உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்.
இரண்டு நாக இளவரசர்களும் இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது.
அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே துறந்தவர், அது மட்டும் அல்ல, பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும் ஏற்காதவர் என்பதால்.
இரு தரம் அரியணையை துறந்தவர், எப்படி இதற்கு உரிமைகோருவார்?. இதே நிகழ்வு, மகாவம்சத்துக்கு முந்திய பண்டைய தமிழ் காப்பியம் மணிமேகலையிலும் வருகிறது. ஆனால் அது அரியணைக்கு அல்ல, புத்தர் போதிக்கும் பொழுது வழமையாக அமரும் இருக்கைக்கே [not for a throne but for a seat on which the Buddha used to sit and preach] என்பது குறிப்பிடத் தக்கது.
மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது.
எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்? மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும்.
ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அது இந்தியர்களால் பதியப்படவில்லை. ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இராமாயண காப்பியத்தில், அனுமான் இலங்கைக்கு பறந்து சென்றதாக குறிக்கப்பட்டுள்ளது.
சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ?
ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: ‘கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.
இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்’ என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார்.
இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்ததில் பெரும் பங்கு மகாவம்சத்திற்கு உண்டு என்பது அதன் வடிவமைப்பிலும் கதை ஓட்டத்தில் இருந்தும் வெளிப்படும் உண்மையாகும்.
[1] வாழ்க்கை துன்பமயமானது,
[2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது,
[3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப் பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திர மாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து எனவே நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்றும்.
[4] நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நல் தொழில் வகித்தல், நன் முயற்சி, நன் மனக் கவனம், நன் மன ஒருமைப்பாடு ஆகியன, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை ஆகும்,
என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற் கருத்து, நல் நோக்கம், நற் பேச்சு, நன்னடத்தை, நன் முயற்சிகள் எப்படி மகாவம்சத்தில் அடங்கி இருக்கின்றன என மேலும் விரிவாக, எம் அறிவிற்குள் எட்டிய வாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனத்தோடு வரவேற்கிறோம்.
உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது.
இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார்.
அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் “சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை” [“To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man.”] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]