் கொடுத்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.
இதற்கிடையே லெனின் கிராஸ், காதலி ரிமோலின் விண்ணரசியை அருகில் அழைத்து அவரது செல்போனை வாங்கி கொண்டார்.
பின்னர் அதில் அவர்கள் இருவரும் இணைந்த எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டார்.
அதன்பின்பு அந்த செல்போனை ரிமோலின் விண்ணரசியிடம் கொடுத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் நின்று கொண்டார்.
அதன்பின்பு போலீசார், ரிமோலின் விண்ணரசியிடம் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை காட்டுமாறு கூறியபோதுதான், அதில் இருந்த படங்கள் அழிக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே இடிந்து போகாமல் அவர் போட்டோ ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அழிக்கப்பட்ட படங்களை மீண்டும் மீட்டெடுத்தார்.
அதனை போலீசாரிடம் காட்டியபோது, லெனின் கிராஸ் அதிர்ந்து போனார். உடனே அவர் ரிமோலின் விண்ணரசியை காதலித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆலயம் முன்பிருந்த குருசடியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
காதலித்து ஏமாற்றிய காதலனை போராடி கரம் பிடித்த ரிமோலின் விண்ணரசியின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.