மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் தின்ண வற்புறுத்தி வன்கொடுமையில் ஈடுபட்ட குடும்பத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து கடந்த புதன்கிழமை போலீஸார் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையை துவக்கினர்.

இதுகுறித்து ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுவன்ஷ் சிங் படோரியா கூறியதாவது: ஷிவ்புரி மாவட்டம் வர்காதி கிராமத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு தலித் இளைஞர்கள், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் போனில் பேசினர்.

இதையடுத்து, அந்த குடும்பத்தினர் அந்த தலித் இளைஞர்களை கடந்த ஜூன் 30-ம் தேதி வீட்டுக்கு வரவழைத்து கொடூரமான முறையில் தாக்கியதுடன், மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

செருப்புமாலை அணிவிப்பு: மேலும், அந்த இளைஞர்களுக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம்குறித்த வீடியோ வைரலானதையடுத்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் இருந்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறைக்கு அறிவுறுத்தல் வந்தது. மேலும், குற்றம் இழைத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

Share.
Leave A Reply