குமார் சுகுணா

உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ள ரஷ்யா – உக்ரைன் போரில் அணு ஆயுத பலம் கொண்ட வட கொரியா ரஷ்யாவுடன் கைகோர்ப்பதாக தெரிவித்துள்ளமை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வருகின்ற போர் ஒரு வருடத்தை தாண்டிவிட்டது. ஆனால், அதன் உக்கிரம் இன்னும் குறையவில்லை.

அண்மையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உக்ரைன் நாட்டின் மிக பெரிய அணை உடைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிர்கதியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதோடு இராணுவ, பொருளாதார உதவிகளை செய்துவருகின்றன.

இதனால் இந்தப் போர் தொடர்ந்து நீடித்துவருகிறது. சீனா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளன.

இந்நிலையில், உலகை அணு ஆயுதத்தினால் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பல மர்மங்கள் நிறைந்த நாடான வடகொரியா ரஷ்யாவுக்கு ஆதரவாக தற்போது களம் இறங்கியுள்ளது.

ரஷ்யா சமீபகாலமாக உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரமாக்கியிருக்கிறது. இந்த நிலையில், புடினுடன் கைகோர்ப்பதாக வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

‘உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முடிவுக்கு முழு ஆதரவு தருவதோடு, முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

நீதி வெற்றி பெறுவது உறுதி. ரஷ்ய மக்கள் வெற்றி வரலாற்றில் தொடர்ந்து பெருமை சேர்ப்பார்கள்.

ஒரு சக்திவாய்ந்த நாட்டை கட்டியெழுப்பும் பெரும் இலக்கை நிறைவேற்ற இரு நாட்டு மக்களின் பொதுவான விருப்பத்துக்கு இணங்க, ரஷ்ய ஜனாதிபதியுடன் கைகோர்க்கிறேன். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவுக்கு எங்கள் நாட்டின் முழு ஆதரவை வழங்குவோம்.

வடகொரிய மக்கள், ஏகாதிபத்தியம் மற்றும் தன்னிச்சையான தன்மைக்கு எதிராக தங்கள் நாட்டின் இறையாண்மை, உரிமைகள், வளர்ச்சி, நலன்களை பாதுகாப்பதற்கான புனித நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அதை செயல்படுத்துவதற்கான அவர்களின் முழுப் போராட்டத்தின் வழியாக ரஷ்ய மக்களுடன் ஒற்றுமையாக இருந்து, அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் கரம்கோர்ப்பதாகவும், நாட்டை சக்தி வாய்ந்ததாக்கும் இலக்குக்காக திட்டமிட்ட செயலாக்கத்துக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தேசிய தினத்தை முன்னிட்டு புடினுக்கு கிம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அந்த செய்தியில், உக்ரைன் மீது படையெடுப்பதற்கான புடினின் முடிவுக்கு வட கொரியா துணை நிற்பதாகவும், ரஷ்யாவுக்கு முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கிம் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதேச்சதிகார மற்றும் மேலாதிக்க கொள்கைகளை குற்றஞ்சாட்டியுள்ள வட கொரியா, கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்த பின்னரும் அந்நாட்டை ஆதரித்து நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த முயற்சித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்யா தனது அண்டைய நாடான உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்கி, முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்தது.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனை ஆதரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ரஷ்யாவுக்கு ஆதரவளித்திருப்பது உலக அரங்கில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், உலகமே ஒரு பக்கம் சென்றால் வட கொரியா மறுபக்கம் செல்லும் நாடாகவே உள்ளது.

அந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு புதிராகவே உலகுக்கு விளங்குகிறார். அணுஆயுதம் தொடர்பில் உலகமே அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி செய்து பார்ப்பதையும் ஏவுகணைகளை உருவாக்கி பரிசோதனை செய்வதையும் வட கொரியா வழமையாக கொண்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களம் இறங்குமாயின், அணு ஆயுதங்களை கூட போரில் பயன்படுத்த வழி ஏற்படுத்தக்கூடும். இது மிகப் பெரிய அழிவுக்கு உலகையே இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

-குமார் சுகுணா

Share.
Leave A Reply