அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சுகாதார அபிவிருத்தி மற்றும் நலனோம்பு அமைப்பான ‘அமெரிக்கெயார்ஸ்’, 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

வொஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத்தூதரகத்தின் கோரிக்கைக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள இந்த உதவியில் பக்றீரியா தொற்றைக் குணப்படுத்துவதற்கு அவசியமான அமொக்ஸிலின், ஒவ்வாமை மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான மருந்து என்பன உள்ளடங்கலாக உடனடித்தேவையென சுகாதார அமைச்சினால் கோரப்பட்டிருந்த மருந்துகள் உள்ளடங்குகின்றன.

இந்நன்கொடை உதவி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க, ‘அமெரிக்கெயார்ஸ் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நன்றி கூறுகின்றோம். இந்த மருந்துகள் இலங்கை மக்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கெயார்ஸ் என்ற நலனோம்பு அமைப்பானது இலங்கைக்கு நீண்டகாலமாக மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், நிவாரணப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply