பொதுப் போக்குவரத்து பஸ்களின் நடக்கும் சில சம்பவங்களை நினைத்துப் பார்த்தால் சிரிப்பை அடக்கவே முடியாது. அந்தளவுக்கு சம்பவங்கள் இருக்கும்.
இதிலும், பஸ்களில் சின்னஞ்சிறிய பொருட்களை விற்பனைச் செய்வோர், யாசகர்கள் மற்றும் உதவிக்கோரி கையேந்துவோரின் நிலைமையை பயணிகள் சமாளித்தே ஆகவேண்டும்.
இவர்களின் தொல்லையை, பெரும் நகரங்களில் தரித்துநிற்கும் பஸ்களிலேயே அதிகமாகக் காணலாம்.
எனினும், ஒருசில பயணிகள் மட்டுமே உதவுச் செய்வோர். ஏனையோர், தம்வசமிருக்கும் அலைபேசிகளை பார்த்துக்கொண்டே கண்டும் காணாதது போல இருந்துவிடுவர்.
இப்படிதான், பஸ்ஸில் ஏறிய யாசகம் செய்தவருக்கு, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டு, பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, ஏனைய பயணிகளிடம் பெண்ணொருவர் யாசகம் செய்த சம்பவமொன்று மலையக பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நடுத்தர வயதுடைய அந்தப் பெண், தன்னுடைய மகளின் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார்.
என்ன சிந்தனையில் இருந்தாரோ தெரியவில்லை. தான் வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை, நடத்துனர் என நினைத்து யாசகரிடம் கொடுத்துவிட்டார்.
மகளிடம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றே அப்பெண், தன்னுடைய பணப்பையில் 50 ரூபாயை மட்டுமே வைத்திருந்துள்ளார்.
யாசகர் இறங்கியவுடன் பஸ்ஸில் ஏறிய நடத்துனர், பயணத்துக்கான பணத்தை கேட்டபோதுதான், இருந்த பணத்தை ஏற்கெனவே கொடுத்தமை ஞாபகத்துக்கு வந்தது. அதுதொடர்பில் நடத்துனருடன் அப்பெண் முரண்பட்டுள்ளார்.
எனினும், அப்பெண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பயணியே, நிலைமையை தெளிவுப்படுத்தியுள்ளார்.
புரிந்துகொண்ட அப்பெண், ஏனைய பயணிகளிடம் உதவிக்கேட்டு பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தி பயணித்துள்ளார்.