வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படுமா? சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் மீள கட்டியெழுப்பப்படுவார்களா? அவர்களுக்கு விடிவுக் காலம் பிறக்குமா? இது கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற முக்கிய விடயமாக இருக்கிறது.
வரலாற்றில் மிக அதிகமான வட்டி வீத உயர்வு தற்போது வங்கிகளில் காணப்படுகிறது. வட்டி வீதங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக, கடந்த 2022ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததை அடுத்து இவ்வாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.
தொடர்ச்சியாக, அப்போது அதிகரித்து வந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.
மிகப் பெரிய அதிகரிப்பு அதாவது துணை நில் வைப்பு வீத வட்டி 15.5 என்ற ரீதியிலும், கடன் வழங்கலுக்கான வட்டி வீதம் 16.5 என்ற வகையிலும் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிறிது காலத்துக்கு மாற்றம் செய்யாமல் இருப்பதற்கு மத்திய வங்கி கடந்த வருடம் தீர்மானித்தது.
மத்திய வங்கி அறிவிக்கும் வங்கி வட்டி வீதங்கள் மிகவும் முக்கியமானவையாகும். இலங்கையில் வங்கிகள் வழங்குகின்ற கடன்களுக்கு பெறப்படுகின்ற வட்டி மற்றும் மக்கள் செய்கின்ற வைப்புகளுக்கு வழங்குகின்ற வட்டி வீதங்களை தீர்மானிக்கின்ற ஒரே நிறுவனம் இலங்கை மத்திய வங்கியாகும்.
அதன் அடிப்படையிலேயே வட்டி வீதங்கள் தீர்மானிக்கப்படும்.
கடந்த வருடம் இவ்வாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டதனால் வங்கிக் கடனுக்கான வட்டி வீதங்கள் 25 வீதத்தையும் தாண்டின.
மேலும், நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதங்களும் அதிகரித்தன. இதனால் மக்கள் பணத்தை செலவழிக்காமல் வங்கிகளில் வைப்புச் செய்வார்கள் என்றும் அதனால் கேள்வி குறைவடைந்து பணவீக்கம் குறையும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்த்தது. அது கைகொடுத்தது என்றே கூற வேண்டும்.
2022 நடுப்பகுதியில் 80 வீதமாக அதிகரித்த பணவீக்கம், 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் குறைவடைய ஆரம்பித்தது. 30 வீதமளவில் பணவீக்கம் குறைவடைந்தது.
யாரை பாதித்தது?
இந்நிலையில் வட்டி வீத அதிகரிப்பானது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களை பெற்று, தமது வர்த்தகங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
வங்கிக்கு மாதாமாதம் கடன் தவணையைச் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் வங்கி வட்டி வீதம் அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சிறிய, நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களே நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றனர். அவர்கள் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இயந்திரமாக செயற்படுகின்றனர். வட்டி வீத அதிகரிப்பால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டால், அது தொழில் வாய்ப்புகளை இழப்பதற்கு காரணமாக அமைந்துவிடும்.
முதலில் எப்படி வட்டி வீதங்களை அதிகரிக்கும்போது பணவீக்கம் குறைவடையும் என்பதை பார்க்க வேண்டும். பணவீக்கம் என்பது நாட்டின் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற வேகத்தைக் காட்டுகின்றது.
பணவீக்கம் அதிகமாக காணப்படும் பட்சத்தில் அந்த நாட்டின் பொருட்கள், சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் வேகமாக அதிகரிக்கின்றன என்பது அர்த்தமாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுவான பணவீக்கம் 80 வீதமளவிலும் உணவுப் பணவீக்கம் 90 வீதமாகவும் அதிகரித்தன.
இதன் மூலம் எந்தளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில், வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி கருதுகிறது.
எப்படி அது நடக்கிறது?
அது எப்படியென்றால், வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படும்போது மக்கள் கடன்களை வங்கிகளில் பெற மாட்டார்கள். அதாவது வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகம் என்பதால் மக்கள் கடன்களைப் பெற மாட்டார்கள். அதற்கு மாறாக, வட்டி அதிகம் கிடைப்பதால் மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் வைப்பு செய்துவிடுவார்கள்.
அதனூடாக அதிகளவில் வட்டியைப் பெற முடியும் என்றே மக்கள் கருதுவார்கள். இவ்வாறு கடன்களை பெற்றுக்கொள்ளாமலும், தங்களிடம் உள்ள நிதியை வங்கிகளில் வைப்பு செய்யும்போதும் மக்களின் கைகளில் பணம் அதிகம் இருக்காது. அதனால் பொருட்கள், சேவைகளை கொள்வனவு செய்வதில் மக்கள் நாட்டம் காட்ட மாட்டார்கள்.
பொருட்கள் சேவைகளுக்கான கேள்வி குறைவடையும்போது பொருட்களின் விலைகள் குறைவடையும். அதனூடாக பணவீக்கம் குறையும் என்பதே மத்திய வங்கியின் பொருளாதார ரீதியான கோட்பாடாக அமைந்திருக்கிறது. இந்தக் கோட்பாடு கடந்த சில மாதங்களில் வெற்றியடைந்திருக்கிறது என்றே கூற வேண்டும். காரணம், பணவீக்கம் குறைவடைய ஆரம்பித்துள்ளது.
ஆனால், பணவீக்கம் குறைவடைகிறது என்பதற்காக பொருட்களின் விலைகள், சேவைகளின் கட்டணங்கள் முழுமையாக குறைவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம், பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கின்ற வேகத்தையே பணவீக்கம் எடுத்துக்காட்டுகிறது.
எப்படியிருப்பினும், பணவீக்கம் குறைவடைய வேண்டும். பொருட்களின் விலைகள், சேவைகளின் கட்டணங்கள் குறைவடைவது அவசியமாகும். அப்போதுதான் மக்களால் தமது கொள்வனவு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும்.
மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த காலங்களில் பல வழிகளில் தமது தேவைகளை குறைத்துக்கொண்டிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர். அரசாங்க மட்டத்தினர் கூட இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
எனவே மக்கள் மீண்டும் தமது கொள்வனவு சக்தியை அதிகரித்துக்கொள்ளும் வகையில், பொருளாதார நிலைமை உருவாக வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எப்படியிருப்பினும், தற்போது வட்டி வீதங்கள் அதிகரித்தமைக்கான நோக்கம் சற்று நிறைவேறி இருக்கிறது. பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது. எனவே, மீண்டும் வட்டி வீதங்களைக் குறைக்கவேண்டிய தேவை இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருளாதார நிபுணர்கள் என்ன கூறுகின்றனர்?
இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த அட்வகாட்டா என்ற பொருளாதார ஆய்வு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தனனாத் பெர்னாண்டோ வட்டி வீதங்கள் எதிர்காலத்தில் குறைவடைய வேண்டிய அவசியம் இருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
முக்கியமாக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தொடர்பாக சிந்தித்து இந்த வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களால் தமது கடன் தவணைப் பணம், வட்டிப்பணத்தை செலுத்த முடியாத நிலைமை காணப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தமது வர்த்தகங்களை கைவிடும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் என்பது கிராம மட்டத்திலும் பல்வேறு மட்டங்களிலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இயந்திரங்களாகவே காணப்படுகின்றன. இதனால் மக்களின் வருமானம் அதிகரிக்கிறது.
நாடொன்றில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்தவொரு செயற்பாடும் இடம்பெறக் கூடாது. அதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களை வலுவூட்டும் வகையிலும் வட்டி வீதங்களில் தளர்வுகள் இடம்பெறுவது மிக அவசியமாகும். அதுமட்டுமின்றி, அவர்கள் மூலதன மூலங்களை தேடிக்கொள்வதற்கும் அதனூடாக பயனடைவதற்குமான வசதிகள் செய்து கொடுக்கப்படுவது மிக முக்கியமாக இருக்கின்றது.
வட்டி வீதங்கள் குறையுமா?
இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாகவே அதிகரித்துக் காணப்படுகின்ற வட்டி வீதங்கள் குறித்த தளர்வு நகர்வு அவசியமாகிறது. அதுமட்டுமின்றி, வட்டி வீத அதிகரிப்பின் நோக்கமும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அடையப் பெற்றிருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் வட்டி வீதங்களை குறைத்து பணப்புழக்கத்தை அதிகரிப்பது சரியாக இருக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வர்த்தக முயற்சிகளை கொண்டு செல்வதற்கும் இது அவசியமாக இருக்கின்றது.
மத்திய வங்கி என்பது சகல பக்கங்களையும் பார்த்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அதாவது பணவீக்கமும் அதிகரிக்கக் கூடாது, அதேநேரம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களும் பாதிக்கப்படக்கூடாது. வங்கிக் கட்டமைப்பும் பாதிக்கப்படக் கூடாது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே மத்திய வங்கி முடிவெடுக்க முடியும்.
எப்படியிருப்பினும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு வந்து கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் தமது செயற்பாடுகளை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, சுருக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீண்டும் விரிவடைய வேண்டும். அதற்கான நிலைமையை உருவாக்குவது மத்திய வங்கியின் கடமையாக இருக்கின்றது.
எனவே, அடுத்த கட்டங்களில் வட்டி வீதம் குறைவடையுமா என்பதையே சகலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குறையுமா?
-ரொபட் அன்டனி–