சீக்கிய மதத்தின் இதயமாகக் கருதப்படும் வடஇந்திய நகரமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது.

இருபது லட்சம் பேர் வசிக்கும் அமிர்தசரஸ், பல விஷயங்களுக்காக எல்லோராலும் புகழப்படும் நகரமாக விளங்குகிறது. சுவையான உணவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பழைய நகரம், மற்றும் காண்போரின் கண்களைக் கவரும் சீக்கிய மதத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமான பொற்கோவில் என பல சிறப்புகள் உள்ளன.

இதையெல்லாம் விட, பெருந்தன்மை என்ற ஒரு உணர்வின் காரணமாகவே அந்நகர் போற்றப்படுகிறது என்ற உண்மைதான் மிகவும் ஆச்சரியமூட்டும் சிறப்பாக அமைந்துள்ளது.

அமிர்தசரஸ் நகரம் 16ம் நூற்றாண்டில் சீக்கிய மதகுரு ஒருவரால், சீக்கிய மதம் பிறந்த நிலமான பஞ்சாபில் நிறுவப்பட்ட ஒரு நகரம். சீக்கிய மதம் என்பது எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்வதை அடிப்படையாகக் கொண்ட மதம் என எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சீக்கியர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குருத்வாராக்களில் (சீக்கியர்களின் கோயில்) தூய்மைப் பணிகள், உணவு அளித்தல், கோயிலுக்கு வருபவர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற சிறுசிறு சேவைப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மற்றவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், பெருந்தன்மையின் அடிப்படையில் பல்வேறு சேவைகளை மற்றவர்களுக்கு அளித்துவருகின்றனர்.

 

கொரோனா பாதித்த போது உலகம் முழுவதும் சீக்கியர்கள் அளித்த சேவை

ஏப்ரல் 2021ல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்தபோது, மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவது மற்றும் மருத்துவ உதவிகளை அளிப்பது என பல்வேறு சேவைப் பணிகளில் சீக்கியர்கள் மிக அதிகமாக ஈடுபட்டனர். “சேவை என்பது தன்னலமற்ற ஒரு தொண்டு.

சீக்கிய மதத்தில் அது வெறும் உபதேசமாகவோ, அல்லது ஒரு வழிகாட்டியாகவோ இல்லாமல் ஒரு தினசரி நடவடிக்கையாகவே அனைவரும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்,” என, ‘சேவை: நல்லதைச் செய்வதன் மூலம் சிறப்பாக வாழ்வது என்ற சீக்கியர்களின் ஞானம்’ (சேவா: சிக் விஸ்டம் ஃபார் லிவிங் வெல் பை டூயிங் குட்) என்ற பெயரில் ஆங்கில நூலை எழுதிய ஜஸ்ரீன் மயல் கண்ணா என்ற எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

பொற்கோயிலில் சேவை மேற்கொள்வதைப் போலவே உலகெங்கும் வாழும் சீக்கியர்கள் அங்குள்ள குருத்வாராக்களில் சேவை செய்கின்றனர்

“சேவையின் மற்றொரு பெயர் என்னவென்றால் அது தான் அன்பு,” என்கிறார் 23 வயதான அபிநந்தன் சௌத்ரி. இவர் தமது எட்டு வயதில் தொடங்கி, குடுபத்தினருடன் இணைந்து இது போன்ற சேவைகளை அளித்து வருகிறார்.

“ஒரு பொதுவான உபதேசம் என்னவென்றால், முழுக்க முழுக்க தன்னலமற்ற ஒரு சேவையை நீங்கள் பிறருக்கு அளிக்கவேண்டும். உங்களுடைய சேவை உங்களைப் பெருமைப்படுத்திக்கொள்வதற்காக இருக்கக்கூடாது. நீங்கள் அளிக்கும் சேவைகளை யாரும் அறியவேண்டும் என்பதற்காக செய்யாதீர்கள்,” என்பதே ஆகும்.

சீக்கிய மதத்தில் உள்ள பெருந்தன்மையை உலகம் முழுவதும் நம்மால் பார்க்கமுடியும். கொரோனா பாதிப்பின் உச்சகட்டத்தின் போது, இங்கிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் சீக்கிய தன்னார்வலர்கள் தினமும் ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு உணவளித்தனர்.

இதே போல் அமெரிக்கவிலும் நாடு முழுவதும் சீக்கியர்கள் தினமும் உணவு சமைத்து ஏராளமான பொதுமக்களுக்கு இலவசமாக அளித்தனர்.

ஒரு பிரச்சினை ஏற்படும் போது, அவசர காலத்தில்- அது கனடாவில் புயல் பாதிப்பு ஏற்பட்ட போதோ அல்லது நியூசிலாந்து மக்கள் புயல் மற்றும் பலத்த மழை பாதிப்புக்கு உள்ளான போதோ, சீக்கியர்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி பிறருக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

உலகிலேயே மிகப்பெரிய சமூக சமையல் கூடம்

ஆனால் சீக்கிய மதத்தின் இதயம் போன்ற அமிர்தசரஸ் நகரில் மேலும் சிறப்பான முறையில் இந்த சேவை நிறைவேற்றப்படுகிறது. அமிர்தசரஸ் நகரில் இதுவரை உணவின்றி இரவில் தூங்கச் சென்ற நபர் யாருமே இல்லை என்பது நாடு முழுவதும் அறிந்த விஷயமாகும்.

இதற்கு ஒரே காரணம், அங்குள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் எப்போது யாருக்கு உணவு வேண்டுமென்றாலும் அப்போது அது அளிக்கப்படும்.

பொற்கோவிலில் உள்ள சமையற்கூடம் தான் உலகிலேயே மிகப்பெரிய, சேவை அடிப்படையில் செயல்படும் சமையற்கூடமாகக் கருதப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது. 24 மணிநேரமும் உணவு தேவைப்படும் எவரும், எந்த பாகுபாடும் இன்றி இங்கு வந்து உணவு உண்டு செல்லலாம்.

பசித்தவர்கள் இல்லாத நகரம்

கொரோனா பாதிப்பின் போது பல லட்சம் பேருக்கு உணவு விநியோகம் செய்த, நியூயார்க் நகரில் உள்ள மிஷலின்-ஸ்டார் உணவகத்தின் சமையல் கலைஞரான விகாஸ் கண்ணா இது பற்றி கூறுகையில், “நான் அமிர்தசரஸ் நகரில் தான் பிறந்து வளர்ந்தேன்.

அங்கு தான் எல்லோருக்கும் உணவளிக்கும் மிகப்பெரிய சமையல் கூடம் உள்ளது. அந்த நகரில் வாழும் அனைவரும் அங்கே உணவு உட்கொள்ள முடியும்.

நான் நியூயார்க்கில் உணவின்றித் தவித்த போது எனக்கு ஏற்பட்ட மனநிலையே பசிக்கொடுமையை எனக்கு உணர்த்தியது.”

எல்லா குருத்வாராக்களைப் போலவே பொற்கோயிலும் தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பசித்தோருக்கு சுவையான உணவு அளித்துக்கொண்டு அமைதியாக ஒரு பெரும் சேவையைச் செய்துவருகிறது.

சப்பாத்தி, பருப்பு வகைகள், கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகள் சுவையுடன் அளிக்கப்படுகின்றன. உணவு அருந்துவதற்கான ஒவ்வொரு அறையிலும் சுமார் 200 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட முடியும்.

அனைவரும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வழக்கம் அங்கே காணப்படுகிறது. ஏராளமான ஆண்களும், பெண்களும், வயதானவர்களும், ஏழை மற்றும் வசதிபடைத்தவர்களும் அங்கே உணவு அருந்துகின்றனர்.

ஒரு சிலருக்கு அதிக உணவு தேவைப்பட்டாலும் அவர்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் உணவு அருந்தும் அறைகள் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த தூய்மைப் பணி என்பது ஆண்டு முழுவதும் எந்த விடுமுறையும் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து இடங்களிலும் காணப்படும் பெருந்தன்மை

பொற்கோவிலில் இருந்து சாதாரண தெருக்கள் வரை நட்புணர்வுடன் பெருந்தன்மை மிக்க உதவி என்பது எப்போதும் எல்லோருக்கும் கிடைக்கும் உதவியாகவே உள்ளது.

நாங்கள் அங்கே சென்ற போது, அங்கே இருந்த ஒவ்வொருவரும் தாமாகவே சிரித்த முகத்துடன் முன்வந்து, எங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா எனக்கேட்டனர்.

இது போன்ற ஒரு நிலையை எங்கும் பார்த்ததில்லை என்பதால் நாங்கள் மட்டுமே ஒரு குழப்ப மனநிலையுடன் அங்கே ஒவ்வொரு இடத்துக்கும் சென்றுகொண்டிருந்தோம்.

மிகச் சில இடங்களில் தான், எங்களுடைய பைகள் மற்றும் உடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு சிலர் அறிவுறுத்தினர்.

மிகவும் புகழ்பெற்ற கேசர் டா தாபா என்ற ஒரு உணவகத்தில் எப்போதும் நீண்ட நேரம் காத்திருந்தால் மட்டுமே உணவு உண்ண முடியும்.

அங்கே உணவருந்திக் கொண்டிருந்த நபர்கள் கூட, அவர்கள் நெருங்கி அமர்ந்துகொண்டும் முகத்தில் புன்னகையுடன் பிறருக்கு இடமளித்த விதம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது.

“அமிர்தசரஸ் நகரில் வளர்ந்தது, ஒரு மிகப்பெரும் சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்த அனுபவத்தை அளித்தது,” என அங்கே பிறந்து வாழ்ந்த ராஹத் ஷர்மா என்பவர் கூறினார்.

“நான் சிறுவயதில் இருந்த போது பொற்கோவிலில் சேவை அளித்துக் கொண்டிருந்ததும், அங்கே கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய அனுபவமும் எனக்கு இருக்கிறது. அங்கே சீக்கியர்களும், இந்துக்களும் இணைந்து இது போல் சேவைப் பணிகளை மேற்கொண்டோம்.

எங்களைப் பொறுத்தளவில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்தே வெகு அமைதியாக அமிர்தசரஸ் நகரில் வசித்து வருகிறோம்.”

அமிர்தசரஸ் நகரம் 16-ம் நூற்றாண்டில் ஒரு சீக்கிய மதகுருவால், சீக்கியர்களின் புனிதத் தலமாக நிர்மானிக்கப்பட்டது.

அமிர்தசரஸ் நகரம் எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு புனிதமான நகராக கருதப்படுகிறதோ, அந்த அளவுக்கு அந்த நகரம் ஒரு வலிமையான நகரமாகவும் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அது ஒரு மிகச்சிறந்த வாழிடமாகவே உணரப்படுகிறது. அங்கே சாதாரணமாகக் காணப்படும் உணவகங்களில் கிடைக்கும் ரொட்டிகள், கொண்டைக் கடலை சுண்டல், அரிசி மாவு போன்றவை பாரம்பரியம் மிக்க மண் சட்டிகளில் வைத்து வழங்கப்படுகின்றன. அவற்றுடன் வழங்கப்படும் மோர் போன்ற உணவுகள் மிகவும் சுவையான உணவாக இருக்கும்.

பருப்பு, சப்பாத்தி, பருப்பு கறி மற்றும் தயிர் அடங்கிய உணவு அனைவருக்கும் ஸ்டீல் தட்டுகளில் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. சிலர் கூடுதல் உணவை கேட்பார்கள். சிலர், தட்டில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள்.

அமிர்தசரஸ் நகருக்கு இப்படி மகத்தான பல பெருமைகள் இருந்தாலும், சீக்கியர்களின் சுய கருத்து மற்றும் இயக்கவியல் வலுப்பெற்ற காலம் என்ற ஒரு சமகால வரலாறும் உண்டு.

பஞ்சாபின் இரண்டாவது பெரிய நகரமான, அமிர்தசரஸில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் அடிக்கடி நடந்திருக்கின்றன. 1919 ஆம் ஆண்டில், நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையும் இந்நகரில் தான் நடந்துள்ளது. இந்த படுகொலைச் சம்பவத்தின் போது சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 1947 இல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு அவசரமாக வெளியேறியபோது, ​​​​புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய எல்லைக்கு அருகே இந்நகரம் இருந்ததால் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகள் இந்நகரை வெகுவாகப் பாதித்தன. (இதன் நினைவாக, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பிரிவினை அருங்காட்சியகம் அமிர்தசரஸில் 2017 இல் திறக்கப்பட்டது.)

1984ல் அமிர்தசரஸ் மீண்டும் ஒரு சோகத்தைச் சுமக்கும் நகராக மாறியது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி பிரிவினைவாதிகளைக் கைது செய்ய முயன்றதன் தாக்கம் இன்றும் எதிரொலிக்கிறது. இந்திரா காந்தியின் இந்நடவடிக்கையின் காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
பசித்தவர்கள் இல்லாத நகரம்

நல்லவற்றைச் செய்யவேண்டும் என்பதையும், பிறருக்கு உதவ வேண்டும் என்பதையும் உலகுக்கு உணர்த்துவதில் சீக்கிய மதம் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது

இது போன்ற சம்பவங்களின் நினைவலைகளைப் பாதுகாத்து வைப்பது சீக்கியர்களுக்கு மிகமுக்கிய பணியாக உள்ளது. சீக்கிய தியாகிகள் பற்றிய கதைகள் அவர்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளன. இறைவழிபாட்டின் போது கூட அவை நினைவுகூரப்படுகின்றன. குருத்வாராக்கள் தினமும் திறக்கப்படும் போது பாடப்படும் பாடல்களிலும் இது போன்ற கதைகள் இடம்பெறுகின்றன. “ஆனால் இந்த கதைகள் பழிவாங்கும் நோக்கிலோ, பிறர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கிலோ மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கதைகள் அல்ல. மாறாக, எங்களைக் காத்தவர்களை அவர்களின் மறைவுக்குப் பின்னும் போற்றவேண்டும் என்பதே இதன் நோக்கம்,” என்கிறார் கண்ணா.

 

அதனால் தான் இந்த சமூகம் பல பேரதிர்ச்சிகளை எதிர்கொண்ட போதிலும், எதையும் தாங்கிக் கொண்டு வாழும் ஒரு சமூகமாக எப்போதும் போல் சேவையை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறது.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக், சேவையை சீக்கியர்களின் ஒரு வழிபாட்டு முறையாக ஆக்கினார்.

இதன் காரணமாகவே சீக்கியர்கள் தங்கள் குருக்களின் சொற்கள் மற்றும் செயல்களால் ஈர்க்கப்பட்டு தன்னலமின்மையை தங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய அங்கமாக மாற்றிக் கொள்கின்றனர்.”

சீக்கியர்களின் பாரம்பரியமாகத் தொடரும் சேவை மனப்பான்மை தான் எந்த ஒரு பாகுபாடுமில்லாமல் எந்த மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்களிடமும் ஒரு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள அவர்களை பக்குவப்படுத்துகிறது.

அமிர்தசரஸைப் பொறுத்தளவில் அந்நகருக்கு நன்மைகள் ஏற்பட்டாலும், தீமைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து மனிதர்களிடத்தில் மிகுந்த பெருந்தன்மையுடனும், அன்புடனும் பழகுவது எப்போதும் தொடரும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

Share.
Leave A Reply