வெள்ளிக்கிழமை, பாக்முட்டில் உக்ரேனிய இராணுவத்திற்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவிக்கையில், நேட்டோ கூட்டணி உறுப்பு நாடுகள் உக்ரேனுக்கு F-16 ரக போர் விமானங்களை அனுப்புவதை அமெரிக்கா அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

உலக ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் ஒரு பொறுப்பற்ற போர் விரிவாக்கத்தை அறிவித்த போது, அது ஹிரோஷிமாவில் அமெரிக்காவின் போர்க்குற்றத்தால் பலியானவர்களைக் கொடூரமாக ஏளனப்படுத்தும் விதத்தில், முகஞ்சுளிக்க வைப்பதாக மற்றும் வெறுப்பூட்டுவதாக இருந்தது.

இந்தப் போர் அணுஆயுத ‘பிரளயத்துடன்’ உலகை அச்சுறுத்துகிறது என்று கடந்தாண்டு தான் பைடென் தெரிவித்தார்.

F-16 மற்றும் பிற போர் விமானங்களை அனுப்புவது, ரஷ்யாவினால் ஏற்றுக் கொள்ள முடியாத மற்றும் சகித்துக் கொள்ளவியலாத சூழலை உருவாக்கும். 500 மைல்களுக்கும் அதிகமான வீச்செல்லையைக் கொண்ட இந்த F-16 ரகப் போர் விமானங்கள், 1,200 இக்கும் அதிகமான தூரத்திற்கு ஏவுகணைகளை அனுப்பக்கூடிய திறன் கொண்டவை. இது மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பர்க்கை உக்ரேன் இராணுவத்தின் தாக்கக்கூடிய தூரத்திற்குள் கொண்டு வருகிறது.

மிக முக்கியமாக, F-16 ரகப் போர் விமானங்கள் சாதுர்யமான அணுஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடியவை. இது இன்னும் அதிக ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. F-16 ரகப் போர் விமானங்கள் கிழக்கு நோக்கி பறக்கும் போது, அவை எங்கே செல்கின்றன அல்லது அவை எதை ஏந்தி உள்ளன என்பது ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியாது.

இதற்கு பதிலடியாக ரஷ்யா போரை விரிவாக்க நிர்பந்திக்கப்படும். இது நேட்டோ சக்திகளிடம் இருந்து இன்னும் அதிக ஆக்ரோஷமான விடையிறுப்புக்கு களம் அமைக்கும்.

சீனா முன்மொழிந்த ஒரு சமாதான தீர்வு உட்பட, எந்தவொரு போர் நிறுத்தத்தையும் அல்லது ஒரு சமாதான தீர்வையும் பைடென் நிர்வாகம் நிராகரித்துள்ளது.

மாறாக, பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கு முன்பிருந்து திட்டமிடப்பட்டு வந்த திட்டங்களுக்கு ஏற்ப, வெள்ளை மாளிகை இராணுவரீதியில் ரஷ்யாவை தோற்கடிக்க அழுத்தமளிப்பதில் உறுதியாக உள்ளது.

இறுதியில் F-16 ரகப் போர் விமானங்களை அனுப்புவதென்ற முடிவை எடுக்க பைடென் ‘தயக்கத்துடன்’ ஒப்புக் கொண்டதும், இந்த முடிவு இந்த வாரம் தான் எடுக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ விவரிப்புகள் குறிப்பிடுகின்றன.

சான்றாக, வாஷிங்டன் போஸ்ட் எழுதியது, ‘ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனுக்கு மேலே வானில் F-16 போர் விமானங்களைப் பறக்கச் செய்வதே, ஓராண்டுக்கும் மேலாக, கியெவின் புனித கோட்பாடாக இருந்துள்ளது… திடீரென்று, அதிபர் பைடென் சரி என்று கூறியுள்ளார்.

‘இந்தத் திருப்பமானது, ஐரோப்பிய தலைநகரங்களுக்கு சமீபத்தில் பயணம் செய்து வந்திருந்த உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியின், காங்கிரஸ் சபையின் மற்றும் கூட்டணி நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவு என்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.’

இது ஒரு பொய். உண்மையில் வாஷிங்டனில் நடந்த முடிவெடுக்கும் செயல்முறையை மூடிமறைப்பதே இதன் நோக்கமாக உள்ளது.

இந்தப் போரை விரிவாக்க பைடென் நிர்வாகம் ஒரு முறையான திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதன் எல்லா நடவடிக்கைகளும் அரைவாசி தன்னிச்சையாகவும், வெளிப்புற ‘அழுத்தத்திற்கு’ எதிர்வினையாற்றும் விடையிறுப்புகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன.

உண்மையில், உக்ரேனுக்கு F-16 ரகப் போர் விமானங்களை அனுப்ப ஏறக்குறைய ஓராண்டாகவே அமெரிக்கா செயலூக்கத்துடன் தயாரிப்புகள் செய்து வந்துள்ளது.

உக்ரேனியர்களுக்குப் போர் விமானங்களை வழங்க’ பென்டகன் விவாதித்து வருவதை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி உறுதிப்படுத்தியதையும், உக்ரேனுக்கு அமெரிக்க-நேட்டோ போர் விமானங்களை அனுப்ப ‘விவாதங்கள் நடந்து வருகின்றன’ என்று விமானப் படையின் ஜெனரல் சார்லஸ் க்யூ. பிரௌன் ஜூனியர் வலியுறுத்தியதையும், ஜூலை 2022 இல், உலக சோசலிச வலைத்தளம் குறிப்பிட்டிருந்தது.

Abrams tanks for Ukraine

மூன்று மாதங்களுக்கு முன்னர், ரஷ்யாவுக்கு எதிராக ஆப்ராம்ஸ் யுத்த டாங்கிகளை அமெரிக்கா அனுப்பும் என்று பைடென் அறிவித்ததைத் தொடர்ந்து, WSWS குறிப்பிடுகையில், அமெரிக்கா உக்ரேனுக்கு F-16 ரகப் போர் விமானங்களை அனுப்பாது என்ற பைடெனின் உறுதியான அறிவிப்பு இருந்தாலும், அவ்வாறு செய்வதற்கான இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது.

நேட்டோவுக்குள் அரசியல் விவகாரங்களைச் செயல்படுத்துவதும், ஐயுறவான மக்களிடையே இந்த முடிவை விற்கப் பொய்களின் ஊடகப் பிரச்சார நடவடிக்கையைத் தொடங்குவதும் தவிர வேறெதுவும் மீதமில்லை,’ என்று குறிப்பிட்டது.

துல்லியமாக இந்த நிகழ்வுபோக்கு தான் கடந்த வாரத்தில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

போரை விரிவாக்க மாட்டோம் என்ற அவர் வாக்குறுதிகள் ஒவ்வொன்றிலும், அமெரிக்க அதிபர் வேண்டுமென்றே மக்களுக்குப் பொய்யுரைத்தார் என்ற அடிப்படை உண்மையை மூடிமறைப்பதே ஊடகங்களில் கேலிக்கூத்தான நோக்கமாக உள்ளது.

‘உக்ரேனுக்கு அமெரிக்கா F-16 ரகப் போர்விமானங்களை வழங்குமா?’ என்று, ஜனவரி 2023 இல், பைடெனிடம் கேட்கப்பட்ட போது, ‘வழங்காது’ என்று அவர் பதிலளித்தார்.

மார்ச் 2022 இல் பைடென் பின்வருமாறு வலியுறுத்தினார், ‘நாம் தாக்கும் தளவாடங்களையும், அமெரிக்க விமானிகள் மற்றும் அமெரிக்கக் குழுவுடன் விமானங்கள், டாங்கிகள் மற்றும் இரயில்களையும் அனுப்ப இருக்கிறோம் என்ற கருத்து, சரியாக புரிந்துக் கொள்ளுங்கள் ― உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், நீங்கள் என்ன சொன்னாலும் சரி ― அது மூன்றாம் உலகப் போர் என்று அழைக்கப்படும்,’ என்றார்.

ஓராண்டுக்குப் பின்னர், பணியில் உள்ள குறைந்தது 100 அமெரிக்க துருப்புக்கள் உக்ரேனில் நிலைகொண்டுள்ளனர், அத்துடன் டசின் கணக்கான அமெரிக்க டாங்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கவச வாகனங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க போர் விமானங்கள் அனுப்பப்பட உள்ளன.

ரஷ்யாவின் முக்கிய நகரங்களைத் தாக்கும் வீச்செலையில் கொண்டு வரும் ஆயுதங்களான, அணுசக்தி திறன் கொண்ட ஜெட் விமானங்களை உக்ரேனுக்கு வழங்குவதன் மூலம், நேட்டோ கூட்டணியில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் ரஷ்யாவுடனான ஓர் அணுஆயுதப் போரில் மில்லியன் கணக்கான அவற்றின் சொந்த குடிமக்கள் கொல்லப்படும் ஆபத்தை முன்னெடுக்கின்றன என்பது அவற்றுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த ஜெட் விமானங்களை அனுப்புவதற்கான இந்த முக்கிய முடிவை எடுக்க நேட்டோ கூட்டணியின் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்பு நாடுகளின் ஒப்புதல் தேவை என்கின்ற நிலையில், இது பல மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச்சில், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஜ் குறுகிய கால அறிவிப்பில் வாஷிங்டனுக்குச் சென்று பைடெனை மட்டும் பிரத்யேகமாகச் சந்தித்தார். அவர் மீண்டும் நேரே ஜேர்மனிக்குத் திரும்பி வருவதற்கு முன்னர், அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று அமெரிக்க மக்களுக்கோ அல்லது ஜேர்மன் மக்களுக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இத்தகைய கூட்டங்களில் தான் இவ்விதமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பின்னர் அவை தகுந்த நேரத்தில், உரிய முறையில் தொகுக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு விட்டதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.

ஆனால் இது ஒரு அச்சுறுத்தலான கேள்வியை எழுப்புகிறது. உக்ரேனுக்கு F-16 ரக விமானங்களை அனுப்பும் முடிவு சில மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டிருந்தால், அது உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி படைகள் இப்போது செயல்படுவதை விட சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ஒரு நேரத்திலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், உக்ரேனின் தற்பெருமைக்கான ஓர் எதிர்தாக்குதல் உருப்பெறத் தவறிய நிலைமைகளின் கீழ், பக்முட் மூலோபாய நகரம் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டு விட்டதாக சனிக்கிழமை ரஷ்ய படைகள் அறிவித்தன.

இந்த சமீபத்திய தோல்விக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கும்? வாஷிங்டனால் இந்தப் போரை இன்னும் எவ்வளவு விரிவாக்க முடியும்? உக்ரேனுக்கு அதிநவீன போர் விமானங்கள் அனுப்பப்பட உள்ள நிலையில், உக்ரேனுக்குப் பைடென் ‘தற்காப்பு’ அணுஆயுதங்களை அனுப்ப வேண்டும் அல்லது இந்தச் சண்டையில் வான்வழியிலோ அல்லது தரைப்படை மூலமாகவோ தலையிட நேட்டோ துருப்புகளையே கூட நேரடியாக அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் பத்திரிகைகளில் எழும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?

உண்மையில் இத்தகைய விவாதங்கள் தான், ஜி7 நாடுகள் கூட்டத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றன.

வார இறுதியில் நடந்த இந்த உச்சி மாநாடு இரண்டு நோக்கங்களுக்கு உதவியது: ஒன்று, எந்த அதிருப்தியாளர்களையும் ஏகாதிபத்திய சதிகாரர்களின் முகாமில் கொண்டு வருவதற்கும், இரண்டாவதாக, அடுத்து என்ன செய்வது என்ற முக்கிய கேள்வியை விவாதிப்பதற்கும் உதவியது.

இந்தப் போரின் முதலாம் ஆண்டு நிறைவின் போது WSWS எச்சரித்தது போல், ‘’பைடென் நிர்வாகம் பின்வாங்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஏனென்றால் அவ்வாறு செய்வது, அதன் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் சரி செய்யவியலாதவாறு சீர்கெடுத்து விடும் என்பதோடு, நேட்டோ உடைவுக்கு வழிவகுக்கும். இந்தப் போரில் வெற்றி பெறுவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஓர் உயிர் ஆதார கேள்வியாக ஆகி உள்ளது.”

இந்தப் போரில் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவதில் அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் இந்த எல்லைகளுக்குச் செல்லாது என்று எதுவும் இல்லை.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ள நூறாயிரக் கணக்கான உக்ரேனியர்களின் உயிர்களைப் போலவே அமெரிக்க குடிமக்களின் உயிர்களையும் அது மதிப்பற்றதாகக் கருதுகிறது என்பதை கோவிட்-19 பெருந்தொற்றுக்கான இந்த அரசாங்கத்தின் விடையிறுப்பு எடுத்துக் காட்டியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய இரத்த ஆறுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது, இது ஒப்பீட்டளவில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்தவற்றையே ஒன்றுமில்லாமல் செய்யப் போகிறது.

தொழிலாள வர்க்கம், இந்தப் போர் விரிவாக்கத்திற்கு வர்க்கப் போராட்டத்தை விரிவாக்குவதன் மூலம் விடையிறுக்க வேண்டும். மீள்ஆயுதமயப்படுத்தலுக்குப் பணம் ஒதுக்க தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறைக்கப்பட வேண்டும் என்று அறிவித்து வரும் அரசாங்கங்களுக்கு எதிராக, உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைந்து வருகிறார்கள்.

உக்ரேனில் போரை நிறுத்த வேண்டும் என்ற ஒரு மையக் கோரிக்கையுடன், சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்.

https://www.wsws.org

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

Share.
Leave A Reply