போருக்கு முன்பு ரஷ்யா தரப்பில் திட்டமிட்டவர்கள், நேச நாடுகள் தங்கள் போர்த் தளவாடங்களையும் பிற உதவிகளையும் எந்தத் தடத்தில் ரஷ்யாவுக்கு அனுப்புவார்கள் என்பதில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.

ஆகஸ்ட் 4, 1914 அன்று வெள்ளை நூல் (White Book) ஒன்றை வெளியிட்டது ஜெர்மனி. அது 36 ஆவணங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அடுத்த ஒரே வாரத்துக்குள் போரில் பங்கேற்ற பல நாடுகளும் ‘​வண்ண நூல்களை’ வெளியிடத் தொடங்​கின. பிரிட்டன் அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் நீல ​நூல் ஒன்றை வெளியிட்டது. தொடர்ந்து ரஷ்யா (Russian Empire) ஆரஞ்சு நூல் ஒன்றை வெளியிட்டது. பிரான்ஸ் மஞ்சள் ​நூல் ஒன்றையும், பெல்ஜியம் சாம்பல் புத்தகம் ஒன்றையும் செர்பியா ​நீல நூல் ஒன்றையும் வெளியிட்டன.

நெடுங்காலமாகவே பிரிட்டன் நீலப் புத்தகங்களை அவ்வப்போது வெளியிட்டதுண்டு. இந்த ஆவணங்கள் அடங்கிய ​நூலின் அட்டை நீல வண்ணத்திலிருந்ததால் அதன் பெயர் நீலப் புத்தகம். தங்களை வேறுபடுத்திக் காட்டப் பிற நாடுகள் வெவ்வேறு வண்ணங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன.

அது சரி, எதற்காக வெவ்வேறு வண்ணங்களின் பெயர்களைக் கொண்ட நூல்களை இந்த நாடுகள் அடுத்தடுத்து வெளியிட வேண்டும்? அதுவும் முதலாம் உலகப் போர் தொடங்கிய கையோடு?

ஒவ்வொரு நூலும் அந்த அரசின் தன்னிலை விளக்கம் – அதாவது போரில் தான் பங்கு கொள்வதற்கான நியாயங்களை இதில் பட்டியலிட்டன அந்த நாடுகள். இவற்றில் சில நாடுகளுக்கு இடையே பரிமாறப்பட்ட சில கடிதங்கள் கூட வெளியிடப்பட்டன. இந்த ​நூல்கள் எதிரி நாடுகளின்மீது அதிகபட்ச குற்றச்சாட்டுகளை முன் வைத்தன. வேறு வழியில்லாமல்தான் போரில் கலந்துகொள்வதாகவும் அது முற்றிலும் நியாயம்தான் என்றும் இந்தப் புத்தகங்கள் குரல் கொடுத்தன.

முதலாம் Ypres போர் குறித்துப் பார்த்தோம். அதற்குச் சற்று முன்பும் அதே சமயமும் நடைபெற்ற பிற நிகழ்வுகளையும் பார்ப்போம்.

போரில் ஜெர்மனியை வெல்ல ரஷ்யா (Russian Empire), பிரான்ஸைப் பெரிதும் நம்பி இருந்தது. அந்தப் புறத்தில் பிரான்ஸ், இந்தப் புறத்தில் நாம் என்று இருதரப்பிலும் மத்தளம் போல நெருக்கடி வந்தால், நடுவில் உள்ள ஜெர்மனி நிலை குலைந்து விடும் என்று ரஷ்யா நம்பியது.

பிரான்ஸ் நாட்டின் அப்போதைய தூதர் மெளரிஸ் பாலியோலோக் (Maurice Paléologue) ஜெர்மனியை மிகவும் வெறுத்தவர். இவர்தான் தொடக்கக் கட்டத்திலேயே ஜெர்மனிக்கு எதிராக ரஷ்யாவைக் கொம்பு சீவிவிட்டவர் என்பவர்கள் உண்டு. பிரான்சும் நிபந்தனையற்ற ஆதரவை ரஷ்யாவுக்கு அளித்தது.

போருக்கு முன்பு ரஷ்யா தரப்பில் திட்டமிட்டவர்கள் ஒரு முக்கியமான விவரத்தில் கோட்டை விட்டார்கள். நேச நாடுகள் தங்கள் போர்த் தளவாடங்களையும் பிற உதவிகளையும் எந்தத் தடத்தில் ரஷ்யாவுக்கு அனுப்புவார்கள் என்பதில் போதிய கவனம் இல்லாமல் இருந்துவிட்டார்கள்.

பின்னர் பால்டிக் கடலில் இவை நுழைய விடாமல் ஜெர்மானிய போர் கப்பல்கள் தடுத்து விட்டன. துருக்கியின் ஜலசந்தி மூலமாகவும் இவற்றை அணுக முடியவில்லை (போரில் துருக்கி நுழைந்த விவரத்தை அடுத்த பகுதியில் காண்போம்).

தூதர் மெளரிஸ் பாலியோலோக் (Maurice Paléologue)

தனது நகரமான அர்ச்ஏன்ஜல் (Archangel) என்பதன் வழியாக மட்டும்தான் இந்த உதவிகளைப் போரின்போது ரஷ்யாவால் பெற முடிந்தது. ஆனால் குளிர்காலத்தில் இந்த நகரம் பனியால் மூடப்பட்டிருந்தது. எனவே நேச நாடுகளிடமிருந்து போர்த் தளவாடங்களைப் பெற முடியவில்லை.

எனவே விளாடிவோஸ்டோக் நகரம் வழியாகத்தான் இவற்றைப் பெற வேண்டிய சூழல். ஆனால் இது போர்முனையிலிருந்து 6400 கிலோமீட்டர் தள்ளி இருந்ததால் பல சிக்கல்கள். (பின்னர் ஒரு வழியாக 1915இல் ஒரு புதிய ரயில் தடம் முர்மான்ஸ்க் என்ற துறைமுகத்தை நோக்கி நிறுவப்பட்டது. அந்தத் துறைமுகம் எந்தக் காலத்திலும் பனியால் மூடப்பட்டிருக்காது. ஆனால் இந்த ரயில் தடம் உருவாக இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன).

ரஷ்ய ராணுவத்தின் தலைமையை ஏற்றிருந்தவர் கிராண்ட் ட்யூக் நிகோலஸ் என்பவர். பிரான்ஸ் மீது ஜெர்மனி மேற்கொண்ட படையெடுப்பை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டார் இவர். எனவே, ப்ரஷ்யாவின் (இப்போதைய வடக்கு ஜெர்மனியில் உள்ள முன்னாள் மாநிலம் இது. மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்கியது. இதன் தலைமையில்தான் ஜெர்மானிய சாம்ராஜ்யம் விரிவடைந்தது) கிழக்குப்பகுதியை ரஷ்ய ராணுவம் முற்றுகை இட்டது.

ஆனால் ஜெர்மனியர்கள் திறம்படச் செயல்பட்டு இரண்டு ரஷ்ய ராணுவப் பிரிவுகளையும் தோற்கடித்தார்கள். சொல்லப்போனால் டானென்பெர்க் (Tannenberg) என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவம் சின்னாபின்னம் ஆக்கப்பட்டது. ஒரு விதத்தில் ரஷ்யச் சாம்ராஜ்யத்தின் வருங்காலமே கேள்விக்குறியானது எனலாம். காரணம் ரஷ்யச் சாம்ராஜ்யத்தின் முக்கிய பாதுகாவலர்கள் என்று கருதப்பட்ட நம்பிக்கைக்குரிய பல அதிகாரிகள் அந்த போரில் இறந்துவிட்டனர்.

டானென்பெர்க் போரில் மடிந்த ரஷ்யர்கள்

அதே சமயம் ஜெர்மனி ராணுவத்தின் மற்றொரு பிரிவு பிரான்ஸிலும் கால் பதித்தபோது அது இருதரப்புக்கும் வெற்றி இல்லை எனும் சூழலையே உருவாகியது. பிரான்ஸுக்கு உதவியாக பிரிட்டனின் படைகளும் வந்திருந்தன. எதிரிகளின் படையை ஜெர்மன் ராணுவத்தால் விரட்டி அடிக்க முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை. என்றாலும் நல்லதொரு தற்காப்பு நிலையிலிருந்தது ஜெர்மானிய ராணுவம்.

ஆனால் அப்போது வேறொரு சங்கடம். ஜெர்மன் ராணுவம் மிகவும் உட்பகுதிக்குச் சென்றுவிட்டதால் அவர்களுக்குத் தேவைப்பட்ட உணவும் ஆயுதங்களும் குறித்த நேரத்தில் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

வடகிழக்கு பிரான்ஸின் கணிசமான பகுதி ஜெர்மானியர்கள் வசம் வந்துவிட்டது. இந்தப் பகுதியில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாதுக்கள் அதிகமாக இருந்தன. பல தொழிற்சாலைகளும் இங்கு இருந்தன. மூன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தப்பகுதி ஜெர்மனி வசம் இருந்தது.

அதே சமயம் பெல்ஜியம் ஜெர்மனியின் எதிர்ப்பைத் தீவிரமாகத் தடுத்து வந்தது. ஒரு கட்டம் வரை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ராணுவமும் இதற்கு உதவி செய்தன. பின்னர் இந்த ராணுவங்கள் தங்கள் உதவியை நிறுத்திக்கொள்ள ஆன்ட்வேர்ப் பகுதி ஜெர்மனியின் வசம் வந்தது.

மார்னே முதல் போர் (The First Battle of the Marne) – பிரெஞ்சு படை வீரர்கள்

1914 செப்டம்பர் 6 முதல் 9ம் தேதி ​வரை நடைபெற்றது மார்னே முதல் போர் (The First Battle of the Marne). அது வடகிழக்கு பிரான்சில் ஆழமாக ஊடுருவியது. பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள், படையெடுக்கும் ஜெர்மனி ராணுவத்தை எதிர்கொண்டன. நேச நாட்டுத் துருப்புக்கள் ஜெர்மனியின் முன்னேற்றத்தைத் தடுத்தன. வெற்றிகரமான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டன. ஜெர்மானியப் படை ஐஸ்னே ஆற்றின் வடக்கே திருப்பிச் சென்றது.

பிரான்ஸின் மார்னே ஆற்றங்கரையில் நடைபெற்ற இந்தப் போரில் பிரிட்டன் தரப்பில் 13,000 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் தரப்பில் இரண்டரை லட்சம் பேரும் ஜெர்மனி தரப்பில் இரண்டரை லட்சம் பேரும் இறந்தனர்.

– போர் மூளும்…

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்

Share.
Leave A Reply