மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
அவரது தாய் அந்த சிறுமியை வளர்க்க முன்வரவில்லை. இதனால் செல்லூரில் உள்ள தந்தை வழி பாட்டி பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார்.
அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு அங்கு வந்த அவரது தாய் தனது மகளை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
இதற்காக தினந்தோறும் இரவு சிறுமிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதன்பின் சில காமுகர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் உடலிலும் சிகரெட் சூடு வைத்ததாகவும் தெரிகிறது.
பாலியல் பலாத்காரத்தில் மகள் கருவுறாமல் இருப்பதற்காக தாய் மாத்திரைகளையும் கொடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளான அந்த சிறுமி தனது தாயிடம் இருந்து தப்பி பாட்டியிடம் வந்து சேர்ந்தார்.
அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி உடனே போலீசில் புகார் செய்ய திட்டமிட்டார்.
இதையறிந்த விபசார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவன் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட்வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.
ஆனால் சிறுமியின் பாட்டி இந்த விவகாரம் தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 13 வயது சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது உண்மை என தெரியவந்தது.
அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெற்ற மகளையே பணத்துக்காக தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.