தருமபுரி: தருமபுரியில் திமுக கவுன்சிலர் மகளை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தருமபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ள புவனேஸ்வரன்.தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார்.

கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற ஹர்ஷா நேற்று காலை அதியமான் கோட்டை அடுத்த கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து உடனடியாக வந்த அதியமான்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தனிப்படை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

செல்போன் சிக்னல்கள் மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் மற்றும் தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனையும் பிடித்து விசாரித்தார்கள்.

இதில் காந்திநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஹர்ஷாவை கொலை செய்ததை ஒப்புகொண்டான்.

ஹர்ஷாவை கொன்றது ஏன் என்பது குறித்து சிறுவன் போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறும் போது,கடந்த ஓராண்டாக சிறுவன் அந்த பெண்ணை காதலித்து வந்தாராம். (ஆனால் அந்த பெண் காதலித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை) இந்நிலையில் தன்னுடனான காதலை முறித்துக் கொண்டாராம்.

அதனை தாங்க முடியாமல் ஹர்ஷா ஊருக்கு வரும்போது தம்முடைய காதலை பிரேக் அப் செய்து கொள்ளலாம் என தனியாக ஹர்ஷாவை சிறுவன் அழைத்துள்ளார்.

அதை நம்பிய ஹர்ஷா நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து வேலையை முடித்துவிட்டு தருமபுரிக்கு வந்த அவரை சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றாராம்.

அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சிறுவன் மிரட்டினாராம். இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் சிறுவன் துப்பட்டாவை வைத்து ஹர்ஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அதன் பின் சடலத்தை வனப்பகுதிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இவ்வாறு போலீசாரிடம் சிறுவன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தருமபுரி காந்தி நகரைச் சேர்ந்த அந்த சிறுவனும், ஹர்ஷாவின் தம்பியும் நண்பர்கள் ஆவார்கள்.

இதன்காரணமாக ஹர்ஷாவின் வீட்டிற்கு அந்த சிறுவன் அடிக்கடி வந்து செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவனிடம் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் ஹர்ஷா கூறினாராம். இதனால் ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் அதியமான்கோட்டை அருகே நரசிங்கபுரத்தில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

Share.
Leave A Reply