மகளைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீமகேஷை சிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு திடீரென கை நரம்பு, கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரை புன்னமூடு அருகே ஆனக்கூட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ் (38). இவருக்கு வித்யா என்ற மனைவியும், நக்‌ஷத்ரா என்ற 6 வயது மகளும் இருந்தனர்.

ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமகேஷின் தந்தை ஸ்ரீமுகுந்தன் ரயில் மோதி இறந்தார்.

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக ஊருக்கு வந்த ஸ்ரீமகேஷ், அதன் பிறகு துபாய்க்குச் செல்லவில்லை.

இதற்கிடையே மறுமணம் செய்துகொள்ள முயன்றிருக்கிறார் ஸ்ரீமகேஷ். ஆனால், 6 வயது மகளைக் காரணம் காட்டி திருமணம் தள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு ஸ்ரீமகேஷும், அவர் மகள் நக்‌ஷத்ராவும் வீட்டில் இருந்தனர். மகேஷின் வீட்டுக்கு அருகில் அவருடைய சகோதரி வீடு இருக்கிறது.

அந்த வீட்டில் ஸ்ரீமகேஷின் தாய் சுனந்தா (62) வசித்துவருகிறார். இந்த நிலையில், ஸ்ரீமகேஷ் வீட்டிலிருந்து திடீரென நக்‌ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது.

உடனே சுனந்தா விரைந்து அங்கு சென்று பார்த்தார். அப்போது, நக்‌ஷத்ரா கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் ஷோபாவில் ரத்தவெள்ளத்தில் துடித்தபடி கிடந்திருக்கிறார்.

கையில் கோடரியுடன் நின்ற ஸ்ரீமகேஷ், தன் தாயான சுனந்தாவையும் விரட்டி, கையில் வெட்டியிருக்கிறார். அந்தப் பகுதியினர் திரண்டதும், கோடாரியைக் காட்டி அவர்களையும் மிரட்டியிருக்கிறார்.

இது குறித்து தகவலின்பேரில் அங்கு சென்ற மாவேலிக்கரை போலீஸார், ஸ்ரீமகேஷை மடக்கிப் பிடித்துக் கைதுசெய்ததுடன், காயமடைந்த சுனந்தாவை மாவேலிக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறுமி நக்‌ஷத்ரா இறந்துவிட்டார். நக்‌ஷத்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் போலீஸார். சுனந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

மகளைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீமகேஷை, சிறைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரது பெயர் விவரங்களைப் பதிவுசெய்த சமயத்தில், அவர் திடீரென கை நரம்பு, கழுத்தில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

படுகாயமடைந்த ஸ்ரீமகேஷை மீட்டு ஆலப்புழா மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஸ்ரீமகேஷை ஐ.சி.யூ-வில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்ய மகள் தடையாக இருந்ததாகவும், இதனால் மதுவுக்கு அடிமையான ஸ்ரீமகேஷ் மது போதையில் கோடாரியால் மகளை வெட்டிக் கொலைசெய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply