அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர் பதவி விலகிச்செல்லும் போது அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசியங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
டிரம்ப் பதவிவிலகிச் சென்ற வேளை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ஆவணங்களை எடுத்துச்சென்றார் என அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
டிரம்ப் புளோரிடாவில் உள்ள இல்லத்தில் இந்த ஆவணங்களை மறைத்துவைத்தார் விசாரணையாளர்களிற்கு பொய்சொன்னார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை அவர் குழப்ப முயன்றார் தடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ள டிரம்ப் தான் தவறு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
டிரம்பிற்கு எதிரான 40 பக்க குற்றச்சாட்டுகளில் அவர் தன்னுடன் எடுத்துச்சென்ற ஆவணங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் அமெரிக்காவின் அணுவாயுத திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களையும்,அமெரிக்காவினதும் வெளிநாடுகளினதும் பாதுகாப்பு திறன் குறித்த ஆவணங்களையும் அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனங்கள் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்த ஆவணங்களையும் வெளிநாடொன்று தாக்குதலை மேற்கொண்டால் எடுக்கப்படக்கூடிய பதில் தாக்குதல் குறித்த ஆவணங்களையும் டிரம்ப் தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார்.