ஜோர்டானிய பட்டத்து இளவரசருக்கும் செளதி அரேபிய பெண் ஒருவருக்கும் இடையே நடைபெறவுள்ள திருமணத்திற்கான ஏற்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் இருவரின் வாழ்க்கையும், மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
ஜோர்டானின் பட்டத்து இளவரசர் இரண்டாம் ஹுசைன் பின் அப்துல்லாவுக்கும், செளதி கட்டிடக் கலைஞர் ரஸ்வா அல் சைஃப்புக்கும் இடையே ஜூன் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்று வரும் பாரம்பரிய கொண்டாட்டங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் அனைவரையும் ஈர்த்து வருகிறது.
இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது, இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் அரச திருமண கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அரச தம்பதியின் திருமண நாள் ஜோர்டானில் அதிகாரபூர்வ விடுமுறையாக இருக்கும், உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். மேலும், தலைநகரில் அரபு பாடகர்களின் இலவச இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
ரஸ்வா அல் சைஃப் உடனான அறிமுகத்தின் கதை மற்ற காதல் கதைகளிலிருந்து வேறுபட்டதல்ல என்றும் அவர்களின் சந்திப்பில் ஒரு பொதுவான நண்பரின் பங்கு இருப்பதாகவும் ஜோர்டன் இளவரசர் ஹுசைன் சமீபத்தில் ஒரு விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
சமீபத்தில் ஜோர்டன் ராணி ரன்யா திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய மெஹந்தி விருந்தை நடத்தினார்.
இந்த மெஹந்தி விழாவில், பாரம்பரிய ஜோர்டானிய மற்றும் செளதி பாடல்கள் பாடப்பட்டன. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய நடனமும் ஆடப்பட்டது.
“ஹுசைன் என்து மூத்த மகன். அவர் (ஹஷேமி குலத்தைச் சேர்ந்த) இளைஞர். மற்ற எல்லாத் தாய்மார்களையும் போலவே நானும் அவரை மணமகனாகப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டேன்.
ஹுசைன் உங்கள் மகன். நீங்கள் அவனுடைய குடும்பம். இந்த விழா உங்களுடையது,” என்று இந்தச் சந்தர்ப்பத்தில் ராணி ரன்யா கூறினார்.
“இறுதியாக எனக்கு ஒரு மருமகள் கிடைத்துள்ளார். ஆனால் இவர் ஒரு சாதாரண மருமகள் அல்ல. ரஸ்வாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். எனக்கு அவர் என் மகள்களைப் போலவே (இமான் மற்றும் சல்மா) விலைமதிப்பற்றவர்” என்று அவர் மேலும் கூறினார்.
“ஹுசைன் என்து மூத்த மகன். அவர் (ஹஷேமி குலத்தைச் சேர்ந்த) இளைஞர். மற்ற எல்லாத் தாய்மார்களையும் போலவே நானும் அவரை மணமகனாகப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஹுசைன் உங்கள் மகன். நீங்கள் அவனுடைய குடும்பம். இந்த விழா உங்களுடையது,” என்று இந்தச் சந்தர்ப்பத்தில் ராணி ரன்யா கூறினார்.
“இறுதியாக எனக்கு ஒரு மருமகள் கிடைத்துள்ளார். ஆனால் இவர் ஒரு சாதாரண மருமகள் அல்ல. ரஸ்வாவை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். எனக்கு அவர் என் மகள்களைப் போலவே (இமான் மற்றும் சல்மா) விலைமதிப்பற்றவர்” என்று அவர் மேலும் கூறினார்.
இளவரசர் ஹுசைன் 1994 ஜூன் 28 ஆம் தேதி ஜோர்டன் தலைநகர் அம்மானில் பிறந்தார். அவர் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் ராணி ரன்யா ஆகியோரின் மூத்த மகன். அவருக்கு இளவரசர் ஹாஷிம் என்ற சகோதரரும், இமான் மற்றும் சல்மா என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.
இளவரசர் ஹுசைன் தனது ஆரம்ப கல்வியை ஜோர்டானில் உள்ள கிங்ஸ் அகாடமியில் 2012 இல் முடித்தார், அதன் பிறகு 2016 இல் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வரலாற்றில் பட்டம் பெற்றார்.
2017 ஆம் ஆண்டில், அவர் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். அதே அகாடமியில் இருந்துதான் அவரது தந்தை மன்னர் இரண்டாம் அப்துல்லாவும், அவரது தாத்தா மன்னர் ஹுசைன் பின் தலாலும் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் ஜோர்டானிய ஆயுதப்படையில் கேப்டன் பதவியில் உள்ளார்.
இளவரசர் ஹுசைன் 2009 ஜூலை 2 ஆம் தேதி பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் இளவரசர் ஹுசைன் தனது தந்தையுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் சென்றுள்ளார். சிறு வயதிலிருந்தே தந்தையுடன் பல அரசு மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அவர் காணப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
ஜோர்டானின் அரசியலமைப்பின்படி, பட்டத்து இளவரசரின் பங்கு அரசியல் சார்ந்தது அல்ல. இளவரசர் ஹுசைன் 2009 இல் பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்ட பிறகு 2010 ஜூன் மாதம் முதல்முறையாக அதிகாரபூர்வ பிரதிநிதியாக முன்னே வந்தார்.
ஜோர்டானில் நடந்த மாபெரும் அரபு கிளர்ச்சி மற்றும் ஆயுதப் படைகளின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் தனது தந்தையை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதன்பிறகு இளவரசர் ஹுசைன், அதிகாரபூர்வ மற்றும் வணிக பயணங்களில் மன்னரின் சார்பாக கலந்துகொண்டார்.
2017 செப்டம்பர் 22 ஆம் தேதி இளவரசர் ஹுசைன் தனது 20வது வயதில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மிக இளைய நபராக அவர் ஆனார்.
2015 ஆம் ஆண்டில் இளவரசர் ஹுசைன், க்ரெளன் பிரின்ஸ் அறக்கட்டளைக்கு அடித்தளம் அமைத்தார். அதன் மூலம் அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் பிற முக்கிய துறைகளில் ஜோர்டானின் இளைஞர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம்.
இந்த அறக்கட்டளையின் மிக முக்கியமான முன்முயற்சியின் கீழ் ஜோர்டானிய இளைஞர்களுக்கு அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’வில் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அந்தப்பயிற்சி மற்றும் உதவிக்குப் பிறகு ஜோர்டன் தனது முதல் செயற்கைக்கோளை (JY1-SAT) 2018 இல் விண்வெளிக்கு அனுப்பியது.
ரஸ்வா அல் சைஃப் யார்?
28 வயதான ரஸ்வா அல் சைப்பின் தந்தை காலித் அல் சைஃப் ஒரு பிரபலமான தொழிலதிபர் மற்றும் அல் சைஃப் குழுமத்தின் தலைவர் ஆவார்.
இந்த நிறுவனம் சுகாதாரம், கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நன்கு அறியப்பட்டதாகும் என்று பிரபல லைஃப்ஸ்டைல் இதழான ‘வோக்’ இன் அரபு பதிப்பு மற்றும் பிரிட்டிஷ் செய்தி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி செளதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பிறந்த ரஸ்வா நான்கு உடன்பிறப்புகளில் இளையவர். செளதி அரேபியாவில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பிறகு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை கல்லூரியில் பட்டம் பெற்றார்.
ரஸ்வா படித்துக்கொண்டிருந்த காலத்தில் 2016 இல் துபாய்க்கு ஒன்பது நாட்கள் பயணம் சென்றார். மேலும் தனது பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், “இந்தக் காலகட்டம் எனக்கு மறக்கமுடியாதது, ஏனெனில் மாணவர்கள் அரபு கலாச்சாரம் மற்றும் கட்டுமானக் கலைகளை முதல் முறையாகப் பார்த்தார்கள்,”என்று எழுதினார்.
“துபாய் மிகவும் அழகான நகரம், இது நவீன கட்டிடக்கலைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அரபு கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பாரம்பரிய அழகு பாதுகாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
அவரது நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக, இளவரசர் ஹுசைனின் இளைய சகோதரி இளவரசி இமான் பிந்த் அப்துல்லாவுக்கும், ஜமீல் அலெக்சாண்டர் தெர்முட்டிஸுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்த்தையும் ரஸ்வா பெற்றுள்ளார்.
அவர் லாஸ்ஏஞ்சலஸில் உள்ள ஒரு கட்டடக்கலை நிறுவனத்திலும், பின்னர் ரியாத்தில் ஒரு வடிவமைப்பு ஸ்டுடியோவிலும் பணிபுரிந்தார்.
செளதி இளவரசர் முகமது பின் சல்மானும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜோர்டானின் பட்டத்து இளவரசராக இளவரசர் ஹுசைன் இருப்பதால், திருமணம் முடிந்தவுடன் ரஸ்வாவுக்கும் அரச பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது உடை மற்றும் ஃபேஷன் உணர்வு சில நேரங்களில் பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒப்பிடப்படுகிறது.
அவரது வருங்கால மாமியார் மகாராணி ரன்யா, கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படித்தவர். திருமணத்திற்கு முன் சிட்டி பேங்க் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர் போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.
“அல் ஹுசைன் ரஸ்வாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியபோது மன்னரும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எனது பிரார்த்தனைகளுக்கு அவர் ஒரு சிறந்த வெகுமதி” என்று மகாராணி ரன்யா மெஹந்தி விழாவில் கூறினார்.
”ரஸ்வா தனது தாய் மற்றும் பட்டத்து இளவரசரின் வருங்கால மாமியார் இஸ்ஸா பிந்த் அல் சதிரி போல ஒரு வைரம் என்று ராணி ரன்யா கூறினார். “நானும் அல்-ஹுசைனும் ரஸ்வாவை நன்றாக கவனித்துக்கொள்வோம். இது அவரது நாடும் கூட. அவர் தனது குடும்பம் மற்றும் மக்கள் மத்தியில் இருப்பார்.” என்றும் மகாராணி குறிப்பிட்டார்.
ஜூன் 1 ஆம் தேதி அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் திருமண விழா நடைபெறவுள்ளது என்று ஜோர்டன் அதிகாரிகள் இதுவரை அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹ்ரான் அரண்மனை 1950 களின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. அதன்பிறகு எல்லா அரச திருமணங்களும் இங்குதான் நடத்தப்படுகின்றன. இரண்டாம் ஷா அப்துல்லா மற்றும் அவரது தந்தை ஷா ஹுசைன் பின் தலால் ஆகியோரின் திருமணமும் இந்த அரண்மனையில்தான் நடைபெற்றது.
திருமண விழாவிற்குப் பிறகு அனைவரும் சஹ்ரான் அரண்மனையில் இருந்து அல் ஹுசைனியா அரண்மனைக்குச் செல்வார்கள். அங்கு வரவேற்பு மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோர்டானின் பட்டத்து இளவரசர் இரண்டாம் ஹுசைன் பின் அப்துல்லா மற்றும் செளதி கட்டிடக் கலைஞர் ரஸ்வா அல் சைஃப்
ஜூன் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த அரச திருமணத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்?
சில அரபு பாடகர்கள் அம்மானில் அன்றைய தினம் இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இலவச போக்குவரத்து சேவையும் கிடைக்கும். இது தவிர எல்லா மாகாணங்களிலும் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று ஜோர்டானிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் எல்லா அரசு துறைகளுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது மே 31 அன்று மதியம் 1:00 மணி வரை எல்லா அமைச்சகங்களும், துறைகளும் செயல்படும் என்று ஜோர்டானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘பித்ரா’ கூறுகிறது.
இத்தாலியின் சார்டினியா தீவில் சில கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும், அது பொய் என்றும் ஏனெனில் எல்லா கொண்டாட்டங்களும் அம்மானில் மட்டுமே நடைபெற உள்ளது என்றும் ‘பித்ரா’ தெரிவித்துள்ளது.
ஜோர்டன் அரச தம்பதியின் திருமணத்தில் அரபு மற்றும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். இந்த விழாவில் டென்மார்க் மற்றும் ஸ்வீடன் அரச குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-பிபி சி தமிழ் செய்தி-