ஓரினத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அந்த இனத்தின் கலாசாரம் , பண்பாடு, பாரம்பரியங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஆக்கிரமிப்பாளர்களின் ஊறிப்போன சித்தாந்தமாகும்.

அதன் காரணமாகவே தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு ,கிழக்கில் அன்று தொட்டு இன்று வரை ஒவ்வொரு வடிவங்களில் ஆக்கிரமிப்புகளும் தொடர்கின்றன.

இவற்றுக்கு மத்தியில் 20 ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் மிகவும் மோசமானதாக கருதி உலகமே கண்ணீர் விட்ட யாழ். நூலகம் எரிக்கப்பட்டு மே 31 ஆம் திகதியுடன் 42 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன .

தமிழர்களின் வளர்ச்சிக்கும் திறமைக்கும் அடிப்படை மூலதனமாக அமைந்தது கல்வி ஒன்றே என்று எண்ணிய அன்றைய ஆட்சியாளர்களின் கும்பலொன்று, தமிழ் இலக்கியத்தினதும் தமிழர் பாரம்பரியத்தினதும் பிறப்பிடமாக விளங்கிய யாழ். நூலகத்தை தீக்கிரையாக்கியது.

வரலாற்றுப் பின்னணி

1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் சளைக்காது உழைத்த புத்திஜீவிகளான கே. ம் . செல்லப்பா ,பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா ஆகியோர் முக்கியமானவர்கள் .

அதைத் தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் படிப்படியாக வளர்ச்சியடைந்து நூலகத்தின் முதல் பிரிவு நிறைவு செய்யப்பட்டு, 1959 இல் அப்போது நகர பிதாவாக விளங்கிய அல்பிரட் துரையப்பாவால் திறந்துவைக்கப்பட்டது.

நூலகம் சர்வதேச தரத்தில் அமைவதை உறுதி செய்யும் வகையில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பிரபல இந்திய நூலகர் எஸ் .ஆர் .ரங்கநாதன் ஆலோசகராக பணியாற்றினார். அதேபோன்று கட்டிடத்தை சென்னையை சேர்ந்த எஸ்,நரசிம்மன் வடிவமைத்துக் கொடுத்தார் .

அன்றையதினம் கொழுந்துவிட்டெரிந்த இந்த தீயால் பல நூற்றாண்டுகள் சேமித்து பாதுகாக்கப்பட்ட பனை ஓலைச் சுவடிகள் கையெழுத்து பிரதிகள் தனித்துவம் மிக்க 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை நூல்கள், மற்றும் மயில்வாகனம் புலவர் 1736 இல் எழுதிய யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்பாணத்தின் வரலாறு) இந்து இராமாயண இதிகாசத்தின் பதிப்புகள், அழிந்துபோன தமிழ் மொழி செய்தித்தாள்களின் தொகுப்புகள், முக்கிய ஆவணங்களின் மைக்ரோஃபிலிம்கள் போன்ற பொக்கிஷமானவையும் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கருகி சாம்பராகின .

அது மாத்திரமன்றி தத்துவஞானிகள் கலைஞர் மற்றும் கலை இலக்கிய எழுத்தாளர் ஆனந்த குமாரசுவாமி மற்றும் பிரபல புத்திஜீவி பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா ஆகியோரின் படைப்புகள் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளும் இவற்றுள் அடங்கும்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ். நூலக எரிப்பு சம்பவம் சர்வதேசத்தையே ஒருகணம் உறைய வைத்தது. இது மன்னிக்க முடியாத காட்டுமிராண்டித்தனம் என தமிழ் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டினார்கள் . இருந்தும் கூட தென்னிலங்கையை சேர்ந்த ஊடகங்கள் இது தொடர்பில் எதுவும் வெளியிடாமல் மௌனம் காத்தன.

பழங்கால திராவிட கட்டிடக்கலையை பறை சாற்றும் ஓர் அற்புதமான கட்டிடமாக விளங்கிய யாழ். நூலகம் , யாழ்ப்பாணத்துக்கான ஓர் அடையாளமாகவும் திகழ்ந்தது என்பதே உண்மை. அதனை அழிக்க வேண்டும் என்று காத்திருந்த பேரினவாத சக்திகளுக்கு சந்தர்ப்பமும் சாதகமாக அமைந்தது என்றே கூறவேண்டும். அக்கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி நிலவியது .

அப்போது அமைச்சர்களான சிறில் மெத்தியு மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தனர் . இந்த நிலையில் அன்று 1981 மே 31 நள்ளிரவு காடையர் கும்பல் திடீரென யாழ். நூலகம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகம் உட்பட யாழ். நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான கடைகள் என்பனவற்றிற்கு தீ வைத்து ருத்ர தாண்டவம் ஆடியது.

சுன்னாகத்திலும் அன்றைய தினம் குறித்த காடையர் கும்பல் தீ வைத்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது . இதேவேளை நூலகம் எரிவதை இரு அமைச்சர்களும் யாழ். விருந்தினர் விடுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருத்ததாகவும், பின்னர் இச்செயல் குடித்த ஒரு சில நபர்களின் வன்முறை என்று கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

அது மாத்திரமின்றி, அப்போது யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய வி.யோகேஸ்வரனின் இல்லமும் தீ வைத்து அழிக்கப்பட்டது. இதேவேளை மறுநாள் ஜூன் முதலாம் திகதி சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட பலரும் , பொலிஸாரும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கூடிய சீருடையினரும் சேர்ந்தே யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு தீ வைத்து முற்றாக அழித்ததாக கூறினர் . எனினும் அரசாங்கம் எதனையும் கருத்தில் வாங்கிக்கொள்ளவில்லை .

பின்னர் ஜூன் 2 ஆம் திகதியே அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கத்தின் காலதாமதமான நடவடிக்கையும் யாழ்ப்பாணம் எரிய காரணமானது என்று மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர் .

இந்த கொடூர செயல் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களாலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இனரீதியான தாக்குதல் என்று கடுமையாக விமர்சித்தனர். இந்த கொடூர செயலுக்கு 2016 இல், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார் . இருந்த போதிலும் அது ஆழமாக தமிழர் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் ரணங்களை மாற்றுமா ? என்று எதிர்பார்க்க முடியாது .

காரணம் தமிழ் மக்களின் கலாசாரங்களை அழித்தொழிக்கும் வகையிலும், இன மோதல்களுக்கு தூபம் இடும் வகையிலும் , வாழ்விடங்களை கபளீகரம் செய்யும் வகையிலும் , பௌத்த மத தலங்களை தமிழர்களின் பூர்வீக காணிகளில் அமைக்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. குறிப்பாக வடக்கில் அண்மைய காலமாக திட்டமிட்ட ஒரு பிரிவினரால் இன களுக்கிடையே கலவரத்தை தூண்டி மீண்டும் ஒரு ” கருப்பு ஜூலைக்கு ” வழி வகுப்பதாக கூறப்படுகின்றது .

நாட்டை மீண்டும் அழிக்கவும், அரசாங்கத்தை உடைக்கவும் சர்வதேச மற்றும் உள்ளூர் சக்திகள் முனைவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான முயற்சியில் ஈடுபடும் குழுக்களுக்கு வெளிநாடுகள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் .

இதனிடையே, நாட்டில் மத முரண்பாடுகளை தூண்டும், அமைதியை சீர்குலைக்க எத்தணி க்கும் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஒடுக்கவும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது .

இவை அனைத்துக்கும் மேலாக மக்கள் மத்தியில் இன, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அமைதியையும் , சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் இனி ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார் ,

இவ்வாறாக அரச தரப்பினர் கூறி வருகின்ற போதிலும் ஒரு சில கசப்பான சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. அதனால் இனங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற தன்மையே மேலோங்கி வருகின்றது . குறிப்பாக, சில அடிப்படை மதவாதிகள் மற்றும் சில கடும் போக்கு கொண்ட பாராளுமன்ற பிரதிநிதிகள், பெரும்பான்மை மக்களை கவரும் வகையிலும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும் மக்களை உசுப்பேற்றிவிடும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான போக்குகள் முடிவுக்கு வரும் வரை நாட்டில் இன ரீதியான கசப்புணர்வுகள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் வழங்கப்படும் உறுதிமொழிகள் யாவும் வெறும் கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

ஆர். பி . என்.

Share.
Leave A Reply