நீங்கள் இந்த தலைப்பைப் படித்ததுமே ‘அது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வி உங்கள் மனதில் இயல்பாகவே எழும். அப்படியென்றால் அனைவருமே ஒரு வயது இளமையாகப் போகிறார்களா என்ற சந்தேகமும் எழக் கூடும்.

உண்மை என்னவென்றால், தென்கொரியர்கள் அனைவரும் இளமையாகப் போவதில்லை, வயது என்ற எண்ணிக்கையில் மட்டும் ஒன்றை குறைத்துக் கொள்ளப் போகிறார்கள். அந்த நாட்டில் வயதைக் கணக்கிடும் பாரம்பரிய முறையைக் கைவிட்டு சர்வதேச கணக்கீட்டிற்கு மாறுவதே இதற்குக் காரணம்.

இதற்காக தென்கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையும். இந்த சட்டம், தென்கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச நடைமுறையை ஏற்க வழிவகை செய்கிறது.

தென்கொரியாவில் தற்போதுள்ள பாரம்பரிய வயது கணக்கீடு நடைமுறைகளில் ஒன்றின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போதே ஒரு வயதாகிவிடுகிறது. அதாவது, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே இந்த வயது கணக்கீடு தொடங்கிவிடுகிறது.

மற்றொரு நடைமுறையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி அனைவருக்கும் ஒரு வயது கூடி விடுகிறது. இந்த வயது கணக்கீடு ஒருவரின் பிறந்த நாளை கணக்கில் கொள்ளாது, ஜனவரி ஒன்றாம் தேதியானாலே அனைவருக்கும் ஒரு வயதை கூட்டிவிடுகிறது. இதன்படி, ஜனவரியில் பிறந்தவருக்கும், டிசம்பர் மாதம் பிறந்தவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு வயதைக் கூட்டிவிடுகிறது.

இந்த முரண்பாடுகளையும், சர்வதேச அளவில் பயன்படுத்தும் போது ஏற்படும் குழப்பங்களையும் தவிர்க்கவே புதிய சட்டத்தை தென்கொரியா கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச நடைமுறை தென்கொரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிபர் யூன் சுக்-யோல், கடந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போதே இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டினார். பாரம்பரிய வயது கணக்கீடு நடைமுறைகள் தேவையற்ற சமூக, பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகிறது என்பது அவரது கருத்து.

உதாரணமாக, காப்பீட்டுத் தொகையைப் பெறுவதிலும், அரசு உதவித் திட்டங்களை பெறுவதற்கான தகுதிகளை நிர்ணயிப்பதிலும் பிரச்னைகள் எழுகின்றன.

முன்னதாக, கொரியாவில் நூற்றாண்டுகள் பழமையான கொரியன் வயது கணக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு வயதை எட்டிவிடுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி பிறக்கும் போது ஒரு வயது கூடிவிடும். அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி பிறக்கும் குழந்தை அடுத்த நாளே 2 வயதை எட்டிவிடும்.

அங்குள்ள மற்றொரு வயது கணக்கீடு முறையின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போது வயது 0, அடுத்து வரும் ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் ஒரு வயது கூடும்.

உதாரணமாக, 2003-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி பிறந்த ஒருவர் சர்வதேச நடைமுறையின் படி 2023-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி 19 வயதை எட்டுகிறார். சர்வதேச நடைமுறையில் அவர் 20 வயதுக்குட்பட்டவராக இருக்கிறார். ஆனால், கொரியன் வயது கணக்கீட்டில் அவர் 21 வயதானவர் ஆகிவிடுகிறார் .

2022-ம் ஆண்டு ஜனவரியில் ஹான்கூக் நிறுவனம் நடத்திய ஆய்வில், தென் கொரியாவில் நான்கில் மூன்று பங்கு மக்கள், அரசின் வயது கணக்கீடு ஒழுங்குபடுத்தலை ஆதரிக்கின்றனர்.

பாரம்பரிய வயது கணக்கீடு முறையைக் கைவிட வேண்டும் என்பதை கடந்த டிசம்பர் மாதம் தென்கொரிய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.

சர்வதேச வயது கணக்கீடு நடைமுறைக்கு வந்தாலும் கூட, காலண்டர் அடிப்படையிலான வயது கணக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு சிலவற்றை அனுமதிக்கும் தற்போதைய சட்டங்கள் அப்படியே தொடரும்.

உதாரணமாக, தென்கொரியர்கள் ஜனவரி ஒன்றாம் தேதி அடிப்படையில் 19 வயதை எட்டினாலே சிகரெட், மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம். பிறந்த நாள் அடிப்படையில் இந்த வயதை எட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பாரம்பரிய வயது கணக்கீடு முறைகள் பிற கிழக்கு ஆசிய நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன. ஆனால், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அவை கைவிடப்பட்டன.

சர்வதேச வயது கணக்கீடு நடைமுறையை ஜப்பான் 1950-ம் ஆண்டும், வட கொரியா 1980-களிலும் ஏற்றுக் கொண்டன.

Share.
Leave A Reply