ஷாபாத் டெய்ரியில் சாலைக்கு நடுவே நடந்த படுகொலை சம்பவத்தில் புலந்த்ஷெஹரில் இருந்து கைது செய்யப்பட்டார் குற்றவாளி
தலைநகரின் ஷாபாத் டெய்ரி பகுதியில் ஒரு மைனர் சிறுமி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கொலை செய்த நபர் சிறுமியின் காதலர் என்றும் சிறுமிக்கு 16 வயது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் சிறுமியை முதலில் கத்தியால் பலமுறை குத்தினார். பின்னர் கல்லால் நசுக்கினார் என்றும் போலீஸ் கூறியது.
பலியானவரின் உடலில் பல கத்திக்குத்து காயங்கள் உள்ளன. அவர் குறைந்தது 20 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றவாளி கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. கொலை செய்த நபர் சாஹில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுமி தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பலரும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும், டெல்லி மகளிர் ஆணையமும் காவல்துறையை கேட்டுக் கொண்டன. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
நிகழ்ந்தது என்ன?
பலியான சிறுமி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள ஜேஜே காலனியில் வசித்து வந்தார். அவர் தெரு வழியாகச் சென்றபோது குற்றவாளி அவரைப் பின்தொடர்ந்தார்.
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் இருவருக்குமிடையே உறவு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சனிக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிறுமி தனது தோழியின் மகனின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லவிருந்தார். இதற்கிடையில் குற்றவாளி அவரைப் பின்தொடர்ந்து வந்து கத்தியால் தாக்கினார். மேலும் குற்றவாளி அந்தச் சிறுமியைக் கல்லால் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பலியான சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஹாபாத் டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் என்ன சொல்கிறது?
”கொலை செய்யப்பட்ட சிறுமியும் சாஹிலும் (குற்றம் சாட்டப்பட்டவர்) பரஸ்பரம் தெரிந்தவர்கள். சாஹிலுக்கு 20 வயது,” என்று டெல்லி காவல்துறையின் கூடுதல் டிசிபி ராஜா பந்தியா கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சாஹிலுக்கு எதிராக முன்பும் புகார் அளித்துள்ளார்களா எனக் கேட்டபோது, டிசிபி ராஜா பந்தியா, “இல்லை” என்று சொன்னார். “மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக” தெரிவிக்கப்ப்பட்டது.
பிரேத பரிசோதனையில்தான் அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகும். அவர் பலமுறை தாக்கப்பட்டுள்ளார்.
அவர் 20 தடவைகளுக்கு மேல் தாக்கப்பட்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹருக்கு அருகே குற்றவாளி சாஹில் கைது செய்யப்பட்டதாகப் பிறகு போலீசார் தெரிவித்தனர்.

‘‘குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் குழுக்கள் தேடி வந்தன. புலந்த்ஷெஹரில் இருந்து குற்றவாளியைக் கைது செய்த எங்கள் குழுக்கள் அவரை இங்கு அழைத்து வருகின்றன,’’ என்று இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சுமன் நல்வா கூறினார்.
“குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் சாஹில். அவர் ஏசி, ஃப்ரிட்ஜ் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்,” என்றார் அவர்.

“இதுவரை வெளிவந்துள்ள தகவல்களின்படி பாதிக்கப்பட்டவரின் வயது 16-17. குற்றம் சாட்டப்பட்ட சாஹிலின் வயது 19-20. இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.
நேற்று அல்லது அதற்கு முன் அவர்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. பேச்சுவார்த்தை இல்லாமல் போயுள்ளது.
இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர் இவ்வளவு கொடூரமான கொலையைச் செய்துள்ளார்.
உறுதியான ஆதாரங்களை சேகரித்து மிகக் கடுமையான தண்டனையை அவருக்கு பெற்றுத்தர டெல்லி காவல்துறை முயற்சி எடுக்கும்,” என்று டெல்லி காவல்துறையின் காவல்துறை சிறப்பு ஆணையர் தீபேந்தர் பதக் கூறினார்.
சிறுமியைக் காப்பாற்ற யாரும் வரவில்லை
தாக்குதல் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சம்பவத்தின்போது பலர் அங்கு அதைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர் ஆனால் யாரும் தலையிட முயற்சி எடுக்கவில்லை என்பது சிசிடிவி காட்சிகளில் தெரிகிறது.
“இது உணர்வின்மையின் உச்சம். நாம் சமூகத்தில் வாழும்போது, நம்மைச் சுற்றி இதுபோன்ற குற்றங்கள் நடப்பதைப் பார்க்கும்போது நிச்சயமாக நாம் தலையிட வேண்டும்.
அதைத் தடுத்து நிறுத்த உரக்க குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையின் பணியை நாங்கள் தொழில்முறைரீதியில் முன்னெடுத்துச் செல்வோம்,” என்று காவல்துறை சிறப்பு ஆணையர் பதக் கூறினார்.
இதுதொடர்பாக டெல்லி பாஜக எம்பி கெளதம் கம்பீரும் கேள்வி எழுப்பினார்.
“அவர்களது தங்கையோ மகளோ இப்படி தாக்கப்பட்டிருந்தால்கூட இவர்கள் இப்படியே சென்றிருப்பார்களா?” என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வருத்தம் தெரிவித்த கேஜ்ரிவால், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றார்
இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
“டெல்லியில் மைனர் சிறுமி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் வருத்தம் தருகிறது.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்கள் ஆகிவிட்டனர். காவல்துறை மீது அவர்களுக்குப் பயம் இல்லை.
ஆளுநர் சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது,” என்று கேஜ்ரிவால் கூறினார்.
மகளிர் ஆணையம் சொல்வது என்ன?

இந்தச் சம்பவம் குறித்து நியாயமான விசாரணையை, ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, டெல்லி காவல்துறை ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தேலினா கோங்டப் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மகளிர் ஆணையம் அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
“டெல்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் ஒரு பதின்பருவ சிறுமி கத்தியால் பலமுறை கொடூரமாகட்ப தாக்கப்பட்டு, பின்னர் கல்லால் நசுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் குற்றவாளிகளுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்,” என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
:

