அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என யுக்ரேன் கருதுகிறது.

யுக்ரேன் தலைநகரின் கவனம் முழுவதும் வாக்னர் படைகள், அதன் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின், வாக்னர் கிளர்ச்சியினால் புதின் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் ஆகியவற்றின் மீது குவிந்திருக்கிறது.

ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதிபர் புதினின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என கீயவ் கருதுகிறது.

“அவரது நாட்கள் எண்ணப்படுவதாகவே நான் கருதுகிறேன்,” என யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் ஆண்ட்ரி யெமாக் கூறுகிறார்.

கீயவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு கிரைமிய தீபகற்பத்தை தன்னகப்படுத்துவதற்காக ரஷ்யா முதன்முதலாக யுக்ரேன் நாட்டை ஆக்கிரமித்ததை நினைவுகூர்ந்தார்.

“2014ம் ஆண்டு யுக்ரேன் எப்படிப்பட்ட பிரச்னைகளை எதிர்கொண்டது என்பது உலகறிந்த விஷயம்,” என்றார் யெமாக்.

“அது ஒரு தீவிரவாத நாடு. அந்நாட்டின் அதிபர் உண்மைகளை உணர்ந்து கொள்ளாதவர் மட்டுமல்ல, போதுமான நிர்வாகத் திறன்கள் இல்லாத நபராக இருக்கிறார். அந்த நாட்டுடன் எந்த வகையிலும் உறவுகளை வைத்துக்கொள்ளக் கூடாது என உலக நாடுகள் முடிவெடுக்கவேண்டும்.”

கீவ் நகரில் பிபிசியிடம் பேசிய யுக்ரேன் நாட்டின் மூத்த அதிகாரிகள் அனைவரும் ரஷ்ய அதிபர் புதினின் அதிகாரம் படுமோசமாக முடிவுக்கு வருதை அவர் தடுக்கமுடியாது என கருத்து தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் யுக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கிய நிலையில், இப்போது அவருக்கான முடிவு காலம் தொடங்கிவிட்டது என அவர்கள் தெரிவித்தனர்.

வாக்னர் கிளர்ச்சியும், யுக்ரேன் மீதான போரை நியாயப்படுத்தும் ரஷ்ய அரசுக்கு அந்த அமைப்பின் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் அதிபர் புதின் அப்பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன என அவர்கள் கூறினர்.

“புதினின் ஆட்சி அதிகாரங்களைக் காப்பாற்ற முடியாது,” என அவர்களில் ஒருவர் வலியுறுத்திக் கூறினார்.

ரஷ்ய அதிபரின் ஆட்சி அதிகாரங்கள் குறித்து யுக்ரேன் நாட்டில் யார் விமர்சித்தாலும், குறிப்பாக ஆட்சி அதிகாரங்களில் இருக்கும் தலைவர்கள் விமர்சிக்கும் போது, அந்நாட்டில் கூலிப்படையினர் கலகத்தில் ஈடுபட்ட நிலையில், அதிபர் புதினின் அதிகாரங்கள் முடிவுக்கு வரும் என்பதை மையப்படுத்தியே பேசுகின்றனர்.

தற்போதைய நிலையில் யுக்ரேன் ஆட்சியாளர்கள் ஒரு புத்திசாலித்தனமான ஊடகப் போரில் ஈடுபட்டுள்ளனர். அதன் மூலம் ரஷ்ய போர் முடிவுக்கு வருவது குறித்து ஒரு திடமான நம்பிக்கையை உள்நாட்டிலும், உலக நாடுகளிடத்திலும் மட்டுமல்லாமல் ரஷ்யாவில் உள்ள எதிரிகளிடையேயும் விதைத்து வருகின்றனர்.

அவர்கள் ஊடகத்தினரிடம் பேசும் போது வேண்டுமென்றே அவர்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்திவருகின்றனர்.

கலகம் மட்டுமே ஆட்சியை அகற்றிவிட முடியுமா?

ரஷ்யாவில் கூலிப்படையினர் கலகத்தில் ஈடுபட்டது மட்டுமே அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவது அவர்களுக்கு சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் புதின் 2000-ம் ஆண்டு அப்பதவிக்கு வந்த பின் இதுவரை இல்லாத அளவுக்கு சவால்களை எதிர்கொண்டுவருகிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அவரது உள்நாட்டு எதிரிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள அரசியல் தீவிரத்தன்மை அவருக்கு பாதகமான நிலையையே ஏற்படுத்தும் என கீவ் நகரில் இருக்கும் வேறு சில முக்கியத் தலைவர்கள் தெரிவித்தனர்.

“ப்ரிகோஜின் ஒரு மூத்த நபராக இல்லாவிட்டாலும், முக்கிய நபராக ரஷ்ய அரசியலில் விளங்குகிறார்,” என யுக்ரேன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்சி டமிலோவ் தெரிவித்தார்.

யுக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழு அளவில் போர் தொடுத்தது தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் பேரழிவு என்பது மட்டுமல்லாமல் அது ரஷ்யாவுக்கு வெளியில் இருந்து அச்சத்தையும், ஆபத்தையும் வரவழைக்கும் விதத்தில் இருப்பதாக வாக்னர் உள்ளிட்ட தன்னலக்குழுக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் கருதுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க, ராணுவச் சீருடையைப் போன்ற ஆடைகளுடன், அவரது பெயருடன் கூடிய பேட்ஜ் ஒன்றை மார்பில் அணிந்து கொண்டிருந்த அவரது கருத்துக்களுக்கு ஆதரவாக ஏதாவது ஆதாரங்களை இருக்கின்றனவா என நான் கேட்டபோது, டமிலோவ் கோபப்பட்டதை உணர முடிந்தது.

“நான் வெறும் ஊகங்களை மட்டும் பேசிக்கொண்டிருக்கவில்லை,” என அவர் வலியுறுத்திச் சொன்னார். “இவர்கள் யார் என்பதை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். இவர்களுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நிலைகுறித்தும் தெரிந்துவைத்திருக்கிறோம்.”

போரின் மீது ஆதிக்கம் செலுத்துமளவுக்கு வாக்னர் கலகம் நீண்ட காலம் நீடிக்கவில்லை என மஹைலோ பொடொல்யாக் தெரிவித்தார்

அதிபர் ஜெலன்ஸ்கியின் மற்றொரு நெருங்கிய ஆலோசகரான மஹைலோ பொடொல்யாக் பேசிய போது, “ரஷ்யாவில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற பல குழுக்களைச் சேர்ந்த நபர்கள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்,” என்றார்.

புதின் உருவாக்கிய சர்வாதிகார ஆட்சிமுறையின் அதிகார மையத்தில் தற்போது ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு மூத்த தலைவர் தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசிய போது, ரஷ்யாவில் பாதுகாப்பு ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் புதின் அவருடைய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கி சொய்கு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வேலரி கெராசிமோவ் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய நிர்பந்திக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கலகத்தில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையினர் மற்றும் அந்த அமைப்பின் தலைவரான எவ்கெனி ப்ரிகோஜின் கூட இவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்ய அதிபர் புதினை வலியுறுத்தியிருந்தனர்.

“எவ்கெனி ப்ரிகோஜின் என்ன விரும்பினாரோ, அது நடக்கும். அவரது அரசியல் வாழ்க்கை இன்னும் முற்றுப்பெறவில்லை. பெலாருஸ் நகரில் அவர் தொடர்ந்து வசிப்பதை விரும்ப மாட்டார்.”

1945ம் ஆண்டுக்குப் பின்னர் 1,800 கிலோ மீட்டர் நீளத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு வாக்னர் கலகம் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என பொடொல்யாக் தெரிவித்தார்.

இருப்பினும், யுக்ரோன் தொடர்ந்து மிகக் கடுமையாகப் போரிட வேண்டியிருக்கிறது என்பதும், நேட்டோ அமைப்பு அனுப்பிவைத்த வீரர்கள் மற்றும் உபகரணங்களில் இழப்புக்கள் ஏற்படுவது தொடர்ந்து நீடிக்கும் என்பதும் போரை மிகவும் ஆழமாகக் கவனிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

அண்மைக்காலங்களில் நாட்டின் கிழக்குப் பகுதியில் கிராமங்கள் உள்ளிட்ட சில பகுதிகளை லாவகமாகக் கைப்பற்றிய ஒரு ராணுவ அதிகாரி, தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார். அவரது வெற்றி குறித்து நான் கேட்டபோது, தனது கைகளை உயர்த்தி, நம்பிக்கை குறைவாக இருப்பதைப் போல் சைகை காட்டினார்.

அவர் நம்பிக்கையுடன் இருந்தாலும், பல வேதனைகளைக் கடந்து, மிக மெதுவாக ஒரு மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றமே கிடைக்கும் என்பதே அவரது செய்தியாக இருந்தது.

ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள்

கோடைகால தாக்குதல் குறித்த எதிர்பார்ப்புகளை நிர்வகிக்க மூத்த யுக்ரேனியர்கள் இன்னும் தங்களால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். யுக்ரேனின் இராணுவம் மற்றும் அதன் நேட்டோ உதவிகளைப் பற்றி அவர்களது மேற்கத்திய நட்பு நாடுகளும், ஊடக ஆதரவாளர்களும் அதிக உற்சாகமடைந்துள்ளதாக என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ரஷ்ய அதிபர் புதினின் சரிவு என்பது மேற்கத்திய தலைவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அணு ஆயுதங்களை ஏராளமாகக் குவித்து வைத்துள்ள ரஷ்யாவில் இனிமேல் ஆதிக்கம் செலுத்துபவர்களால் மேலும் ஆபத்துக்கள் நேரும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும், சில யுக்ரேன் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது குறித்து அடுத்த மாதம் லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் முக்கிய விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ உச்சி மாநாட்டின் விளைவாக ஒரு தெளிவான பாதை வகுக்கப்படும் என்றும், ரஷ்யாவுக்கு எதிராக ஒரு உறுதியான தடுப்பு அரண் அமைக்கப்படும் என்றும் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது ஆலோசகர்கள் ஆழமாக நம்புகின்றனர்.

யுக்ரேன் மீதான போரை போர்க்களத்தில் முடிவுக்குக் கொண்டுவருவதை விட, பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதே சிறந்தது என்றே நேட்டோ நாடுகள் நம்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் போர் மற்றும் வாக்னர் கலகத்துக்குப் பின் அதிபர் புதின் மற்றும் அவரது ஆட்சியைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை நேட்டோ நாடுகளின் கவலையை மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. .

Share.
Leave A Reply