‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டார்கள். அவர்களை தேடித் தருமாறு அவர்களது உறவினர்கள் போராட்டம் செய்வதில் பயனில்லை’ என கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அலட்சியமாக கூறிய வார்த்தைகளே இவை.
அதே போன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் வேறு பெயர்களில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர் என முன்னாள் கடற்படை தளபதியும் எம்.பி.யுமான சரத் வீரசேகர நாடாளுமன்றில் கூறியிருந்தார்.
காணாமல் போனோருக்கான அலுவலகமொன்று ஸ்தாபிக்கப்பட்டாலும், அதன் செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை.
மாறாக, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு இழப்பீடும் மரண சான்றிதழ்களும் வழங்கப்படும் என அரசாங்கம் இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே பார்த்தது.
எனினும், 1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போனவர்கள் ஏதாவது ஒரு வகையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அது தொடர்பான புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டும் அவை அகழப்படாமல் இருப்பதானது,
அதன் பின்னணியில் பல அரசியல் அழுத்தங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றன என்றும் நான்கு சிவில் சமூக குழுக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன.
கடந்த 22ஆம் திகதி இந்த குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் மனித புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இடம்பெறும்போது சர்வதேச பார்வையாளர்கள் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்ற விடயத்தையும் அவை வலியுறுத்தியுள்ளன.
கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற மனித புதைகுழி அகழ்தல் தொடர்பான விசாரணைகளை முன்வைத்து மேற்படி சிவில் குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இந்த செயற்பாட்டுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரதானமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.
இதன் காரணமாகவே மனித புதைகுழிகளை அகழ்வதற்கு பல முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் இந்த செயற்பாடு தோல்வியடைய இதுவே காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகளை அகழ்ந்தால், காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற விடயம் அம்பலமாகும்.
அதேவேளை, காணாமல் போன தமது உறவுகளைத் தேடி போராடி வரும் அவர்களின் உறவினர்களுக்கும் நீதி கிடைக்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘பாரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கையானது 70 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை தயார் செய்த சிவில் குழுக்களாக, உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்றிட்டம், இலங்கை ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள், காணாமல் போனோரின் குடும்பங்களின் ஒன்றியம், மனித உரிமை அபிவிருத்தி நிலையம் ஆகியன விளங்குகின்றன.
இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆராயத்தக்கன. அதேவேளை பாரதூரமானவையாகவும் உள்ளன.
மத்திய மாகாணத்தின் மாத்தளை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் 2013ஆம் ஆண்டு பாரிய மனித புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டது. அதிலிருந்து பல மனித உடல்களும் எச்சங்களும் மீட்கப்பட்டன.
இவை 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களாக இருக்கலாம் என அப்போதே சந்தேகிக்கப்பட்டன.
1989ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பாளராக இருந்தபோது மாத்தளை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.
ஆகவே இது குறித்த ஜனாதிபதி விசாரணை குழுவில் அவர் சந்தேக நபராக பெயரிடப்பட்டார் என சிவில் சமூகங்களின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மனித புதைகுழி விவகாரங்கள் சம்பந்தமாக பெயரிடப்பட்ட சந்தேக நபர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவானது இலங்கை அரசாங்கத்துக்கு இந்த வருட ஆரம்பத்தில் கடிதம் அனுப்பியிருந்தது.
ஆயினும் அது குறித்த எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளமை முக்கிய விடயம்.
மாத்தளை மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் தோட்டாக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மனித புதைகுழி விவகாரத்தை பக்கச்சார்பின்றி விசாரணைகள் செய்து வந்த நீதிபதியும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இலங்கை இராணுவத்தினதும் சில அரசியல் தலைவர்களினதும் நலன்களைப் பாதுகாப்பதற்காக இவ்வாறான விசாரணைகளை மூடி மறைக்கவோ அல்லது இல்லாமல் செய்வதற்காகவோ அரசியல் தலையீடுகள் தாராளமாக காணப்பட்டன என உறுதியாகக் கூறலாம்.
அதே போன்று 2018ஆம் ஆண்டில், மன்னார் புதைகுழிகளிலிருந்து 318 சடலங்கள் (28 குழந்தைகள் உட்பட) மீட்கப்பட்டன.
அந்த சடலங்களில் கால்களை பிணைக்க பயன்படுத்தப்படும் உலோகக் கம்பிகள் இருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், மன்னார் மனித புதைகுழி விவகாரமும் கிடப்பில் போடப்பட்டதாகவே உள்ளது.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட மனித புழைகுழி அகழ்வுகள் நிறுத்தப்பட்டமைக்கு காரணம், அப்பிரதேச முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையாகும் எனக் கூறப்படுகிறது.
எது எப்படியானாலும் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு மத்தியில், அனைவரும் மறந்துவிட்ட இந்த மனித புதைகுழி விவகாரத்தை மேற்படி சிவில் சமூக குழுக்கள் கையிலெடுத்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நெருக்கடிகள் இருக்கின்றதை மறுக்க முடியாது. ராஜபக்ஷ சகோதரர்கள் மீது மக்கள் பெருங்கோபத்தில் இருந்தாலும், போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுகள் என வந்தால் சிங்கள சமூகத்தினர் அதை வேறு விதமாகவே பார்ப்பர்.
எது எப்படியானாலும் மனித புதைகுழி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வாக்குமூலம் வழங்க வேண்டியவராகவே உள்ளார்.
சி.சி.என்