கனடா நாடாளுமன்றத்தில் அதன் எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தமிழர் இனப்படுகொலை தினம் கடைப்பிடிப்பு (மே 18) முன்மொழிவு தொடர்பான அறிவிப்பை கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோ வெளியிட்ட விவகாரத்தில் தனது கடுமையான எதிர்ப்பை இலங்கை தெரிவித்துள்ளது.

இது தற்போது அந்த இரு நாடுகளுக்கும் இடையில் ராஜீய அளவிலான மோதலாக உருப்பெற்றுள்ளது.

கனடா பிரதமர் தமிழர் இனப்படுகொலை தினமாக மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பை மே 23ஆம் தேதி வெளியிட்ட பிறகு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான கனடா தூதுவரை நேரில் அழைத்து, கனடா அரசின் அறிவிப்பை முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.

இலங்கை எம்.பி உதய கம்மன்பில இந்த விஷயத்தில் கனடாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கையில் நடக்காத தமிழ் இனப்படுகொலைக்காக ஒரு தேதியை ஒதுக்குவதற்கு பதிலாக, கனடாவில் ஆதிவாசி தினம் கடைப்பிடிக்கப்படும் ஜுன் 21ஆம் தேதியை, கனடா ஆதிவாசி இனப்படுகொலை தினமாக பெயரிட வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்;.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

ஜஸ்டின் ட்ரூடோ, கனடா பிரதமர்

ஜஸ்டின் ட்ரூடோ இது பற்றி தமது நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், 14 வருடங்களுக்கு முன்பு நிறைவு பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தின் கடைசி நாட்களில் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

‘இலங்கையில் 14 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுத போராட்டத்தில் நடந்த உயிரிழப்புக்களை நாம் இன்று நினைவு கூர்கிறோம். முள்ளிவாய்க்காலில் படுகொலை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை இழந்ததுடன், பலர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர் அல்லது இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரை பாதுகாத்துக்கொண்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்து இந்த நாளை நாம் நினைவு கூர்கிறோம்.”

”பல ஆண்டுகளாக நாடு முழுவதுமுள்ள சமூகங்களில் நான் சந்தித்த பலர் உள்ளிட்ட, மோதல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் – கனேடியர்களின் கதைகள், மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நினைவூட்டியது,” என்று ட்ரூடோ பேசினார்.

மேலும்,”2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம், எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்ததுடன், நாட்டின் மனித உரிமை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சர்ச்சைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரினோம்.”

”எதிர்வரும் ஆண்டுகளில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக, இலங்கைக்குள் சமய சுதந்திரம், நம்பிக்கை, பன்மைத்துவ சுதந்திரம் ஆகியவற்றை கோருவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையிலுள்ள ஏனைய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கனடா உலகளாவிய தலைமைத்துவத்தை வழங்குகின்றது.

மேலும், 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மனித உரிமை மீறலுக்கு பதிலளிக்கும் வகையில், எமது அரசாங்கம், இலங்கை அரச அதிகாரிகள் நால்வருக்கு எதிராக தடைகளை விதித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

”தமிழ் – கனேடியகள் நம் நாட்டிற்காக செய்த மற்றும் தொடர்ந்தும் செய்து வரும் பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து கனேடியர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அறிந்துக்கொள்ளுமாறும், துன்பப்படும் அல்லது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் இணைந்து ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் நான் அனைவரையும் ஊக்குவிக்கி்றேன்,” என கனடா பிரதமர் தெரிவித்தார்.


இலங்கை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

‘இலங்கையில் இடம்பெற்ற சிவில் போரின் போது, இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவினால் வெளியிடப்பட்ட கருத்தானது, அரசியல் சார்பு கொண்ட சர்ச்சைக்குரிய கருத்து என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தானது கனடாவின் உள்ளக அரசியல் தேவையை கருத்திற் கொண்டு வெளியிடப்பட்ட கருத்து என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மூன்று தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்தியில், இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், கனடா பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இந்த கருத்தானது, பொய்யானது மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு காரணத்தினால், இலங்கையர்கள் துருவப்படுத்தப்படலாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ”இனப்படுகொலை” இலங்கையினால் நடத்தப்பட்டது என ஒருதலைபட்சமாக முன்வைக்கப்படும் போலி குற்றச்சாட்டுக்கள், புலம்பெயர்ந்து வாழும் பிரிவினைவாத சிறுபான்மையினரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவானது என வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடா பிரதமரினால் முன்வைக்கப்பட்ட கருத்து தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

மேற்குலக நாடுகளிலுள்ள பிரிவினைவாதிகள், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள், நிதி சேகரிப்பாளர்களுடன் விளையாடும் தலைவர்கள், அரசியல் லாபத்திற்காக கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர், உண்மையான வரலாற்றை தேடி பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் எமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை தொடர்ந்தும் தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல முடியும்.

இலங்கை குறித்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பிற்குள் வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என மாற்று கொள்கைக்கான மத்திய நிலையத்தின் மூத்த நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிபிசிக்கு தெரிவிக்கின்றார்.

தமிழர் இனப்படுகொலை தினத்திற்காக கனடா பிரதமரால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”அவர்களது நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் கனடா அரசாங்கத்திற்கு கூறியுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, பிரதமர் இதனைக் கூறியுள்ளார்”

”இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாது.”

”எனினும், அங்குள்ள தமிழ் பிரஜைகள் இந்த விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளனர். அந்த எண்ணப்பாட்டையே ஏற்படுத்தியுள்ளனர். அதுவே அவர்களின் நிலைப்பாடாக காணப்படுகின்றது.

இந்த தலைப்பு தொடர்பில் வெவ்வேறு எண்ணங்கள் இருக்கக்கூடும். நினைத்ததை பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் கூறுவதை நிராகரிப்பதற்கு எமக்கு உரிமை உள்ளது.”

”இதனை தீர்ப்பதற்கு இலங்கையில் வழக்கு தாக்கல் செய்து, குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து தீர்க்க வேண்டும். இல்லையென்றால், சர்வதேச ரீதியில் தகுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

”இலங்கை இதற்கு முகம் கொடுக்க தவறும் பட்சத்;தில், இதனை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது தான் நடக்கக்கூடும்.

நாம் நடவடிக்கை எடுப்போமாயின், நாம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோமாயின், நாம் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்போமாயின், சர்வதேச ரீதியில் எந்தவொரு பிரச்னையும் கிடையாது. எனினும், நாம் ஒன்றையும் செய்யாவிடின், சர்வதேச மட்டத்திற்கு செல்லக்கூடும்” என அவர் கூறுகின்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டீன் டரூடோ, தமிழ் மக்கள் தொடர்பில் அபூர்வமான அனுதாபம் கொள்ளவில்லை என்பதுடன், கனடா நாடாளுமன்றத்தில் 28 ஆசனங்களையும் வெற்றிக் கொள்ள கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகள் அடிப்படையாகக் கொண்டுள்ளமையினால், அந்த வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக முதலை கண்ணீர் வடிப்பதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்;.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜுன் மாதம் 21ம் தேதியை இனப்படுகொலை தினமாக பிரகடனப்படுத்துமாறு கனேடிய ஆதிவாசிகள் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

”ஆதிவாசிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் கனடா வரலாற்று முழுவதும் மீறப்பட்டுள்ளன. கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், மை காய்வதற்கு முன்னரே கிழித்தெறியப்பட்டன.”

கனடாவின் ஒடோரியோவில் நடந்த மே 18 விழிப்புணர்வு இயக்கம் (கோப்புப்படம்)

”நான் இதனை கூறவில்லை. கால் குயின் என்கின்ற கனேடிய ஆதிவாசிகளின் தலைவரே இதனை கூறுகின்றார்”

”பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள கம்லூப்ஸ் ஆதிவாசிகளின் பாடசாலை வளாகத்தில் 2021ம் ஆண்டு மனித புதைக்குழியொன்று கண்டுபிடிக்கப்பட்டது”

”அதில் 215 பாடசாலை மாணவர்களின் சடலங்கள் காணப்பட்டன. மூன்று வயது குழந்தைகளின் சடலங்களும் காணப்பட்டன”

”ஆதிவாசிகளின் குடியிருப்பு பாடசாலை என்றால் என்ன? ஆதிவாசி குழந்தைகளை தமது கலாசாரத்திற்கு இழுத்தெடுத்து, ஆதிவாசிகளை கனடாவிலிருந்து விரட்டுவதற்காக, கனடா அரசாங்கம் லட்சக்கணக்கான ஆதிவாசி குழந்தைகளை வலுக்கட்டாயமாக கடத்தி, இந்த குடியிருப்பு பாடசாலைக்கு அழைத்து வந்தார்கள்.”

”அவர்கள் ஐரோப்பிய கலாசாரத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். இந்த குடியிருப்பு பாடசாலை 1870ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1996 வரை நடத்திச் செல்லப்பட்டது.”

”அதனால், நடத்தப்பட்டாத தமிழ் இனப்படுகொலைக்காக மே 18ம் தேதியை ஒதுக்குவதற்கு பதிலாக, கனடாவின் ஆதிவாசி தினமான ஜுன் 21ம் தேதியை கனடா ஆதிவாசி இனப்படுகொலை தினமாக பெயரிடுமாறு நாம் யோசனையொன்றை முன்வைக்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply